ஆடு முதல் காடு வரை சில நியாயங்கள்!

elephant 3

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. ஆடு முதல் காடு வரை சில நியாயங்கள்!

 

கட்டுரையாளர் – S Nagarajan

 

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1581; தேதி 17 ஜனவரி 2015

 

by ச.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்.

 

अन्धगज न्याय:

Andha gaja nyayah

அந்த கஜ நியாயம்

அந்த: – குருடன் ; கஜ – யானை

 

குருடன் யானையைப் பார்த்த கதை என்று பரவலாக அறியப்படும் நியாயம் இது.

சில குருடர்கள் யானை எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்பினர். ஒருவன் துதிக்கையைத் தொட, இன்னொருவன் யானையின் காதைத் தொட, இன்னொருவன் யானையின் காலைத் தொட அடுத்தவன் யானையின் வாலைத் தொட்டான்.பின்னர் தாங்கள் கண்ட்தை ஒவ்வொருவரும் விவரிக்க ஆரம்பித்தனர். முதலாமவன் யானை ஒரு கொழுத்த பாம்பு போல இருக்கிறது என்கிறான்.அடுத்தவன் அது ஒரு முறம் போல இருக்கிறது என்கிறான். அடுத்தவன் அது தூணைப் போல இருக்கிறது என்கிறான்..வாலைத் தொட்டவனோ அது ஒரு கயிறு போல இருக்கிறது என்கிறான். ஒருவர் சொன்னதை இன்னொருவர் மறுக்க பெரிய சண்டையே வருகிறது. தான் சொன்னது தான் சரி என்று ஒவ்வொருவனும் நம்பியதால் ஏற்பட்ட குழப்பம் இது.

இந்த நியாயம் ஒரு விஷயத்தின் ஒரு பகுதியையே ஒருவன் பார்க்கும் போது ஏற்படும் தவறை விளக்குகிறது.

ஒரு பக்கம் சார்புடைய, சரி இல்லாத, ஒரு பக்க பார்வையைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுகிறது.


blindmen-elephant

अन्धचटकन्यायः

Andha cataka nyayah

அந்த சடக நியாயம்

அந்த: – குருடன் சடக – குருவி

இது ஒரு குருடன் குருவியைப் பிடித்ததைச் சொல்கிறது. குருடனால் குருவியை எப்படிப் பிடிக்க முடியும்?

திடீரென்று எதிர்பாராமல் தற்செயலாக நிகழ்ந்தவற்றையும் தெய்வீகத்தால் நிகழும் தற்செயல் ஒற்றுமைகளையும் இந்த நியாயம் விளக்குகிறது. தற்செயலாக ஒருவன் ஒரு அரிய காரியத்தைச் செய்து விட்டால் அது அவனது சாமர்த்தியத்தினால் அல்ல; தெய்வீகத்தால் நிகழ்ந்த ஒன்று.

अरण्यरोदनन्यायः

Aranya rodana nyayah

அரண்ய ரோதன நியாயம்

அரண்யம் – காடு ரோதனம் – அழுதல்

காட்டில் உரக்க அழுவதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

ஒருவன் சிலரிடமிருந்து உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். அதுவோ வரவில்லை. அப்போது அவன் மனநிலையைச் சுட்டிக் காட்டுகிறது இது.

காட்டில் அழுது என்ன பிரயோஜனம்? உதவியோ வரப்போவதில்லை! அந்த நிலையை சுட்டிக் காட்ட இந்த நியாயம் பிரயோகிக்கப்படும்.


asoka

अशोकविनकान्यायः

asoka vanika nyayah

அசோக வனிகா நியாயம்

அசோக வன நியாயம் என அழைக்கப்படும் நியாயம் இது.

சீதையை அசோகவனத்தில் ராவணன் சிறை வைக்கிறான். சீதையை அசோகவனத்தில் ஏன் வைக்க வேண்டும். வேறு இடங்கள் இல்லையா? எத்தனையோ இடங்கள் இருக்கிறதே, லங்கையில்!

ஒரு விஷயத்தைச் செய்ய ஏராளமான வழிகள் இருக்கும் போது அத்தனை வழிகளும் நல்ல வழிகளாகவே இருக்கும் போது ஏதோ ஒரு குறிப்பிட்ட வழி சிறந்தது என்றோ உகந்தது என்றோ சொல்ல முடியாமல் இருக்கும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.

अजाकृपाणकन्यायः

aja krpanaka nyayah

 

அஜா க்ருபானக நியாயம்

அஜ – ஆடு க்ருபானகம் – கூரிய கத்தி

ஆடும் கூரிய கத்தியும் என்ற இந்த நியாயம் ஆபத்தான விஷயங்களில் ஈடுபடக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்ட எழுந்த ஒன்று.

 

ஆடு ஒன்று கூரிய கத்தி முனையில் தன் கழுத்தை வைத்துச் சொறிந்து கொள்கிறது. இதன் விளைவாக கழுத்து அறுபட்டு இறக்கிறது.

 

இதே போல ஆபத்தான விஷயங்களில் தலையைக் கொடுத்து அழிந்து போவதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது. ஆபத்தான விஷயங்களில் வலிய ஈடுபடுதல் கூடாது.

இப்படிப்பட்ட நியாயங்கள் தலைமுறை தலைமுறையாக கிராமங்களிலும் நகரங்களிலும் பண்டிதர்களின் பட்டி மன்றங்களிலும் அரச சபைகளிலும் சுட்டிக் காட்டப்பட்டு வந்துள்ளன.

பல நூல்களிலும் ஒரு விஷயத்தை விளக்கும் போதோ அல்லது உரை எழுதும் போதோ இவை மேற்கோள்களாகச் சுட்டிக் காட்டப்படுவதையும் பழம் நூல்களின் வாயிலாக நாம் அறியலாம்.

 

பாரத வாழ்க்கைமுறையின் ஒரு உன்னதமான அறிவு முறை இந்த நியாயங்கள்!

contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment