ஆருத்ரா தரிசனம்: அப்பர் அருளிய திருவாதிரை பதிகம்

nataraja, himalayan academy

5-1-2015 ஆருத்ரா தரிசனம்

கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1545; தேதி 4 January, 2015.

 

ஆருத்ரா தரிசனம்: அப்பர் அருளிய திருவாதிரை பதிகம்

By ச.நாகராஜன்

அப்பர் அருளிய தேவாரம்

தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் முழுவதிலும் இறை ரகசியங்கள் உள்ளடங்கி உள்ளன. அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நால்வகைப் பேறுகளையும் பெற தேவாரம் ஓதுதல் சுலபமான வழி.சைவர்களின் மந்திரமாக விளங்கும் தேவாரம் பாரதப் பண்பாட்டின் உயரிய ஆன்மீக நிலையைச் சுட்டிக் காட்டும் ஒப்பற்ற பக்தி இலக்கியம்.

தேவாரத்தில் அப்பர் அருளிய முக்கியமான பத்துப் பாடல்களைக் கொண்ட திருவாதிரைப் பதிகம் ஆருத்ரா தரிசன ஆனந்தத்தால் விளைந்த ஒன்று. இந்தப் பதிகம் எழக் காரணமாக அமைந்ததோ இரு பெரும் மகான்களின் சந்திப்பு!

திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை  முருக நாயனார் மண்டபத்தில் அப்பர் பெருமான் சந்தித்தார். அப்போது திருவாரூரிலிருந்து வந்த அப்பரை நோக்கி ‘ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!’, என ஞானசம்பந்தர் வினவினார். உடனே தான் கண்ட ஆருத்ரா விழாப் பெருமையை ஒரு பதிகம் பாடி அப்பர் விவரித்து அருளினார்.

அந்தப் பதிகம் திருவாதிரைப் பதிகம் என்ற சிறப்புப் பெயரால் புகழ்பெற்று இன்று  வரை அனைவராலும் ஓதப்பட்டு வருகிறது.

kali, tiruvadirai

Tiruvadirai Kali

இதைப் பாடினால் பெண்கள் சுமங்கலிகளாய் தங்கள் கணவனுடன் ஒற்றுமையாய் நோய் நொடியின்றி புத்திர பாக்கியத்துடன் நெடிது சௌபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

 

சிவபிரானின் ஆருத்ரா நட்சத்திரம்

ஆருத்ரா நட்சத்திரம் சிவபிரானுக்குரிய நட்சத்திரம். (இந்த நட்சத்திரத்தின் பெருமையை இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய நட்சத்திர ரகசியங்கள் தொடரில் ஆதிரை உக்கிரம் என்ற கட்டுரையில் படித்து மகிழலாம்)

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபிரான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார். எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம். சிவபிரானுக்கே ஆதிரையன் என்ற பெயர் உண்டு.

ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்
போது இயலும் முடி மேல் புனலோடு அரவும் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே

என இப்படி திருஞானசம்பந்தர் ஆதிரையன் புகழ் பாடிப் பரவுகிறார்.

arudra kuuttu

Tiruvadirai Kuuttu

ராவணனின் அற்புதமான சிவ தாண்டவ ஸ்லோகம்

இறைவனின் சிவதாண்டவத்தைக் கண்டு பிரமித்துப் போன சிவபக்தனான ராவணன் சிவதாண்டவ ஸ்லோகத்தை இயற்றியுள்ளான்.இதைக் கேட்போர் எல்லையற்ற ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் மந்திரச் சொற்களினால் வரும் ஆனந்தத்தையும் அடைவர். ராவணனின் கூற்றுப்படி இதைக் கேட்போர் சிறந்த சிவபக்தியைப் பெற்று சிவனின் அருளும் பெற்று வாழ்வர்

(ராவணனின் சிவ தாண்டவத்தை யூடியூபில் கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=CPVSLjBjxeY இதில் ஐந்து நிமிடம் 32 விநாடிகள் கேட்கலாம். https://www.youtube.com/watch?v=HJ3sb_GqBGg இதில் ஐந்து நிமிடம் 16 விநாடிகள் கேட்கலாம்.. https://www.youtube.com/watch?v=7jrpyQDBS-I இதில் ஒரு நிமிடம் 56 வினாடிகள் கேட்கலாம்; https://www.youtube.com/watch?v=e-GVlj7_UPQ இதில் 46 வினாடிகள் கேட்கலாம்.மாலை நேரத்தில் குறிப்பாக பிரதோஷத்தின் போது கேட்பது மிகவும் சிறந்தது)

திருவாதிரைப் பதிகம்

இத்தகைய பெருமை கொண்ட ஆதிரை நாளை அப்பர் எப்படிப் பாடி விளக்குகிறார், பார்ப்போமா:-

பாடல் எண் : 1
முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 nataraja, fb

பாடல் எண் : 2
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு 
அணியான்  ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.   

பாடல் எண் : 3
வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள்  ஒளிதோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதியாரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 

பாடல் எண் : 4
குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்
பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்
வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்
அணங்கன் ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 

பாடல் எண் : 5
நிலவெண்சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரும்இட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்
கலவமஞ்ஞை கார்என்று எண்ணிக் களித்துவந்து  
அலமர்ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 

பாடல் எண் : 6
விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண்பு இலராய்த் தரியார் தலையால்  முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தையென்  அப்பன்  என்பார்கட்கு 
அம்மான்ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.   

 

பாடல் எண் : 7
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்
இந்திரனாதி வானவர்சித்தர் எடுத்தேத்தும்                                                           அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.  

 nalvar and  natraj

பாடல் எண் : 8
முடிகள் வணங்கி மூவாதார் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்
பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம். 

பாடல் எண் : 9
துன்பநும்மைத் தொழாதநாள்கள்  என்பாரும்
இன்பநும்மை ஏத்து நாள்கள்  என்பாரும்
நும்பின் எம்மை நுழையப்பணியே என்பாரும்
அன்பன் ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 

பாடல் எண் : 10
பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்
சீரூர்பாடல்  ஆடல் அறாத செம்மாப்பார்ந்து 
ஓரூர் ஒழியாது உலகமெங்கும் எடுத்தேத்தும்
ஆரூரன்றன்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.

அனைவருக்கும் பொருள் புரியும் வண்ணம் எளிதாக அமைந்துள்ளன இப்பாடல்கள்.

 ரமணர் அவதரித்த ஆருத்ரா நாள்

ரமண மஹரிஷி ஆருத்ரா தரிசன நாளன்று பிறந்தவர் என்பதால் இந்த திருவாதிரைப் பதிகத்தைக் கேட்டு ஆனந்தித்து உத்வேகம் பற்ற ரமண மஹரிஷியின் அணுக்கத் தொண்டரான முருகனார் ரமணரின் மீது பக்திப் பாடல்களை இயற்றினார்.

சிவசக்தி அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ சத்ய சாயிபாபாவும் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவரே. விறல்மிண்ட நாயனார், அரிவாட்டாய நாயனார் கணநாத நாயனார், கூற்றுவ நாயனார், சடைய நாயனார் ஆகியோரும் திருவாதிரை நட்சத்திரத்தில் உதித்தவர்களே! இவர்களுள் சடைய நாயனார் மார்கழி திருவாதிரையில் ஆருத்ரா தரிசன நாளன்று உதித்தவர்.

ஆதிரையனின் அற்புத நடனத்தை நினைத்து, பெரும் சித்தியைத் தரவல்ல திருவாதிரைப் பதிகத்தை உணர்ந்து ஓதி சிவபிரானைத் துதித்து வணங்கி நலம் பெறுவோமாக!

contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: