யாரிடமும் கற்கலாம்; எப்போதும் கற்கலாம்!!

rkp

கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1262; தேதி:– September 1, 2014.

சில ஆண்டுகளுக்கு முன், லண்டன் சவுத் இந்தியன் சொசைட்டி நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்தியாவில் இருந்து வந்திருந்ததால் எங்கெங்கே போயிருந்தீர்கள்? என்று வழக்கமான பல்லவியுடன் சம்பாஷணையைத் துவக்கினேன்.

திருப்பதிக்கு போனோம்; பெருமாளுக்கு கல்யாணம் செய்தோம் என்று அவரும் பேச்சைத் தொடங்கினார்.
அடக் கடவுளே! திருப்பதி பெருமாளுக்கு கல்யாணம் செய்வதென்றால் நிறைய பணம் செல்வாகுமே! ஏதாவது நேர்த்திக் கடனா? என்று கேட்டேன்.

இல்லை, இல்லை. வீட்டில் உள்ள பெருமாள் உண்டியலில் தினமும் ஒரு பவுண்ட் காசு போடுவேன். மூன்று ஆண்டுகளாக திருப்பதி போகாததால் நிறைய பணம் சேர்ந்துவிட்டது; ஆகவே கஷ்டமில்லாமல் பெருமாள் கல்யாணத்தை முடித்தோம் என்றார்.

என் மூளையில் மின்னல் வெட்டில் பளிச் சென்று ஒரு ‘ஐடியா’ உதித்தது. இந்தியாவில் இருந்து சில உண்டியல்கள் வாங்கி வந்திருந்தேன். அவைகளை வாங்கியதன் நோக்கம்: என் பிள்ளைகளுக்கு காட்டத்தான். அந்தக் காலத்தில் பாட்டி, அம்மா தரும் காசுகளை எப்படி உண்டியலில் சேர்ப்போம், அது நிறைவதற்குள் அதை உடைத்து காசை எடுத்து எப்படிச் செலவழிப்போம் என்ற கதைகளைச் சொல்ல வாங்கியது அவை.

என் சுய புராணத்தை சொல்லிய அந்தக் காலத்திலேயே உண்டியலும் அதன் பணியை இழந்துவிட்டது. இருந்தபோதிலும் தூக்கிப் போட மனம் இல்லாமல் ஒரு ஓரத்தில் வீசி எறிந்திருந்தேன். அன்றிரவு நிகழ்ச்சியில் இருந்து திரும்பி வந்தவுடன் அந்த உண்டியலைக் கண்டுபிடித்து சுவாமி அறையில் கடவுள் படத்திற்கு முன் வைத்தேன். ஒரு நல்ல நாள் பார்த்து தினமும் இரண்டு பவுண்ட் காசுகளைப் போடத் துவங்கினேன். ஒன்று கம்யயூனிட்டி டொனேஷன் (சமூகப் பணிகளுக்கு நன்கொடை) மற்றொன்று கோவில், தெய்வப் பணிகளுக்கு நன்கொடை என்று சங்கல்பம் செய்துகொண்டேன்.

இவ்வாறு சேர்ந்த பணத்தை ஒவ்வொருமுறை இந்தியாவுக்குப் போகும்போதும் கோவில்களுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் நன்கொடை கொடுப்பதில் செலவழித்தேன். இதில் பெரிய மன நிறைவு கிடைத்தது. எனது தந்தை தினமணி பொறுப்பு ஆசிரியராக வேலை பார்த்ததால் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அறிவித்த —பிடி அரிசி திட்டத்துக்கு தினமணியில் பெரிய பப்ளிசிடி கொடுத்ததோடு எங்கள் வீட்டிலும் ஒரு பானை வைத்து தினமும் அதில் பிடி அரிசி போட்டு வாரம் தோறும் கொடுத்து வந்தோம்.

லண்டனில் அதற்கு வாய்ப்பு இல்லாவிடிலும் உண்டியல் மூலம் அந்தப் பணிகளை இந்தியாவில் செய்யமுடிகிறது. லண்டனில் கேன்ஸர் (புற்று நோய்) உதவி நிகழ்ச்சிகள், மற்றும் பல நிதி உதவி நிகழ்ச்சிகளுக்கு கம்யூனிட்டி உண்டியல் பணத்தைச் செலவழிக்கிறேன். சொந்தமான யாத்திரை, பயணச் செலவுகளுக்கு இதில் இருந்து எடுப்பது இல்லை.

இதை இங்கே எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு:

1.இதைப் படிப்பவர்கள் யாராவது, வீட்டில் உண்டியல் வைத்து இப்படிச் சேர்த்தால் நிதி உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வழங்கலாம்.
2.யாரிடமிருந்தும் எதையும் கற்கக்கூடிய மாணவர்களாக நாம் வாழ்நாள் முழுதும் இருக்கவேண்டும் என்ற உண்மையையும் இதில் கற்க முடியும்.

sahanavatu

வி.ஜி.எஸ். சொல்லிக் கொடுத்த பாடம்
பாரதியார் வேலை பார்த்த மதுரை சேதுபதிப் பள்ளிக்ககூடத்தில் நானும் என் சகோதர்களும் படித்தோம். அங்கு பாரதியின் பெயரை சதா சர்வ காலமும் சொல்லி எங்களை எல்லாம் ஊக்குவித்த ஆசிரியர் வி.ஜி.எஸ். எங்களுக்குப் பல நல்ல விஷயங்களைச் செயல் மூலம் கற்பித்தார்.

அவர், எந்த புதுமையான விஷயத்தைப் பார்த்தாலும், நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய எந்தக் கவிதைகளைப் படித்தாலும் உடனே ஒரு (குயர்) நோட்டில் எழுதிவிடுவார். இவ்வாறு அவர் எழுதிய நோட்டுப் புத்தகங்களே ஏராளம். அவ்வப்போது பத்திரிக்கைகளுக்கும் அந்தத் துணுக்குகளை அனுப்புவார். அவை அமுதசுரபி, கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர் முதலிய பல பத்திரிக்கைகளில் வெளியாகும். இதைக் காட்டி எங்களையும் உற்சாகப் படுத்தியதால் நானும் என் சகோதரர்களும் எழுதத் துவங்கி னோம். 1960-ஆம் ஆண்டுகளில் நான் சேகரித்த பல விஷயங்களை இப்போதும் நானும் என் அண்ணனும் கட்டுரை எழுதப் பயன்படுத்து கிறோம்.

நாங்கள் தபால்தலை சேகரிக்கும் பழக்கத்தையும், பழைய காசுகள் சேகரிக்கும் பழக்கத்தையும் அவர் மூலம்தான் கற்றோம். அவரே வறுமையில் வாடிய பள்ளிக்கூட வாத்தியார்!
“சீனிவாசா, கொஞ்சம் காப்பிக்குப் பணம் வேண்டும்” என்று என் அண்ணனிடம் உரிமையோடு வாங்கிச் செல்வார். அப்படிப்பட்டவர், ஒவ்வொரு இந்திய தபால் தலை வெளியீடு நாள் அன்றைக்கும் சேதுபதி பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் தலைமைத் தபால் அலுவலகத்துக்குச் சென்று முதல் நாள் உறை வாங்கி புதிய தபால் தலையை ஒட்டி என் அண்ணனுக்கு தபாலில் அனுப்பிவிடுவார். இன்றும் அவை எங்களிடம் உள்ளன.

நேதாஜி வெளியிட்ட அரிய தபால்தலைகளைக் கூட கண்ணாடி ‘பிரேம்’ போட்டு எங்களிடம் கொடுத்துவிட்டார். அதில் அவர் கைப்பட

“விடுதலை பெறுவதன் நெடுநாள் முன்னரே
வீர சுபாஷ்போஸ் வெளியிட்டதாம் இவை”

என்ற கவிதை வாசகத்தையும் எழுதி எங்களிடம் கொடுத்துவிட்டார். அவ்வளவு பெருந்தன்மை.
இன்று அவர் பூத உடல் மறைந்து போனாலும் புகழ் உடம்பு நீடிக்கிறது. பாரதிக்கு மதுரையில் சிலைவைத்த அவருக்கு எங்கள் மனக் கோவிலில் என்றும் ஒரு சிலை உண்டு.
யாரிடமிருந்தும் எப்போதும் நல்ல விஷயங்களைக் கற்கலாம்!
நீங்களும் ஒரு குயர் நோட்டு எடுத்து பிடித்த விஷயங்களை எழுதுங்கள்.

–சுபம்–

Leave a comment

Leave a comment