கல்லுக்குள் தேரை, பெட்டிக்குள் எறும்பு: உணவு கொடுப்பது யார்?

Fire_ants

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:— 1119; தேதி:—- 20 ஜூன் 2014

ஒரு முறை பார்வதிக்கும் பரமசிவனுக்கும் இடையே ஒரு காரசார விவாதம்:
பார்வதி:– என்ன இது? இப்படி எப்போது பார்த்தாலும் ‘டான்ஸ்’ (நடராஜன் ) ஆடியே பொழுதைக் கழிக்கிறீர்களே. கொஞ்சம் பசியால் வாடும் உயிரினங்களுக்கு உணவு அளிக்கக்கூடாதா?
பரமசிவன்:- அன்பே! ஆருயிரே ! அதைத்தான் ‘’இமைப்பொழுதும் சோராமல்’ அல்லும் பகலும், அனுவரதமும் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

பார்வதி:– அப்படியா! எனக்கு என்னமோ நீங்கள் ‘’நடராஜ’’னாகப் பொழுது போக்குவதே கண்களுக்குத் தெரிகிறது!

Ramdas Shivaji
Picture of Shivaji and Samarth Ramdas.

பரமசிவன்:- நீ ஒரு பெண்; கருணையின் வடிவம்; ‘பால் நினைந்தூட்டும் தாய்’! ஆகையால் பசியில் வாடும் உயிரினங்களின் மேல் எப்போதும் கருணை பொழிகிறாய். எனது நடனம்தான் இந்த உலகையே இயக்கிக் கொண்டிருக்கிறது. உனது கருணை அதை மறைக்கிறது போலும்!

இப்படி சிவன் கொடுத்த தத்துவ விளக்கம் எதுவும் பார்வதிக்கு நம்பிக்கை தரவில்லை. தன் கணவனை ‘’கையும் களவுமாகப்’’ பிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்குத் திட்டம் போட்டாள். விறு விறு என்று வெளியே போய் அங்கே ஓடிக்கொண்டிருந்த சில எறும்புகளைப் பிடித்து ஒரு டப்பாவுக்குள் போட்டு மூடி வைத்தாள்.

மீண்டும் அதே நாளன்று பொழுது சாயும் நேரத்தில் சிவன் ஆடத் தொடங்கினார். பார்வதிக்கோ ஒரே ஆத்திரம். ஆட்டம் முடிந்தவுடன் சிவனை மீண்டும் வம்புக்கு இழுத்தாள்.

பார்வதி:– அன்பரே! இன்று எல்லா உயிரினங்களுக்கும் உணவு படைத்தீரா?
பரமசிவன்:- ஆமாம், தேவி! ஒரு உயிரினத்தையும் விடவில்லை. எல்லோருக்கும் உணவு அளித்துவிட்டேன்.

பார்வதி:– ஓ,அப்படியா? இனி நீர் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. காலை முதல் என் முந்தானைக்குள் முடித்துவைத்த இந்தச் சின்னப் பெட்டியில் எறும்புகள் இருக்கின்றன. நீர் இந்தப் பக்கமே வரவில்லையே! இவைகளுக்கு ஏனைய்யா உணவு படைக்கவில்லை?

பரமசிவன்:- தேவி! அவசரப் படாதே, ஆத்திரப் படாதே. பெட்டியைத் திறந்து பார்.
பார்வதி, பெட்டியைத் திறந்தாள். எறும்புகள் இன்பமாக அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. சிவன் வாயில் புன்சிரிப்பு நெளிந்தது. பார்வதி முகத்திலோ அசடு வழிந்தது. “எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த” இறைவனை வெறும் ஆட்டம் (நடராஜன்) போடுபவன் என்று நினைத்து விட்டோமே, உலகையெல்லாம் ஆட்டிப்படைக்கும் ஆட்டம அல்லவா தம் கணவனுடைய ஆட்டம் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.

shivajipg21

சிவாஜியை மடக்கிய ராமதாசர்

தென்னாட்டில் முஸ்லீம் படை எடுப்பாளர்களை ஒடுக்கியது விஜய நகரப் பேரரசு. அதற்குப் பின்னும் வட நாட்டில் அவுரங்கசீப்பின் அட்டஹாசம் நீடித்துக் கொண்டே இருந்தது. அப்பொழுது மஹாராஷ்டிரத்தில் மலைப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை ஒன்று திரட்டி உலகின் முதலாவது ‘கெரில்லா’ போரை நடத்தியவர் சிவாஜி. வீர சிவாஜியின் இந்து சாம்ராஜ்ய ஸ்தாபிதம் அவுரங்கசீப்பையும் மொகலாய சாம்ராஜ்யத்தையும் விழுத்தாட்டியது. வீர சிவாஜியின் வெற்றிக்குக் காரணம்—பவானி தேவி கொடுத்த வாளும், சமர்த்த ராமதாஸர் கொடுத்த ஆசியும் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சிவாஜியின் மனதில் இருந்து அகலத் தொடங்கியது.
அஹங்காரமும், மமகாரமும் ( ‘யான்’, ‘எனது’ என்னும் செருக்கு—குறள்) பெருகவே, சிவாஜிக்கு சமர்த்த ராமதாசர் ஒரு பாடம் கற்பிக்க நினைத்தார். நல்ல தருணமும் வந்தது. ஒரு நாள் மாபெரும் கோட்டை கட்டும் வேலையில் ஆயிரம் தொழிலாளிகள் ஈடுபாடிருந்தனர். சிவாஜி, பெரும் மமதையுடன் அதை மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தார். நான் இல்லாவிடில் இந்த மலை ஜாதி மக்களுக்கு சோறும் தண்ணீரும் கிடைத்து இருக்குமா? என்ற எண்ணம் அவரது மனதில் இழை ஓடியது. அப்போது அங்கே ராமதாசரும் வந்து சேர்ந்தார்.

“சிவாஜி! ஒரு பெரிய பாறையை உடைக்க வேண்டும். நாலைந்து தொழிலளிகளைக் கூப்பிடு” என்று குரு ராமதாசர் உத்தரவு இட்டார். குருவின் இந்த விநோத வேண்டுகோள் வியப்புக் குறியை எழுப்பியது. இருந்த போதிலும் குரு விஷயத்தில் கேள்விக் குறியை எழுப்பி அறியாத மாபெரும் பக்தன் வீர சிவாஜி. உடனே உத்தரவு பறந்தது.

வந்தனர் தொழிலாளிகள்– வெட்டி உடைத்தனர் பாறையை– என்ன அதிசயம்!! அதற்குள் சிறிய தூவாரங்களில் தண்ணீர். அதில் சில தேரைகள்! எல்லோரும் வியப்புடன் பார்த்தனர்.
சிவாஜி! இவைகளுக்கும் நீதான் உணவு படைக்கிறாயா? என்றார் குருதேவர்.

சிவாஜிக்குப் புரிந்தது. அகந்தை அகன்றது. குருதேவரின் காலில் விழுந்தார். கண்ணிர் மல்கினார். குருவின் ஆசி பெருகியது. காவிக் கொடிகள், மேலும் பல மொகலாயர் கோட்டைகளை வென்று, அவைகளின் மீது பட்டொளி வீசிப் பறந்தன!

tad in rock

(தவளை வகையைச் சேர்ந்த தேரைகள் மூடிய கல் பாறக்கிகுள் வசிப்பது இயற்கை அதிசயங்களில் ஒன்று. மேலை நாடுகளில் உள்ளோர் இதை நம்புவதில்லை. ஆனால் இந்தியாவில் வசிப்போருக்கு இது நன்கு தெரிந்த உண்மை.)

“அடக்கம் அமரருள் உய்க்கும்”— வள்ளுவன் குறள்.—சுபம்–.

Leave a comment

Leave a comment