By ச.நாகராஜன்
Written by S Nagarajan
Post No 1174 : Dated 16th July 2014.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு ஆன்மீக உறவை ஏற்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர். தனது அமெரிக்க உறவை அனைவரும் அதிசயிக்கத்தக்க வித்த்தில் நினைவு கூறும் விதமாக அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை நான்காம் தேதியன்று சமாதி அடைந்தார் அவர். அவரின் நினைவுக்கு அஞ்சலி செய்து போற்றித் துதிக்கும் கட்டுரை இது!
இந்தியாவைப் பற்றி அறிய விவேகானந்தரைப் படியுங்கள்!
அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே! (Sisters and brothers of America!) என்ற சில சொற்களினாலேயே அமெரிக்கா முழுவதையும் தன் அன்பு வளையத்துக்கு ஆட்படுத்திய பெரும் அதிசய புருஷர் சுவாமி விவேகானந்தர்.
இந்தியாவைப் பற்றி அறிய வேண்டுமென்றால் சுவாமி விவேகானந்தரைப் படி என்றார் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இந்தியப் பண்பாட்டின் கருவூலமாக, பாரதத்தின் ஆன்மீக சக்தியின் நடமாடும் திரு உருவாக அவதரித்தவர் சுவாமிஜி.
சூரியனுக்கே சான்றிதழா?!
அமெரிக்காவில் பிரபல பேராசிரியரான ஹென்றி ரைட் சுவாமிஜியுடன் அளவளாவிய சிறிது நேரத்திலேயே அவரது அறிவின் ஆழத்தைப் புரிந்து கொண்டு வியந்தார். போஸ்டனிலிருந்து 30 மைல் தொலைவில் இருந்த அன்னிக்ஸ்வாம் என்ற இடத்தில் அமைதியான இடத்தில் தம் இல்லத்தில் தங்கி இருந்த அவர் சுவாமிஜையைத் தன்னுடன் தங்குமாறு அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட சுவாமிஜி அவருடன் இரு நாட்கள் கழித்தார். சர்வமத மஹாசபையில் நிச்சயம் சுவாமிஜி கலந்து கொள்ள வேண்டுமென்ற தன் எண்ணத்தை பேராசிரியர் ரைட் வெளிப்படுத்தினார்.
“அமெரிக்கா உங்களை அறிய வேண்டுமானால் அதைத் தவிர வேறு வழியில்லை” என்று ஆணித்தரமாக உரைத்த பேராசிரியரை நோக்கிய சுவாமிஜி,” அந்த சபையில் கலந்து கொள்வதற்கான அறிமுகக் கடிதமோ, சான்றிதழோ என்னிடம் இல்லையே! “ என்று தயங்கிவாறே கூறினார்
“உங்களுக்குச் சான்றிதழா?! சூரியன் பிரகாசிப்பதற்குச் சான்றிதழ் கேட்பது போல அல்லவா இருக்கும் அது!” என்றார் ரைட்
சூரிய ஒளிக்கே ஒரு சான்றிதழா! மின்மினிகள் அதைத் தர இயலுமா? என்பதை உணர்ந்த பெரும் மேதையாக இருந்தார் ரைட்.
பின்னர் நடந்த சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. சுவாமிஜி 1893 ஆம்
செப்டம்பர் 11ஆம் தேதி சர்வமத மகாசபையில் கலந்து கொண்டார். இந்தியாவின் ஆன்மீக சக்தியை உலகெங்கும் அறியச் செய்து உலகப் புகழ் பெற்றார்.
அமெரிக்கர்கள் வியந்த அதிசய புருஷர்!
பிரபல பகுத்தறிவுவாதியும் சொற்பொழிவாளருமான இங்கர்சால் சுவாமிஜியைச் சந்தித்து வியந்து போனார்.
“ஒரு ஆரஞ்சுப் பழத்தின் சாறைப் பருக விரும்புகிறேன். அதில் என்ன தவறு?” என்று உலோகாயத நோக்கில் அனைத்தையும் அனுபவிப்பதில் என்ன தவறு என்று பூடகமாக்க் கேட்ட இங்கர்சாலை நோக்கிப் புன்முறுவல் பூத்த சுவாமிஜி,” அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் கடைசிச் சொட்டு சாறு வரை முழுவதுமாக அருந்த வேண்டும் என்கிறேன் நான்!” என்றார். வேதாந்தம் மூலம் அனைத்தையும் அறிந்து சுவைக்க முடியும் என்ற அவரின் அறிவுரையைக் கேட்ட இங்கர்சால் பெரிதும் மனம் மகிழ்ந்து சுவாமிஜியை மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு வேண்டிக் கொண்டார். அவரது பரந்த மனத்தையும் நோக்கையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அங்குள்ள மதவாதிகளுக்கு இல்லை என்பது இங்கர்சாலின் கருத்து.
பிரபல தொழிலதிபர் ராக்பெல்லர் சுவாமிஜியைச் சந்தித்தார். சில நிமிடங்களே நீடித்த அந்த சந்திப்பில் அவரை அறக்கட்டளை ஆரம்பிக்குமாறு உத்வேகம் ஊட்டினார் சுவாமிஜி. அவர் வாழ்க்கையே மாறிப் போனது.
எகிப்து, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுவாமிஜி விஜயம் செய்த போதிலும் அமெரிக்காவின் மீது அவர் கொண்டுள்ள பாசம் எழுத்தில் வர்ணிக்க முடியாதது.
39 வயதிலேயே பிரம்மாண்டமான சாதனையை உலக அரங்கில் நிறைவேற்றி முடித்த சுவாமிஜி தான் வந்த “காரியம்” முடிந்து விட்டதென்று எண்ணி விட்டார் போலும்.
1906ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தேதி ஏகாதசி தினம். அன்று அவர் விரதம் இருந்தார். மார்கரெட் எலிசபத் நோபிளாக இங்கிலாந்தில் பிறந்து சுவாமிஜியின் கருணை நோக்கினால் சகோதரி நிவேதிதையாக மாறிய ஆன்மீகச் செல்வி அங்கு வந்த போது சுவாமிஜி அவருக்கு உணவு வகைகளைப் பரிமாறி சாப்பிடுமாறு உபசரித்தார். சாப்பிட்டு முடித்தவுடன் கை கழுவ தாமே நீர் வார்த்தார். “சுவாமிஜி, இதை நான் அல்லவா உங்களுக்குச் செய்ய வேண்டும்” என்று நெஞ்சுருக நிவேதிதை கூற, “ ஏன் ஏசுநாதர் தன் சீடர்களின் கால்களையே கழுவி விட்டாரே!” என்று அவர் பதில் அளித்தார்.
“ஆனால், அது. அது.. அவரின் கடைசி தினமாயிற்றே..!!” தொண்டையில் சிக்கித் திணறிய வார்த்தைகள் நிவேதிதையின் வாய்க்கு வரவில்லை.
அதற்குச் சில நாட்களுக்கு முன்பே சுவாமிஜி பஞ்சாங்கம் ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி நாளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அது எதற்கு என்று யாருக்கும் தெரியாது.
தன் யாத்திரையின், அவதார தினத்தின் இறுதி நாளை அவர் தேர்ந்தெடுத்திருந்தார். அது ஜூலை நான்காம் தேதி.
அமெரிக்காவிற்கும் தனக்கு உள்ள ஆன்மிகத் தொடர்பின் அழியாத முத்திரையைப் பதிக்க விரும்பிய வீரத் துறவி தேர்ந்தெடுத்த தினம் அமெரிக்க சுதந்திர தினப் பொன்னாள். என்று வரை அமெரிக்கர்கள் அந்தப் பொன்னாளில் சுதந்திர தினம் கொண்டாடுகிறார்களோ அன்று வரை அவரின் நினைவும் அதில் பூரணமாக்க் கலந்திருக்கும்.
அன்று இரவு சுமார் ஒன்பது மணி அளவில் யோக மார்க்கம் மூலமாக சிரசின் வழியே தன் உயிரைத் துறந்து பர வெளியுடன் கலந்தார் சுவாமிஜி.
எழுமின் விழிமின்
எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை தளராது செல்மின் என்ற கடோபநிஷத்தின் வாக்கியத்தை லட்சியமாகக் கொடுத்து ‘அனைவருக்கும் முக்தி’ என்ற லட்சியத்தை உலக மக்களின் முன் வைத்தார் சுவாமிஜி.
“உலக மாந்தர் அனைவரும் முக்தி அடைய உதவுவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நான் பூமியில் பிறக்கத் தயார்” என்று அறிவித்த அவரது அமிர்த வாக்கியம் மனிதர்களின் உள்ளங்களை எல்லாம் பூரிக்க வைக்கும் கருணை வெள்ளத்தின் அடையாளம் அல்லவா!
சுவாமிஜியின் நினைவை அனுதினமும் போற்றி அவர் காட்டிய வழியில் நடப்போம்! உயர்வோம்!! உய்வோம்!!!
******************
Written by my brother S Nagarajan of Bangalore for “முதல் ஓசை” daily:-
Contact swami_48@yahoo.com







You must be logged in to post a comment.