வீடு வரை உறவு, கடைசி வரை யாரோ?

indian falily

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 921 தேதி 21 மார்ச் 2014.

கவிஞர் கண்ணதாசன், இந்து மதக் கருத்துக்களில் ஊறித் திளைத்தவர். அவர் பிறந்த செட்டியார் ஜாதி, கோவில்களையும், கோவில்களைப் போற்றிய பெரியோர்களையும் இரண்டு கண்களாகக் கருதிப் பாதுகாத்த ஜாதி. தெய்வத் தமிழ் தழைத்தோங்க உடல், பொருள், ஆவியைக் கொடுத்த ஜாதி. பொருளை நாடிப் பிழைத்த ஜாதியானாலும் “செம் பொருளை” மறவாத ஜாதி. தர்ம ,அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்கு புருஷார்த்தங்களில் அர்தத்துக்கும் காமத்துக்கும் (பொருள் தேடல், இன்பம் நாடல்) வரையறையாக தர்மத்தையும் மோக்ஷத்தையும் (அறம், வீடு பேறு) வைத்துக் கொண்டு வாழ்ந்த ஜாதி. இது கண்ணதாசனின் ரத்தத்தில் ஓடியதால்— முதலில் வால்மீகி போல மற வாழ்க்கை நடத்தினாலும்– பின்னர் அற வாழ்வில் நுழைந்தார். அவருக்கு ஊற்றுணர்ச்சியாக விளங்கிய பெரியோர்கள் ஆதி சங்கரர், அப்பர்,, பட்டினத்தார் முதலியோர் என்பதை அவரது பாடலே காட்டும். இதோ ஒரு சான்று:

திரைப்படம்: பாதகாணிக்கை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?

பட்டினத்தார் சொன்னது:

பழந்தமிழ்நாட்டின் ‘பில் கேட்ஸ்’, ‘லெட்சுமி மித்தல்’ — பட்டினத்தார். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பணக்காரருக்கு “காதற்ற ஊசி” மூலம் ஞானம் பிறந்தது. புத்தர் போதி (அரச) மரத்துக்கடியில் பல்லாண்டு தவம் செய்து ஞானோதயம் பெற்றார். பட்டினத்தாருக்கோ ‘பட்’டெனப் பிறந்தது பட்டறிவு! இதோ அவரது பாடல்:

கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே (12,பொது)

பொருள்: முன்னர் செய்த தவம் தினை அளவோ எள் அளவோ இருந்தாலும் போதும். அது கூடவே வந்து பரலோகத்தில் நல்ல கதி கிடைக்க சத்தியமாக உதவும்.

இன்னொரு பாடலிலும்
என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே (28,பொது)

பொருள்: என்னைப் பெற்ற தாயார் ,’மகனே, பிணமாப் போயிட்டியே’ – என்று அழுது, அத்தோடு நிறுத்திவிட்டாள். நான் கழுத்தில் பொன் தாலி மாட்டிய என் மனைவியோ, அழுது புலம்பி விட்டு, ‘சடலத்தைத் தூக்கிட்டுப் போங்க’ என்று சொல்லிவிட்டாள். என் சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிய என் மகன்கள், என் சடலத்தைச் சுற்றி வந்து பானையைப் ஓட்டு உடைத்துவிட்டுப் போய்விட்டாங்க. இறைவா உன்னைத் தவிர, வேறு யாரும் இல்லையப்பா!

இப்படிப் பட்டினத்தாரைப் பாட வைத்தவர் அப்பர் பெருமான். அவரும் குடும்பப் பற்றுகளை அறவே துறந்தவர்:

swasthi_family_img

அப்பர் எழுப்பும் கேள்விகள்

தந்தை யார்? தாய் யார்? உடன்பிறந்தார்,
தாரம், ஆர்? புத்திரர் ஆர் அதாம்தாம் ஆரே?
வந்த ஆறு எங்ங்அனே? போம் ஆறு ஏதோ?
மாயம் ஆம்; இதற்கு ஏதும் மகிழ் வேண்டா!
சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்;
திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திரு நாமம் “நமச்சிவாய”
என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே.
——918, ஆறாம் திருமுறை

பொருள்: எளிய தமிழ். பொருளே தேவை இல்லை. சிந்திக்கும் திறம் படைத்த அறிவாளிகளே, ஒன்று மட்டும் சொல்கிறேன். நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டு தினமும் படுக்கையில் இருந்து எழுந்திருங்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைப்பதோடு சுவர்க்கமும் கிடைக்கும்.

family 2

ஆதிசங்கரர் பாடியது
அப்பர் இப்படிப் பாடுவதற்கு ஊற்றுணர்ச்சி தந்தவர் ஆதி சங்கரர்; அவரது பஜ கோவிந்தம் அற்புதமான ஒரு துதி. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பெரிய புத்தகம் எழுதும் அளவுக்கு ஆழமான கருத்துக்கள்! அவர் பாடுகிறார்:

காதே காந்தா, கஸ்தே புத்ர:
சம்சாரோ அயம் அதீவ விசித்ர:
கஸ்ய த்வம், க: குத ஆயாத-
ஸ்தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:
———பாடல் 8, பஜ கோவிந்தம்

பொருள்: மனைவி யார்? மகன் யார்? என்ன அதிசயமான உறவுகள் இவை!! நீ யார்? எங்கிருந்து வந்தாய்? சகோதரனே, இந்த உண்மையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்.

குடும்பத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, குடும்பப் பொறுப்புகளை எல்லாம் உதறிவிட்டு வெளியே வா என்று சொல்லவில்லை. இந்து மதம் ஒன்றுதான் உலகில் மனித வாழ்வை ,அழகாக ,நான்கு கூறு போட்டுக் கொடுத்திருக்கிறது. 1.பிரம்மசர்யம்: படிப்பு ஒன்றே உனக்கு லட்சியம் 2. க்ருஹஸ்த: கல்யாணம் செய்து இன்பத்தை அனுபவித்துக் குடும்பத்தை காப்பாற்று 3. வானப் பிரஸ்தம்: ஒரு கட்டத்தில் பற்றை எல்லாம் விட்டு விட்டு, தாமரை இலைத் தண்ணீர் போல இரு 4.சந்யாசம்: முற்றும் துற. பற்றுக, பற்றற்றான் பற்றை; (எதற்காக?) அப்பற்றைப் பற்றுக, பற்று விடற்கு (வள்ளுவன் குறள்)

(குறிப்பு: அப்பர் பெருமானுக்கு முன் வாழ்ந்தவர் ஆதி சங்கரர்– என்று போதுமான தமிழ் இலக்கியச் சான்றுகளோடு நான் எழுதிய கட்டுரை இதே பிளாக்—கில் உள்ளது. காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் சொல்லுவது போல ஆதி சங்கரர், கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர். மேலே உள்ள அப்பர் பாடலையும் பஜ கோவிந்தத்தையும் ஒப்பிட்டால் இது மேலும் தெளிவாகும். குறிப்பாக, சொற்றொடர்களைக் கவனிக்கவும்)

கீதையிலேயே உள்ளது
ஆதி சங்கரருக்கும் அனைத்து சாது சந்யாசிகளுக்கும் இக் கருத்தை வழங்கியவர் கண்ண பிரான் ஆவார். பகவத் கீதையிலேயே இகருத்து உள்ளது:–

அஸக்திர் அனபிஷ்வங்க: புத்ர தார க்ருஹாதிஷு
நித்யம் ச ஸமச்சித்தத்வம் இஷ்டானிஷ்டோபபத்திஷு (13—9)

பொருள்: மக்கள், மனைவி, மனை முதலியவற்றில் பற்றின்மை, அபிமானமின்மை, இஷ்டமுள்ளதும் இஷ்டமில்லாததும் வாய்த்தபோதும் கூட மன அமைதி (சமச்சித்தம்)———– (ஞானம் என்று கூறப்படும்).

ஆக கண்ணன் முதல் கண்ணதாசன் வரை கூறுவது ஒன்றே!

Contac swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment