வியாஸரின் ஆசிரமம் இருக்கும் இடம்!

sukadeva
சுகதேவர் படம்

Written by S Nagarajan

Post No 1147; Dated 4th July 2014.

This is second part from “Honey Drops from the Hindu Puranas”- e book published by nilacharal; First part was published yesterday.

ஸரஸ்வதி என்னும் பெயருடைய ப்ரஹ்ம நதியின் மேல் கரையில் சம்யாப்ராஸமென்று பிரசித்தமானது வியாஸருடைய ஆசிரமம். அங்கு ரிஷிகள் ஓயாமல் யாகங்கள் செய்து கொண்டிருப்பார்கள். இலந்தை மரங்களின் வரிசைகளால் அலங்காரமுற்ற அந்தத் தனது ஆசிரமத்தில் வியாஸர் ஜலத்தை எடுத்து ஆசமனம் செய்து மனத்தை வேறு விஷயங்களில் போகவொட்டாமல் அடக்கித் தன்னிலையில் இருக்கச் செய்தார்.

சூதர் சௌனகரிடம் வியாஸ ஆசிரமத்தைப் பற்றிக் கூறியது
பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம் 7

ஸ்ரீமத் பாகவதத்தின் இன்னொரு பெயர்!

வியாஸ மா முனிவர் சம்சாரத்தில் விளையும் அனர்த்தமாகிய தாபத்ரயத்தைப் போக்கும் உபாயம் பகவானிடத்தில் செய்யப்படும் பக்தி யோகமே என்பதை அறியாமல் வருந்தும் உலகத்திற்கு நன்மையை விளைவிக்கும் பொருட்டு ஸாத்வத ஸம்ஹிதை எனப்படுகின்ற இந்த பாகவத மஹா புராணத்தைச் செய்தார்.

சூதர் சௌனகரிடம் பாகவதம் உருவான விதத்தைப் பற்றிக் கூறும் போது தெரிவித்தது
பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம் 7

vyasa & madhva வியாசரும் மத்வரும்

வேதாங்கம் ஆறு

1)சிக்ஷா 2)கல்பம் 3)நிருத்தம் 4)வ்யாகரணம் 5)ஜ்யோதிஷம் 6) சந்தம் என வேதாங்கம் ஆறு வகைப்படும்.
கிருஷ்ண பக்ஷத்தில் வேதாங்கத்தைப் படிக்க வேண்டும்.
-கூர்ம புராணம், மனு ஸ்மிருதி

சௌனகரிடம் பாகவதம் உருவான விதத்தைப் பற்றிக்
கூறும் போது தெரிவித்தது
பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம் 7

வேதங்களின் புரோகிதர்கள்

ரிக் வேதம் – ஹோதா
யஜுர் வேதம் – அத்வர்யு
சாம வேதம் – உத்காதா
அதர்வ வேதம் – ப்ரஹ்மா

ஹோதா, அத்வர்யு, உத்காதா, ப்ரஹ்மா என இப்படி நான்கு முக்கிய ரூபங்களில் யக்ஞங்களை நிர்வகிப்பவர்கள் உள்ளனர்.

-பத்ம புராணம்

Shiksha
ஏழு சிரஞ்சீவிகள்

அஸ்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹநுமான் ச விபீஷண:
க்ருப பரசுராமஸ்ச சப்தை தே சிரஞ்சீவன:

அஸ்வத்தாமன், பலி, வியாஸர், ஹநுமான், விபீஷணன், க்ருபர், பரசுராமர் ஆகிய எழுவரும் சிரஞ்சீவிகள்.
(அதிகாலையில் இவர்களின் நாமங்களை உச்சரிப்பது – இந்த ஸ்லோகத்தை சொல்வது – மங்களகரமானது என்பது நமது நம்பிக்கை)

-பத்ம புராணம்

ருணங்கள் மூன்று

ரிஷி ருணம் 2) தேவ ருணம் 3) பிதிர் ருணம் என ருணங்கள் மூன்று வகைப்படும் (ருணம் என்றால் கடன் என்று பொருள் படும்)
பிரம்மசர்யத்தை அநுஷ்டிப்பதால் ரிஷிகளும், யக்ஞகர்மங்களைச் செய்வதால் தேவர்களும், புத்திரர்களைப் பெறுவதால் பிதிருக்களும் திருப்தி அடைகின்றனர். இந்த மூன்று கடன்களையும் செலுத்திய பின்னரே ஒருவர் வானப்ரஸ்த ஆசிரமத்தை மேற்கொள்ள வேண்டும்.
– சிவ புராணம், மனு ஸ்மிருதி
rishi3

ப்ராண (நடைப்) பிணம் யார்?

உயிரோடிருந்தும் பிணம் யார்? இதற்கு விடையை பாகவதம் இரண்டாம் ஸ்கந்தத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் காணலாம்.

பரீட்சித்து மன்னன் சுகரிடம் என்ன வினவினான் என்று சௌனக முனிவர் ஸூதரிடம் வினவும் போது அவர் கூறியது கீழ்க்கண்ட வார்த்தைகள்:

“நாள்தோறும் பிராணிகளின் ஆயுள் கழிந்து கொண்டே இருக்கின்றது. அதில் பகவானுடைய குணங்களைச் சொல்லிக் கொண்டு கழித்த காலம் தவிர மற்றவை எல்லாம் வீணே!
க்ஷணமாயினும் பகவானுடைய குண கீர்த்தனத்துடன் கழியுமாயின் அதுவே சபலமாகும். அது வீணன்று!
‘ஜீவித்திருத்தலே ஆயுளுக்குப் பயன் ஆகட்டுமே’ என்றால் சொல்லுகிறேன், கேளும்.

மரங்கள் ஜீவிக்கவில்லையா?
அவற்றிற்கு மூச்சில்லையே என்கிறீரா?
கருமானுடைய தோல் துருத்திகளும் மூச்சு விடுகின்றன!
அவற்றிற்கு ஆகாராதிகள் இல்லையே என்கிறீரா?

கிராமத்திலுள்ள நான்கு கால் ஜந்துக்களும் மற்றவைகளும் ஆகாரத்தைத் தின்பதில்லையா? புணர்ச்சியில் ஈடுபடுவதில்லையா?

ஒரு காலும் பகவானுடைய நாமம் எவன் காதில் விழவில்லையோ அவன் கிராமத்தில் திரியும் நாய், பன்றி, கழுதை இவைகளுடன் ஒத்த ஒரு மிருகமே (நான்கு கால் மிருகமே) ஆவான்.
திரிவிக்கிரம அவதாரம் செய்து உலகங்களை எல்லாம் தனது பாதாரவிந்தங்களால் ஸ்பர்சித்த பகவானுடைய பராக்ரம சரித்திரங்களைக் கேளாத காதுகள் காதுகளே அல்ல! வீண் பாழிகளே!
பெரியோர்களால் ஓயாமல் பாடப்படும் குணங்களை உடைய பகவானுடைய பாடல்களைப் பாடாத நாக்கும் இருந்தும் இல்லாதது போலத் தான்! தவளையின் நாக்கைப் போலப் பயனற்றதே!

போக மோட்சங்களைக் கொடுக்கத் தயாராக இருக்கின்ற பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பூஜிக்காத கைகள் பொன் வளைகளை அணிந்திருப்பினும் பிணத்தின் கைகளே!

விஷ்ணுவின் திவ்விய மங்கள விக்ரஹங்களைக் காணாத கண்கள் மயில் கண்களே!

ஸ்ரீரங்கம் முதலிய ஸ்ரீவிஷ்ணுவின் திவ்விய க்ஷேத்திரங்களுக்கு நடந்து செல்லாத மனிதர்களின் பாதங்கள் மர ஜென்மம் பெற்றவைகளே (மரத்தின் வேர்களோடு ஒத்தவைகளே)

பகவானிடம் பக்தியுடைய பெரியோர்களின் பாததூளியை ஒருக்காலும் விரும்பாத மனிதனும் ஸ்ரீ விஷ்ணுவின் பாதாரவிந்தங்களில் படிந்த துளஸியின் வாசனையை முகர்ந்து சந்தோஷம் அடையாத மனிதனும் பிராணனோடு இருக்கும் பிணங்களே!

பகவானுடைய நாமங்களைக் கேட்டும் மொழிந்தும் அவை நெஞ்சில் படப்பெற்று மனத்தில் கலக்கமும் முகத்தில் மலர்ச்சியும் கண்ணில் ஆனந்தக் கண்ணீரும் உடம்பில் மயிர்க்கூச்சலும் எவன் உண்டாகப் பெறாதிருப்பானோ அவனுடைய இதயம் இரும்பினால் செய்யப்பட்டதே!

பகவானுடைய நாமங்களைக் கேட்டு மனதில் அன்பு உண்டாகப் பெறுவான் ஆயின் அவனுக்கு முகமலர்ச்சியும் ஆனந்தக் கண்ணீரும் மயிர்க்கூச்சலும் உண்டாகும்.”

To be continued…………………….

Leave a comment

Leave a comment