கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1451; தேதி 2 டிசம்பர், 2014.
சுமேரியாவில் ஹிட்டைட்ஸ் இனத்தினர் கொண்டாடிய வசந்த கால விழாவின் பெயர் புருள்ளி, இந்துக்கள் கொண்டாடும் வசந்த கால விழாவின் பெயர் ஹோலி, கொங்கர்கள் கொண்டாடும் விழாவின் பெயர் உள்ளி. பெயரில் மட்டுமின்றி குறைந்தது இரண்டு விழாக்களி லாவது வசந்த காலத்தின் பெயர் வருகிறது. இதில் ஹோலியைத் தவிர மற்ற இரண்டு விழாக்களின் விவரங்கள் மிக மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன.
உள்ளி விழாவைப் பற்றி அகநானூறு 368-ல் மதுரை மருதன் இளநாகனார் பாடி இருக்கிறார்.
“வாழி தோழி! கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப்பட்டே” என்று பாடல் முடிகிறது.
பொருள்: கொங்கு நாட்டு மக்கள், இடையில் மணியைக் கட்டிக்கொண்டு தெருவில் ஆடும் உள்ளி விழாவின் போது ஏற்படும் ஆரவாரம் போல பலர் வாயிலும் பேசப்பட்டு (காதல் விவகாரம்) வதந்தி (அலர்) பெரிதாகப் பரவிவிட்டது. இன்னும் சில பாடல்களில் இருந்து இது சேர நாடு முழுதும் கொண்டாடப்படதும் தெரிகிறது.
இது தவிர வேறு செய்திகள் கிடைக்கவில்லை.

ஹோலி விழா, வசந்த காலத்தை வரவேற்கும் விழா ஆகும். வண்ணப் பொடிகளைத் தூவி வசந்தத்தின் வருகையைக் கொண்டாடுவர். ஹிரண்யகசிபுவின் சகோதரி ஹோலிகா எரியுண்ட தினம் அது என்பதால் அன்று சொக்கப்பனையில் அவள் உருவத்தை எரிப்பர். சிறுவன் பிரஹலாதனை ஏமாற்ற முயன்று அவள் ஏமாந்தாள் என்பது கதை.ஆகவே ஹோலி என்பது துஷ்ட சக்திகளை நல்ல சக்திகள் வென்ற நாளாகும்.
சுமேரிய விழா
சுமேரியாவில் ஆண்ட ஹிட்டைட்ஸ் என்பார், சம்ஸ்கிருதம் தொடர்பான மொழியைப் பேசியவராவர். அவர்கள் பூருள்ளி என்னும் விழாவை வசந்த கால விழாவாகக் கொண்டாடினர். இல்லுயங்கா என்னும் தீய பாம்பைக் கொன்றதாகவும் கதை சொல்லுவர். அதாவது அந்த நாளன்று நாம் பாராயணம் செய்வது போல இல்லுயங்கா கொல்லப்பட்ட கதையைப் படிப்பர். மன்னன் இதில் முக்கியமாகக் கலந்து கொள்ள வேண்டும். ஆகையால் போர் செய்து கொண்டிருந்தாலும் அதை இடையில்நிறுத்திவிட்டு விழாவுக்கு வந்து விடுவார். இல்லுயுங்கா பற்றிய பாடல்களில் நமது புராணக் கதை போல விரிவான கதை இருக்கிறது.
இதே போல ரிக் வேதத்திலும் அஹீ, விருத்திரன் என்ற பாம்புகளைக் கொன்றதாகவும் சொல்லுவர். அவை எல்லாம் பாம்புகள் அல்ல, வறண்ட காலத்தை அப்படி ராட்சதன் போலவும் , பாம்பு போலவும் வருணிப்பர் என்று புராணச் செய்திகளை ஆராய்வோர் பகர்வர். அசுரனைக் கொல்வது, பாம்பைக் கொல்வது என்பதெல்லாம் ப்ழங்குடி மக்களின் மறை மொழி வாசகங்கள்!
உள்ளி, பூருள்ளி, ஹோலி – ஆகிய மூன்று பண்டிகைகளில் ஓரளவு ஒற்றுமை இருப்பதைக் காண்கையில் நமக்கு வியப்பாக இருக்கலாம்.
Pictures are used from other websites;thanks.



You must be logged in to post a comment.