
யாசிதி இன மக்களின் புனிதச் சின்னம்!
ஆராய்ச்சிக் கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:1232; தேதி 14 ஆகஸ்ட் 2014.
English version of this article is published here on 12th August 2014.
இராக் நாடு முஸ்லீம் நாடு. ஒரு காலத்தில் பாபிலோனிய சுமேரிய நாகரீகங்கள் கொடிகட்டிப் பறந்த நாடு. இப்போது சுடுகாடு என்னும் அளவுக்குச் சண்டை, மண்டை உடைகிறது. இது பற்றி லண்டன் நாளேடுகளில் ஆகஸ்ட் 12ம் தேதி கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியானது. ‘’500 பெண்களும் குழந்தைகளும் உயிருடன் புதைப்பு’’ —என்பதுதான் அந்தச் செய்தி. அதாவது முஸ்லீம் தீவிரவாதிகள், மதம் மாற மறுத்த 500 பழங்குடி மக்களை உயிருடன் புதைத்துவிட்டனர். இந்த விஷயத்தை உலகிற்கு அற்வித்தவர் இராக்கிய மந்திரி சுடானி ஆவார்.
புதைக்கப்பட்ட பழங்குடி மக்கள் யாசிதி இனத்தவர். இவர்களைப் பற்றிய செய்திக்கு அருகிலேயே இவர்கள் யார்? இவர்களுடைய நம்பிக்கைகள் என்ன என்ற வியப்பான செய்திகளும் வெளியாகின. அதைப் படித்த உடனே அவர்கள் இந்துக்கள் என்பது புரிந்தது! இதோ அவர்கள் பற்றி பத்திரிக்கைகள் மற்றும் பி.பி.சி. வெளியிட்ட செய்திகளும் அது பற்றிய எனது விளக்கங்களும்:–
முனிவர்களுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு!!
யாசிதி இன மக்கள் 4000 ஆண்டுப் பழமையான இனம். இவர்கள் பாரசீக சொராஸ்ட்ரியன் மதம், பழங்கால இரானிய (வேத) மதம், கொஞ்சம் இஸ்லாமிய, கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை பின்பற்றுகின்றனர். இப்போது 1,60,00 பேர் மட்டுமே வடக்கு இரக் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் குர்தீஷ் மொழி பேசுகின்றனர்.
கிறிஸ்தவர்களாக இருந்தால் ஜிஸியா வரி கொடுத்தால் வாழலாம் என்றும் யாசிதி இன மக்களாக இருந்தால் இஸ்லாமிய மதத்துக்கு மாற வேண்டும் என்றும் அல்லது படுகொலை செய்வோம் என்றும் ‘ஐஸிஸ்’ இஸ்லாமிய தீவிரவாதிகள் அறிவித்தனர். அதன்படி படுகொலை நீடிக்கிறது என்று லண்டன் ஆங்கிலப் பத்திரிக்கைகள் படங்களுடன் செய்திகள் வெளியிட்டுள்ளன. காரணம் இவர்கள் இந்து மதம் சொல்லும் எல்லா விஷயங்களையும் சொல்லுகிறார்கள். இதோ நீங்களே படித்து முடிவுக்கு வரலாம்:
1.யாசிதி இனமக்களுக்கு மறு பிறப்புக் கொள்கையில் நம்பிக்கை உண்டு: உலகில் மறு பிறப்பை நம்புவோர் இந்துக்களும் அதன் கிளை மதங்களான புத்த, சமண, சீக்கிய மதங்களும் தான். செமிட்டிக் மதங்களான கிறிஸ்தவ, யூத, இஸ்லாமிய மதங்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை இல்லை.
மயிதேவதையைக் குறிக்கும் புனிதச் சின்னம்.
2.யாசிதி இனத்தினர் ஒரே கடவுளை நம்புகின்றனர்: இதுவும் இந்து மதத்தின் கொள்கையே. உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் —–ஏகம் சத் விப்ராஹா பஹூதா வதந்தி —- என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது உண்மை ஒன்றே, அதை முனிவர்கள் பல பெயர்களால் அழைப்பர் என்பது இதன் பொருள்.
3.அந்த ஒரே கடவுள் ஏழு தேவதைகள் மூலம் உலகைப் படைத்தார்: இதுவும் இந்து மதக் கொள்கையே! சப்த ரிஷிக்கள் என்னும் அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரச ரிஷிக்கள் மனித இனத்தைப் படைத்ததை புராணங்கள் கூறும். பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த 7 பெயர்களையும் கூறுவர். சங்க இலக்கியமும் ‘’கை தொழு எழுவர்’’ என்று சப்தரிஷிக்களை விதந்து ஓதும். சப்த ரிஷிக்களில் வசிஷ்டர் என்னும் நட்சத்திரம் அருகில் வலம் வரும் அருந்ததி நட்சத்திரத்தை சங்க இலக்கியம் ஆறு, ஏழு இடங்களில் பாராட்டுவதோடு ஒவ்வொரு இந்து தம்பதியும் முதலிரவு அறைக்குள் போவதற்கு முன் அருந்ததியைக் காண வேண்டும் என்பதும் அனைவரும் அறிந்ததே.
4.இவர்கள் வணங்கும் முக்கியக் கடவுள் மாலக தாவூஸ். இவர் மயில் தேவதை என்று யாசிதிக்கள் கூறுவர்: உலகில் மயில்வாகனக் கடவுளான கார்த்திகேயனை (முருகனை) வணங்குவோர் இந்துக்கள் மட்டுமே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மாலக தாவூஸ் என்பதை நான் பால தேவன் என்றே படிப்பேன். ப— வ — ம—என்ற மூன்று எழுத்துக்களும் இடம் மாறும் என்பது மொழி நூலார் அறிந்த உண்மை.
5.அவர்களுக்கு மயில் புனிதச் சின்னம். இந்தியாவின் தேசியப் பறவையான மயில் சிந்து சமவெளிப் பானை ஓடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதோடு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதை பைபிளும் கூடப் பகர்கிறது.

இளைஞர்களும் பெண்களைப் போல பின்னல் முடி அணிவர்.
6.அவர்கள் தீயை வணங்குவர்: யாகத் தீயை பிராமணர்களும், பாரசீக மதத்தினரும் இன்றுவரை வணங்குவதை உலகம் அறியும். பிராமண பிரம்மச்சாரிகள் தினமும் தீ வளர்த்து சமிதாதானமும், கிருஹஸ்தர்கள் தீ வளர்த்து அக்னிஹோத்ரம்/ஔபாசனமும் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இன்று வரை இதைச் செய்கின்றனர். காலத்தின் கோலம்!!!
7.அவர்கள் சுன்னத்து செய்து கொள்வர், ஐந்து முறை தொழுவர்: இவை இரண்டும் இந்து வழக்கம் அல்ல. இது செமிட்டிக் இன மதங்களின் வழக்கம் அல்லது மத்திய கிழக்கில் செமிட்டிக் மதங்கள் தோன்றுவதற்கு முன்னரே இருந்த வழக்கம் என்று கொள்ளலாம்.
8.யாசிதி இனத்துக்கு அப்பெயர் வரக் காரணம் அவர்கள் யஸ்தான் என்னும் தேவனை வணங்குவதாகும். இது யது நந்தன் (யாதவ குல கிருஷ்ணனின் பெயர்) அல்லது யக்ஞ (யாகம்) என்பதன் மரூஉ — ஆக இருக்கும் என்பது என் ஊகம். வேதத்தில் யக்ஞ சேன, யாக்ஞவல்க்ய, யக்ஞேசு எனப் பல பெயர்கள் வருகின்றன. மேலும் பாரசீக மொழியில் இசட் என்பதன் பொருள் ‘’ஜோதி’’ (தீ/அக்னி) என்பதாகும். இவர்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி புனிதர்களை வணங்குகின்றனர். சுருங்கச் சொன்னால் இவர்கள் வாழும் இஸ்லாமிய நாட்டுக்கும் இவர்களின் நம்பிக்க்கைகளுக்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை!!
9.யாசிதி இன மக்களின் மயில்தேவனான மாலக்தேவூஸை அராபிய மொழியில் சைத்தான் (பேய்) என்பர். முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் தெய்வங்களை ஏற்காதவர்களை சைத்தானை கும்பிடுவோர் (காபிர், பேகன்) என்று அழைப்பதை உலகமே அறியும்.
10.இராக்கில் இந்து மத வாகனங்கள் போல ஏழு கடவுள், வாகனங்களில் பவனி வருவது பற்றிய ஆங்கிலக் கட்டுரையை ஏற்கனவே எழுதி உள்ளேன். அந்தப் பிண்ணனியில் யாசிதி இன மக்களைக் காண்கையில் அவர்கள் இந்து மத எச்ச சொச்சங்களே என்பதில் எள்ளவுக்கும் ஐயம் இருக்காது.
11. இங்கு காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894—1994) தனது சென்னைப் பிரசங்கத்தில் கூறியதை நினைகூறுதல் பொருத்தம். ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சிவா நடனம் முதல் துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு 1400 சம்ஸ்கிருதக் களிமன் படிவ கல்வெட்டு வரை பல விடயங்களைப் பிரஸ்தாபித்த பின்னர் அவர் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார்: “ இதை எல்லாம் கேட்டபின்னர் இந்துக்கள் அங்கெல்லாம் சென்று தங்கள் மதத்தைப் பரப்பினர் என்று எண்ணீ விடாதீர்கள். அங்கும் பழங்காலத்தில் இந்து மதமே இருந்தது. அதன் மிச்சம் மீதியைத்தான் நாம் இப்படிக் காண்கிறோம். அதனால்தான் நமது மதத்துக்கு சநாதன மதம் என்று பெயர்” என்றார்.
ஆக அவர் சொன்னதை நூற்றுக்கு நூறு உண்மை என்று நிரூபிக்கிறது இந்த வார இராக்கிய செய்திகள்!!!!


You must be logged in to post a comment.