Wriiten by S Nagarajan
Post No.1165; Dated 11th July 2014
This is the eighth part of S Nagarajan’ article from his Tamil book “Honey Drops from the Puranas”. First seven parts were published in this blog.
சுகருக்கு ஜனக ராஜன் கூறிய ரகசியம்!
ஜனக மஹராஜனை சுகர் அவனது அரண்மனைக்கு வந்து சந்திக்கிறார். அப்போது அவரிடம் ஜனக ராஜன் கூறியது:-
சுகரே! இந்திரியங்கள் வலுப் பெற்றிருக்கும் காலத்தில், அதை அடக்குவது ஒருவராலும் முடியாது.அது அசாத்தியம். இந்திரியங்கள் பரிபாகம் இல்லாதவனைத் தாம் செல்லும் வழியில் எல்லாம் ஈர்த்து ஆசையை எழுப்பி, அறிவை ஆகர்ஷித்துக் கொண்டு பல விதமாகக் கெடுத்து விடுகின்றன. எப்படி என்றால், ஆகாரத்தின் மீதுள்ள ஆசையினாலும் சுகத்தின் மீதுள்ள இச்சையினாலும், சயனத்தின் மீதுள்ள ஆசையினாலும் எண்ணம் உண்டாக்கிக் கெடுக்கின்றன. ஆகையால் இந்திரியங்களை வைத்துக் கொண்டு சந்யாசியாக சென்றால் பயன் என்ன?
பிராரப்த வாசனா பலத்தை ஜெயிப்பது என்பது பெரும் கஷ்டம். அது ஒருபொழுதும் சமனம் அடைகிறதில்லை.ஆதலால் வரிசையாக ஒவ்வொரு ஆசிரமத்திலும் ஈடுபட்டு அவைகளைப் பற்று அறத் துறக்க வேண்டும்.
சுகரே! உன்னதமான பிரதேசத்தில் தூங்குபவன் கொஞ்சம் சலிப்பை அடைவானாயின் கீழே வீழ்ந்தே தீருவன். கீழே தூங்குபவன் எவ்வளவு சலித்தாலும் விழ மாட்டான். அது போல சந்நியாச ஆசிரமத்தை அடைந்த பின் சபல புத்தி உண்டாகுமானால் அதிலிருந்து நழுவி விடுவான். மீண்டும் அவன் ஈடேற வழியில்லை.
சுகரே! எறும்புகள், பழமுள்ள ஒரு மரத்தில் அண்டி மெல்ல ஊர்ந்து உச்சியில் ஏறி சுவையுள்ள கனிகளைச் சிறிது சிறிதாகச் சாப்பிடுகின்றன. பறவைகளோ அக்கனிகளைச் சாப்பிடுவதற்கு வேகமாய் ஒரே பாய்ச்சலில் கனிக்குச் சமீபத்தில் சென்றும் கூட அங்கு நேரிடும் சில இடையூறுகளினால் மொத்துண்டு சிரமப்பட்டும் பயனற்றுப் போகின்றன. எறும்புகளோ அப்படியன்று. அங்கங்கு சிரமத்தைப் பரிகாரம் செய்து கொண்டும் யாதொரு இடையூறில்லாமலும் அந்தப் பழங்களை அனுபவிக்கின்றன.
ஆதலால் எவருக்கும் மனத்தை வெல்ல முடியாது. ஏனென்றால் மனத்தைக் காலம் விடாது. ஆதலால் அந்த மனத்தை ஆசிரமம் தோறும் சிறிது சிறிதாக அடக்கி வர வேண்டும். சாந்தனாயும், ஞானவானாயும், ஆத்ம விசாரமுடையவனாய் உள்ள புருஷன் கிருஹஸ்த ஆசிரமத்தில் இருப்பவனாயிருந்தபோதிலும் இலாபத்தில் சந்தோஷமும் நஷ்டத்தில் துக்கமும் அடைய மாட்டான்.இவ்விரண்டிலும் சமபுத்தியை உடையவனாக இருப்பான்.
ஆதலால் எவனாயினும் வேதத்தில் விதித்த கர்மங்களைச் செய்து அதன் பலனை விரும்பாமல் ஈசுவர அர்ப்பணம் செய்கின்றானோ அவன் ஆத்மானுபவத்தை அடைந்து ஆனந்தமூர்த்தியாய் சம்சார பந்தத்த்திலிருந்து விடுபடுவான். இதில் சந்தேகமில்லை.
என்னைப் பாரும், யான் ராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டு, யதேச்சையாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றிலும் சுகம் துக்கம் என்பது சிறிதுமில்லை. அப்படி பற்றற்று இருக்கின்றமையால் ஜீவன் முக்தனாய் இருக்கிறேன்.
– தேவி பாகவதம் முதலாம் ஸ்கந்தத்தில் 18ஆம் அத்தியாயம் – சுக ஜனக சம்வாதம்
பல ரகசியங்களை விளக்கும் அற்புதமான இந்த உரையாடல் தொடர்கிறது.
மும்மூர்த்திகளும் ஒருவரே!
ஏக மூர்த்திஸ்த்ரயோ தேவா: ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸ்வர: I
த்ரயாணாமந்தரம் நாஸ்தி, குணாபேத:ப்ரகீர்தித: II
ப்ரம்மா, விஷ்ணு,,சிவன் – ஆகிய இந்த மூன்று தேவர்களும் ஒருவரே. இந்த மும்மூர்த்திகளின் ஸ்வரூபத்தில் ஒரு விதமான பேதமும் இல்லை. குணங்களில் மட்டுமே பேதம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
-பத்ம புராணம், பூமி கண்டம், அத்யாயம் 71
மெதுவாகச் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!
சில விஷயங்களில் நிதானம் தேவை. மெதுவாகச் செய்ய வேண்டிய காரியங்களை ‘சனை: கர்தவ்யானி’ (மெதுவாகச் செய்யவேண்டியவை) என்று குறிப்பிடுவர். கருட புராணம் தரும் அறிவுரை இது:
வித்யா – கல்வி கற்பது
அர்த்தா – செல்வம் சேகரிப்பது
பர்வதாரோஹணா – பர்வதம் அதாவது மலையில் ஏறுவது
தர்மா – தர்மம்
காமம் – காமம்
ஆக இந்து ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது
இதைக் கூறும் கருட புராண ஸ்லோகம் இது:
சனைர்வித்யா சனைர் அர்த்தா சனை: பர்வதமாருஹேத் I
சனை: காமம் ச தர்மம் ச பஞ்சதானி சனை: சனை: II
கல்வியில் மெதுவாக முன்னேறு. பொருள் சேகரிப்பதில் மெதுவாக முன்னேறு. மலை மீது ஏறுவதை மெதுவாகச் செய். காமத்திலும், அதே போல தர்மம் செய்வதிலும் மெதுவாகச் செய்! இந்த ஐந்து விஷயங்களையும் மெதுவாகவே செய்ய வேண்டும்.
-கருட புராணம் 109ஆம் அத்தியாயம் 46ஆம் ஸ்லோகம்
மாயைக்கு மருந்து
உலகமெல்லாம் மாயா சொரூபமாய் இருக்கிறது. பரமேஸ்வரி அம்மாயா சொரூபமான உலகத்திற்கு எஜமானியாக இருக்கிறாள். ஆதலால் மூன்று லோகத்தாராலும் சுந்தரமான தேவியே புவனேஸ்வரி என்று சொல்லப்படுகிறாள்.
ஓ! அரசனே! மனம் புவனேஸ்வரி ரூபத்தில் சம்பந்தித்து இருக்குமாயின் இந்த சம்சாரத்தில் சதசத்ரூபமான மாயை என்ன செய்யும்? ஆதலால் மாயையை ஒழிப்பதற்குச் சதானந்தரூபியான தேவியைத் தவிர வேறொரு தேவதாந்தரங்கள் சக்தி உள்ளனவல்ல. தமோராசியை நாசம் செய்வதற்கு தமசே காரணமாக மாட்டாது. சூரியன், சந்திரன், அக்னி, மின்னல் இவைகளுடைய காந்தியல்லவோ இருளைப் போக்கடிக்க வல்லமை உள்ளவை. ஆதலால் சம்வித்ரூபமாய்த் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிற மாயேஸ்வரியான அம்பிகாதேவியை மாயையைக் கழிப்பதற்காக மிகப் பக்தியோடு பூஜிக்க வேண்டும்.
-வியாஸ முனிவர் ஜனமேஜய மஹராஜனிடம் கூறியது
– தேவி பாகவதம், ஆறாம் ஸ்கந்தம், 36ஆம் அத்தியாயம்.
தூக்கம் வராத நான்கு பேர்!
நான்கு பேர்களுக்குத் தூக்கம் வராது என்று கூறுகிறது கருட புராணம்.
1) தரித்ரன் – ஏழ்மையில் வாடுபவனுக்குத் தூக்கம் வராது.
2) பரப்ரேஷ்ய சர – (சர என்றால் ஒற்றன் என்று பொருள்) அயல் தேசத்தில் உளவு பார்க்கச் சென்ற ஒற்றன்
3) பர நாரி ப்ரசக்த – அடுத்தவன் மனைவி மீது காதல் கொள்பவன்
4) பர த்ரவ்ய ஹர: – அடுத்தவன் பொருளை அபகரிக்கும் திருடன் ஆகிய இவர்களுக்கு நித்திரை வராது.
குதோ நித்ரா தரித்ரஸ்ய பரப்ரேஷ்யசரஸ்ய ச I
பரநாரிப்ரசக்தஸ்ய பரத்ரவ்யஹரஸ்ய ச II
– கருட புராணம் 115ஆம் அத்தியாயம் ஸ்லோகம் 68
To be continued………………………..




You must be logged in to post a comment.