Written By S.Nagarajan
Post No.1145; Dated 3rd July 2014.
This is from the book Purana Thulikal (Honey Drops from the Puranas)- Part 2 written by my brother S Nagarajan. Part 1 and Part 2 are already published by nilacharal in e book formats for sale:- swami.
18 புராணங்களின் பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு ஸ்லோகம் உள்ளது.
மத்வயம் பத்வயம் சைவ ப்ரத்ரயம் வசதுஷ்டயம் I
அனாபலிங்ககூஸ்கானி புராணானி ப்ருதக் ப்ருதக் II
இந்த ஸ்லோகத்தின் பொருள் :- இரண்டு ‘ம’, இரண்டு ‘ப’, மூன்று ‘ப்ர’, நான்கு ‘வ’ மற்றும் ‘அ’,’நா’.’ப’, ‘லிங்’, ‘க’, ‘கூ’,’ஸ்கா’ ஆகியவையே புராணங்களாகும்.
இரண்டு ‘ம’ என்பது மகாரத்தில் ஆரம்பிக்கும் மத்ஸ்ய மற்றும் மார்க்கண்டேய புராணத்தைக் குறிக்கும்.
இரண்டு ‘ப’ என்பது பகாரத்தில் ஆரம்பிக்கும் பவிஷ்ய மற்றும் பாகவத புராணத்தைக் குறிக்கும்.
மூன்று ‘ப்ர’ என்பது ப்ர-வில் ஆரம்பிக்கும் ப்ரஹ்ம, ப்ரஹ்மாண்ட மற்றும் ப்ரம்மவைவர்த புராணத்தைக் குறிக்கும்.
நான்கு ‘வ’ என்பது வகாரத்தில் ஆரம்பிக்கும் வராஹ, விஷ்ணு, வாயு, மற்றும் வாமன புராணத்தைக் குறிக்கும்.
‘அ’ என்பது அக்னி புராணத்தைக் குறிக்கும்.
நா’ என்பது நாரதீய புராணத்தைக் குறிக்கும்.
‘ப’ என்பது பத்ம புராணத்தைக் குறிக்கும்.
‘லிங்’ என்பது லிங்க புராணத்தைக் குறிக்கும்.
‘க’ என்பது கருட புராணத்தைக் குறிக்கும்.
‘கூ என்பது கூர்ம புராணத்தைக் குறிக்கும்.
‘ஸ்கா’ என்பது ஸ்கந்த புராணத்தைக் குறிக்கும்.
ஆக இப்படி 18 புராணங்களையும் நினைவில் கொள்ள ஒரு சிறிய ஸ்லோகத்தை நினைவில் வைத்திருந்தால் போதும்.
காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.
தேவி பாகவதத்தில் முதல் ஸ்கந்தத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் இந்தக் குறிப்பு இடம் பெறுகிறது.
***********
இரண்டாம் பகுதி
புராணத் துளிகள்
பல லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய 18 புராணங்களையும் , உப புராணங்களையும் சம்ஸ்கிருத மொழியில் படிப்பதற்கு ஒரு ஆயுள் போதாது. அதை முறையாக விளக்குவதற்கு போதிய பண்டிதர்கள் இல்லை. வாய்ப்புகள் குறைந்து விட்ட இந்த நாட்களில் முக்கிய சில பகுதிகளையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் உண்டு. அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் முதல் பாகம் நிலா பப்ளிஷர்ஸ் மூலம் வெளியானது. இதோ இரண்டாம் பாகம்!
பிரம்மாவின் வம்சம்
மரீசி,நாரதர்,அத்திரி,புலஸ்தியர்,புலகர்,கிருது,தக்ஷன், வசிஷ்டர் ஆகிய அனைவரும் பிரம்மாவின் பிரசித்தரான புத்திரர் ஆவர்.இவருள் மரீசி காஸ்யபரைப் பெற்றார்.தக்ஷனுடைய பதிந்மூன்று பெண்கள் அவருக்கு மனைவியர் ஆவர்.அப்பெண்கள் வழியாக தேவாசுரர் உண்டாயினர்.ஏனைய மானுடர்,மிருகங்கள், சரபங்கள் முதலில பலவகை சாதி பேதங்களாயுள்ள உயிர்கள் எல்லாம் உண்டாயின.பிரம்மனுடைய சரீரத்தில் வலப்பாதியில் “ஸ்வாயம்பு மநுவும்” இடப்பாதியில் “சதரூபி” என்கிற பெண்ணும் உண்டாயினர். சதரூபி என்பவளுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என்கிற இரண்டு பிள்ளைகளும், அதிக சுந்தரிகளாக உள்ள மூன்று பெண்களும் பிறந்தார்கள்.இவ்வண்ணம் பிரம்ம வம்சம் விருத்தியானது.
-ஜனமேஜய மஹாராஜனிடம் வியாஸர் கூறியது
தேவி பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம் அத்தியாயம் 13
சுகம் எது, துக்கம் எது? சத்ரு எவர், நண்பர் எவர்?
சுக முனிவர் மிதிலை நகருக்கு வந்த போது துவாரபாலகன் ஒருவன் அவரிடம் சுகம் எது, துக்கம் எது, சத்ரு எவர், நண்பர் எவர், சுபத்தை வேண்டுபவனால் செய்யத் தக்கது என்ன, இவற்றை நன்றாகச் சொல்ல வேண்டும் என்று கேட்க சுகர் இப்படி பதில் கூறுகிறார்:-
எல்லா உலகத்திலும் இரண்டு விதமிருக்கிறது. அதிலிருக்கும் பிரஜைகளும் ராகி, விராகி என்று இரண்டு விதமாக இருக்கின்றனர்.
அவர்களுதைய சித்தமும் இரண்டு விதம்.
இவைகளுள் விராகி என்பவர் அறிந்தவர், அறியாதவர்,அறிந்தும் அறியாதவர் என மூன்று விதமாய் இருப்பர்.
ராகி என்பவர் மூர்க்கர், சதுரர் என இரண்டு விதமாயிருப்பர்.
அந்தச் சதுர்ப்பாடு சாஸ்திர விசாரத்தால் வருவதாகிய சாமர்த்தியம், புத்தி சூக்ஷ்மத்தால் வருவதாகிய சாமர்த்தியம் என இரு வகைப்படும்.
அந்த புத்தியானது யுக்தம், அயுக்தம் என இரு வகைப்படும்.
இதைக் கேட்ட துவாரபாலகன், தான் அர்த்த ஞானமுடையவன் இல்லை என்று கூறி சுகர் கூறிய சொற்களுக்குப் பொருளை விளக்குமாறு வேண்டுகிறான். உடனே சுகர் விளக்கத்தை அளிக்கிறார் இப்படி:-
“எவனுக்கு சம்சாரத்தில் விருப்பம் இருக்கிறதோ அவன் ராகி எனப்படுவான். அவனே எல்லாவற்றிலும் மோகம் அடைகின்ற மூர்க்கன். அவனுக்குச் சுக துக்கங்கள் அநேக விதமாய் இருக்கின்றன. என்னவென்றால், தனம், புத்திரன்,செல்வம், மனைவி,மானம், விஜயம் முதலியவற்றையும் காரிய சாதனத்தையும் பெறுவதனால் சுகமும், அதைப் பெறாததால் துக்கமும், நிமிஷம் தோறும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றன. அவனது செய்கை எல்லாம் சுகத்தை அடைய வேண்டுமென்கிற விருப்பத்தை உடைத்தாய் இருக்கிறது.
அச் செய்கைகளுக்கு மாறான செய்கைகளைச் செய்து தடைப்படுத்துகிறவன் சத்ருவாகின்றான். அச்செய்கைக்குச் சாதகனாய் இருக்கிறவன் நண்பனாகிறான்.
விராகி, விஷய சுகங்களொன்றிலும் ஆசை வைக்காமல் ஏகாந்தத்தில் வேதாந்த விசாரம் செய்து ஆத்ம சுகத்தை அநுபவித்துக் கொண்டிருப்பான். அவனே மோகம் அடையாத பண்டிதன். அவனுக்கு சம்சார வாழ்க்கையின் சுகம் எல்லாம் துக்ககரமாகவே இருக்கும்.
ஆயினும் அப்படி ஆத்ம சுகத்தை நாடுகின்றவனுக்குக் காம குரோத லோப மத மாச்சரியம் முதலிய கொடிய சத்துருக்கள் பலருண்டு. இப்படிப்பட்ட சத்துருக்களால் பீடிக்கப்பட்டிருப்பவனுக்கு பந்து, சந்தோஷம் என்பவன் ஒருவனே! அவனைத் தவிர வேறொருவரும் மூன்று உலகிலும் இல்லை.”
இப்படி சுகர் கூறியதைக் கேட்ட துவாரபாலகன் அவர் ஞானி என்று எண்ணி அவரை நகருக்குள் செல்ல அனுமதி அளிக்கிறான்.
தேவி பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம்
To be continued………………….



Visweswaran A Subramanyam
/ July 24, 2014திருவாளர். லண்டன் ஸ்வாமி நாதன் அவர்களுக்கு, நமஸ்காரங்கள்.
தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கடந்த ஜூலை 3ஆம் நாள் முதலாக படித்து ரசிக்கும், ப்ரம்மிக்கும் வாய்ப்பு அடையப் பெற்றேன், அருட் பேராற்றலின் கருணையால்….
தங்கள் கட்டுரைகளை எமது குடும்பத்தில் அனைவரும் ஆர்வமுடன் படித்து வருகிறோம்.
நீங்கள் நீடூழி வாழவும் தங்கள் அரும்பணி மென்மேலும் வளரவும் சிறக்கவும் எல்லாம் வல்ல அருட் பேராற்றல் அருள் புரிய வேண்டுமென மனமார பிரார்த்தித்து வருகிறோம்…
தங்கள் வலை தளத்தின் பெயரை ‘thamizhanvedas’ என்று இருக்கக் கூடாதா என ஆதங்கப்படுகிறோம்…. நிறைவேற்றுவீர்களா?!! (Alias வேண்டுமானால் tamilvedas என்று இருந்துவிட்டுப் போகட்டுமே…)
தங்கள் ஸகோதரன்,
விஸ்வேஸ்வரன் ஸுப்ரமண்யம்
theproudindian_2000@yahoo.co.in
Tamil and Vedas
/ July 25, 2014Thanks for your compliments. I need blessings and good wishes from every one of you.That is the fuel that drives this engine.
Regarding changing the name of the site, I will consider your suggestion.
Keep reading. There are 1100 articles!!
Suresh Lakshmanan
/ February 27, 2017great site with good content!!. Keep it up.