கட்டுரை மன்னன் – லண்டன் சுவாமிநாதன்
ஆய்வுக் கட்டுரை எண்:–1267; தேதி 5 செப்டம்பர் 2014
தமிழில் பழமறையைப் பாடுவோம் — பாரதி
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — பாரதி
உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். துருக்கியில் (Bogazkoy Inscription) கிடைத்த களிமண் கல்வெட்டு கி.மு. 1400 ஆண்டிலேயே ரிக்வேதக் கடவுளரைக் குறிப்பிடு வதால் யாரும் அதற்குக் கீழ் இதைக் கொண்டுவர முடியாது. இதற்கும் முன்பாகவே இந்தியாவில் சரஸ்வதி நதி தீரத்திலும் கங்கை நதிக் கரையிலும் வேத முழக்கம் கேட்டிருக்கும்.
ரிக்வேதம் மிகப் பழைய நூல் என்பதால் அதன் பொருள் பலருக்கும் விளங்குவதில்லை. அதை வாய் மொழியாகவே கற்பிக்க வேண்டும் என்பதாலும் யாரும் உரை எழுத முன்வரவில்லை. வேதம் அழிந்து விடுமோ என்று பயந்த வியாசர் அதை கி.மு 3150 வாக்கிலேயே நான்காகப் பிரித்து நமக்குக் கொடுத்தார். அப்படியானால் அதற்கு முன் எவ்வளவு காலத்துக்கு எண்ணற்ற வேதங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பே மேலிடும். இப்போது நம்மிடம் உள்ள வேதம் நூற்றில் ஒருபகுதியே!
ரிக் வேதச் சொற்களுக்குப் பொருள் காண முயன்ற யாஸ்கர் போன்றோர் கி.மு.800 –வாக்கிலேயே திணறத் துவங்கிவிட்டனர். அதற்கு நீண்ட நெடுங் காலத்துக்குப் பின்வந்த சாயனர் என்னும் அறிஞர் வேதத்துக்கு முதல் முதலில் உரை எழுதினார். அவர் நமக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்தவர். வெளிநாட்டு “அறிஞர்கள்”, காசியிலுள்ள சில பண்டிதர்களைக் கொண்டு அரைகுறை ஆங்கிலத்தில் அவர்கள் மூலம் கேட்ட அர்த்தத்தை வைத்து ‘கன்னா பின்னா’ என்று வேதத்துக்குப் பொருள் எழுதினர். இவர்கள் வேதத்தைப் படித்த மூல காரணம் இந்து மதத்தை அழிக்கவேண்டும், இந்தியாவை அழிக்கவேண்டும், அதற்காக இவர்களை வந்தேறு குடியேறிகள் என்று காட்ட வேண்டும் என்பதாகும். நாமும் அப்போது வெள்ளைக்கார ஆட்சியில் இருந்ததால் ஆங்கிலம் படித்த நம்மூர் அறிஞர்கள் பதவி, பட்டம் ஆகிய இரண்டையும் கருத்திற்கொண்டு அவர்களுக்கு ‘’ஆமாம்சாமி’’ போட்டனர்.
இப்போது புதுப் புது தடயங்கள் கிடைப்பதாலும், கம்ப்யூட்டர் முதலிய கருவிகளைப் பயன்படுத்தி ஆராய்வதாலும், துவாரகை முதலிய இடங்களில் கடலுக்கடியில் மூழ்கிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டதாலும், சரஸ்வதி நதிதீர புகைப்படம் ‘நாஸா’ (National Aeronautical and Space Administration) என்னும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் மூலம் கிடைத்ததாலும். டாடா அணுசக்தி நிறுவன ஆய்வாளர்கள் பூமிக்கடியில் மறைந்துபோன சரஸ்வதி நதி நீரை எடுத்து ஆராய்ந்து அதன் பல்லாயிரம் ஆண்டுப் பழமையை வெளியிட்டதாலும் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் எழுதிய வாதங்கள் தவிடுபொடியாகிவிட்டன.
ரிக்வேதம் மிகவும் ரகசியமான, அற்புதமான நூல். இதில் ரகசியம் இருப்பதால் சங்க காலத் தமிழர்கள் வேதங்களுக்கு ரகசியம் (மறை) என்று பெயரிட்டனர். தமிழனின் அபார அறிவுக்கு இதுவும் ஒரு உதாரணம். ரிக் வேதம் அதர்வண வேதம் பற்றி முப்பதுக்கும் மேலான கட்டுரைகளை எழுதி அதன் ரகசியங்களை வெளியிட்டு வருகிறேன். இன்று இந்திரன் பற்றி இரண்டு ரகசியங்களை ஆராய்வோம்.
வேதத்தில் பறக்கும் தட்டா (Flying Saucers)?
முதல் ரகசியம்:
இந்திரன் பறக்கும் மலைகளின் சிறகுகளை வெட்டினான். அதற்குப் பின்னர் மலைகள் பறப்பதை நிறுத்திவிட்டன என்று நமது புராணங்கள் கூறும். இது என்ன? பறக்கும் (Unidentified Flying Oobject= UFO) தட்டுகளின் “ஆண்டெண்ணாக்களை” இந்திரன் வெட்டி வீழ்த்தினானா? அல்லது ஆதிகாலத்தில் பூமியைத் தாக்கிய பெரிய நுண்கிரகங்கள் (Asteroids) , விண்கற்கள் (Meteorites) பற்றிய குறிப்பா? என்று ஆராய வேண்டும். இப்போதும் நாள்தோறும் கோடிக் கணக்கான விண்கற்கள் பூமியைத் தாக்குகின்றன. ஆனால் காற்று மண்டலத்தில் நுழையும் போது அவை கருகிச் சாம்பல் ஆகிவிடுகின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன் தாக்கிய ஒரு நுண்கிரகம் பூமியில் உள்ள டைனோசர் (Dinosaurs) எனும் ராட்சத மிருகங்களை அழித்தன. ஒருவேளை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியைத் தாக்கிய நுண்கிரக விஷயங்களைத் தான் நமது சமய நூல்கள் இப்படிக் கூறுகின்றனவா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். இன்று நான் அதைப் பற்றி எழுதவில்லை.
இரண்டாவது ரகசியம்
இந்திரன் பற்றிய இரண்டாவது ரகசியம் அவன் ஏழு நதிகளை விடுவித்ததாகும். இதை ரிக் வேத துதிகள் மறை பொருளில் பேசும். அஹி என்ற பயங்கர பூதம் (ட்ராகன் Dragon) மற்றும் வலன் என்ற அரக்கன் “பிடித்துவைத்த” ஏழு நதிகளின் தண்ணீரை இந்திரன் விடுவித்தான் என்று வேதத்தில் பல இடங்களில் மந்திரங்கள் வருகின்றன.
வெள்ளைக் காரனிடம் புத்தியை அடகு வைக்காத, எவரும் சுய புத்தி உடைய எவரும், ஏன் “நதிகள்”, “பிடித்துவைத்த தண்ணீர்”, “விடுவித்தல்”– என்ற சொற்கள் வேதத்தில் வருகின்றன என்று சிந்திப்பர். இதை வைத்து ரிஷி முனிவர்கள் வேறு விஷயங்களை மறை பொருளில் சொல்ல வந்தனர் என்று நாம் கொண்டாலும் உவமை என்பதே அந்தக் காலத்தில் இது போன்ற எஞ்சினீயரிங் வேலைகள் நடந்ததைக் காட்டும்.
தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் ஒரு விதி உண்டு. உவமையாகக் கூறப்படும் விஷயம் உவமேயத்தைவிட சிறப்புடையதாக இருத்தல் வேண்டுமென்பது அந்த விதி. ஆக இந்த —-‘’நதி’’, ‘’பிடித்துவைத்தல்’’, ‘’விடுவித்தல்’’ —– என்பதை உவமையில் வரும் சொற்கள் என்று எவரேனும் வாதிட்டாலும் அவை மகத்தான செயல்களாக இருந்த தனால்தான் உவமையாகக் கையாளப்படுகிறது என்பது புலப்படும்.
எல்லா மந்திரங்களையும் கொடுக்க இடமின்மையால் இதோ ஒரு சில மந்திரங்கள்:
வெள்ளங்களோ பலப் பல; அஹியால் பிடிக்கப்பட்டன. ஏ வீரனே! நீ அவைகளைப் பெருகச் செய்தாய், விடுவித்தாய் -– RV. 2-11-2
அஹி என்பது பனிக்கட்டி ஆறுகளாக இருக்கலாம் என்பது சிலர் கருத்து. கிரகணம் முழுவதும் அறிந்து முன் கூட்டி கணக்கிட்டு நமக்கு அறிவித்தப் பஞ்சாங்கப் பிராமணர்கள். இதெல்லாம் வயற்காட்டில் உழும் பாமரனுக்குப் புரியாது என்பதால் ராஹு என்னும் பாம்புத் தலை அரக்கன் (ட்ராகன் ) சந்திரனை விழுங்குகிறது என்று சொன்னது போல இது!
யார் அரக்க பூதம் அஹியைக் கொன்று ஏழு நதிகளை விடுவித்தாரோ, வலனுடைய குகையில் இருந்து பசுக்களை (ஒளியை) விடுவித்தாரோ RV. 2-12-3
பசு என்ற சொல்லுக்கு ஒளி என்ற பொருளும் வேதத்தில் பயன்படுத்த ப்படுவதாக அறிஞர்கள் செப்புவர். பஞ்சாப் என்றால் ஐந்து நதிகள் என்று பொருள். இது ஒரு காலத்தில் ஏழு நதிகள் (சப்த சிந்து) பாய்ந்த பெரிய பூமியாக இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வர்ஜில் (Virgil) கூட சப்த சிந்து என்ற சொல்லை அவர் காவியத்தில் கையாள்கிறார்.
ஏ, இந்திரனே? ஏழு நதிகளின் பிணைப்பை நீ தகர்த்து எறிந்தாய். அப்போது பூமி அதிர்ந்தது. நதிகள் கரை புரண்டு ஓடின. மலைச் சிகரங்களைப் பிளந்து கொண்டு தண்ணிர் பெருக்கெடுத்தது. ஒரு தாய் தன் குழந்தையை நோக்கி ஓடுவது போல அவை உன்னை நோக்கி ஓடிவந்தன. தடை பட்ட நதிகளை நீ விடுவித்தாய்! – RV. 4-19-3/5
தாய்-குழந்தை உவமை படித்துப் படித்து ரசிக்கவேண்டிய அற்புதமான வேத கால உவமை!! ரிக் வேதத்தில் ஒரே கவிதையில் 27 உவமைகள் இருப்பது பற்றி நான் எழுதிய கட்டுரையயும் காண்க.
ஆங்கிலத்தில் இரண்டாவது உலக மஹாயுத்த காலத்தில் ஒரு அணையைத் தகர்க்கச் சென்ற படைகள் பற்றி ‘’தி டேம் பஸ்டர்ஸ்’’ என்று ஒரு திரைப்படம் வந்தது. அது போல இந்திரன் மலைப் பாறைகளைத் தகர்த்து தண்ணீரைக் கொண்டுவந்தான் என்றே எண்ண வேண்டியுள்ளது.
ரிக் வேதத்தில் புரியாத விஷயங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. வேதத்தை மொழி பெயர்த்த கிரிப்பித் (Griffith) போன்றோர் பக்கத்துக்குப் பக்கம் இதன் பொருள் விளங்கவில்லை என்று அடிக்குறிப்பு சேர்த்துள்ளனர். ரிக் வேதத்தில் இந்திரன் பற்றி எழுதப்பட்டதை அவர்கள் மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்துள்ளனர். அவர்கள் தெளிவு படுத்தாத விஷயங்கள்:
1,இந்திரன் ஒரு ஆளா? பல நபர்கள் இந்திரன் என்ற பெயரில் இருந்தனரா?
2.இந்திரன் என்பது பிரதமர், ஜனாதிபதி, போப், சங்கராச்சார்யார் என்பது போல ஒரு பட்டமா, Title டைட்டிலா?
3.இந்திரன் என்பவன் அரசனா? கடவுளா?
4.இந்திரன், மனிதர்கள் போல நூறு ஆண்டு ஆயுள் உடையவனா அல்லது ஆயிரம் ஆண்டு, பல நூற்றாண்டு வாழ்ந்தவானா?
5.இந்திரன் என்பது மழை, வானவில், இடி, தண்ணீர் போன்றவற்றின் அதிதேவதையான கடவுளா?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை காணாமல், சில இடங்களில் அவனை மனிதன் போலவும், சில இடங்களில் அவனை இயற்கைச் சக்திகளின் அதி தேவதை போலவும் மனம் போன போக்கில் மொழி பெயர்த்துவிட்டனர். இதில் ஜெர்மானிய, பிரெஞ்சு, ஆங்கில “அறிஞர்கள்” இடையே பயங்கர கருத்து வேறுபாடு வேறு!!
உண்மையில் இந்திரன் என்பது கடவுளையும் அரசனையும் குறிக்கும். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் அரசனுக்கும் தெய்வத்துக்கும் ஒரே சொல்லே பயன்படுத்தப்படுகிறது. தொல்காப்பியரும் தமிழர் கடவுளான இந்திரனை வேந்தன் என்றே குறிப்பிடுவார். மற்ற ஒரு தமிழர் கடவுளான வருணனை மட்டும் வருண என்ற சம்ஸ்கிருதப் பெயரிலேயே குறிப்பிடுவார்.
உலகின் முதல் சிவில் எஞ்சினீயர்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பிளாக்கில் எழுதிய Great Engineers of Ancient India ஆராய்ச்சிக் கட்டுரையில் பகீரதன் மகத்தான திட்டங்கள் தீட்டி கங்கை நதியைத் திசை திருப்பிவிட்டதை எழுதி இருந்தேன். அவன் மிகப்பெரிய எஞ்சினீயர். அவன் பல ஆண்டுகள் திட்டம் தீட்டி வெற்றி பெற்றதை, அவன் ‘’ஒற்றைக்காலில் பல்லாயிரம் ஆண்டுகள் நின்று தவம் செய்து’’ கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்தான் என்று புராணங்கள் சங்கேத பாஷையில் பகரும். அதே கட்டுரையில் பாரத நாட்டின் முதல் அக்ரிகல்சுரல் (Agricultural) எஞ்சினீயர் பலராமன் என்பதையும், விந்திய மலை மூலமாக தென் இந்தியாவுக்கு முதலில் ரோடு போட்டவர் அகத்தியர் என்றும் தென் கிழக்காசியாவுக்கு முதல் கடற்படை கொண்டு சென்றவர் அகத்தியர் என்றும் எழுதினேன். இதைத் தான் புராணங்கள் சங்கேத மொழியில், ‘விந்திய மலை கர்வ பங்கம்’, ‘அகத்தியர் கடலைக் குடித்தார்’ என்றெல்லாம் எழுதின என்பதையும் விளக்கினேன்.
கடந்த பல ஆண்டுகளாக நான் நடத்திய இன்னும் ஒரு ஆராய்ச்சியில் புலப்பட்ட விசயம் பகீரதனுக்கு மாபெரும் சிவில் எஞ்சீயரிங் புராஜெக்டை (Civil Engineering Project) மனதில் தோற்றுவித்தவனே இந்திரன் என்பதாகும். ரிக்வேதத்தில் ஆயிரத்துக்குக் அதிகமான இடங்களில் இந்திரன் பெயர் வருகிறது. இன்று நேபாளம் முதல் இலங்கையின் தென் கோடி கண்டி வரை எல்லோரும் இந்திரனின் பெயரையும் அவன் மனைவி இந்திராணி (சசி) பெயரையும் சூட்டி வருகிறோம். தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுதும் சங்க காலத் தமிழர் கொண்டாடிய இந்திர விழாவை இன்றும் Water Festival வாட்டர் fபெஸ்டிவல் (நீர் விழா) என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். நேபாளத்திலும் இது நடைபெறுகிறது. ஆக உலகின் மிகப் பழைய கடவுள் இன்று வரை நம் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டான். தமிழ் நாட்டில் உள்ள 38,000 கோவில்களிலும் நடக்கும் யாக யஞங்களில் இந்திரன் பெயர் வருகிறது. பிராமணர்களாகிய நாங்கள் தினமும் இந்திரன் பெயரில் ஒரு நாளைக்கு மூன்று முறை சந்தியாவந்தனம் செய்கிறோம்.
Indra in Indus Valley tablet (Indra is called Chakra/wheel in Hindu and Buddhist scriptures)
உலக மகா யுலிஸிஸ், ஜில்காமேஷ், ராம்சஸ் முதலிய கிரேக்க, சுமேரிய, எகிப்திய ‘ஹீரோ’-க்கள் எல்லாம் ‘ஜீரோ’—க்களாக (Hero to Zero) மாறி மியூசியங்களுக்குள் ஒளிந்து கொண்டுவிட்டனர். இந்திரன் மட்டும் சரஸ்வதி, கங்கை நதி தீரத்தில் கொடிகட்டிப் பறந்த மாதிரியே இன்றும் கொடிகட்டிப் பறக்கிறான். எங்கெங்கெலாம் இந்துக் கோவில்கள் உள்ளனவோ, எங்கெங்கெல்லாம் பிராமணர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்கின்றனவோ அங்கெங்கெல்லாம் இந்திரன் புகழ் பாடப்படுகிறது.
வாழ்க தொல்காப்பியன்! வளர்க அவன் பாடிய இந்திரன், வருணன்!!
–சுபம்–







You must be logged in to post a comment.