படத்தின் வலது கீழ்க் கோடியில் நமஸ்காரம் செய்வதையும், கை குவித்து
கும்பிடுவதையும் காணலாம். பழங்காலத்தில்— இந்துமுறை வழிபாடே இருந்தது
ஆய்வுக் கட்டுரை எண்: 1632; தேதி : 8 பிப்ரவரி 2015
கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
ஏசு கிறிஸ்து என்று ஒருவர் கிடையவே கிடையாது, அவர் புத்த மத துறவிதான் என்னும் பொருள்படக்கூடிய ஒரு சுவையான விஷயத்தை சுவாமி விவேகாநந்தர் கூறுகிறார்:
“நான் இங்கிலாந்துக்கு கப்பலில் திரும்பிவந்து கொண்டிருந்தபோது ஒரு விநோத கனவு கண்டேன். ரிஷி போல தோற்றம் உடைய ஒருவர் என் முன்னே தோன்றி நான் தேரபுத்தர் என்னும் புராதன வகுப்பைச் சேர்ந்தவன். நாங்கள் ரிஷி முனிவர்களின் வழிவந்தவர்கள். எங்களுடைய கொள்கைகள், போதனைகளை மக்கள் கிறிஸ்து சொன்னதாகச் சொல்லி பரப்பி வருகின்றனர். உண்மையில் கிறிஸ்து என்று ஒருவர் பிறந்ததே இல்லை. இந்த இடத்தைத் தோண்டிப்பார்த்தால் அதற்கான தடயங்கள் கிடைக்கும் என்றார். உடனே நான் எந்த இடத்தைத் தோண்டிப்பார்த்தால் அதற்கான தடயங்கள் கிடைக்கும்? என்று திருப்பிக் கேட்டேன். அந்தப் புனித மகான், துருக்கி என்னும் இடத்தை நோக்கிக் கையைக் காட்டினார். இதற்குள் என் கனவு கலைந்துவிட்டது. உடனே நான் கப்பலின் மேல் தளத்திற்கு ஓடிப்போய் கப்பல் எங்கே இருக்கிறது? இது என்ன இடம்? என்று மாலுமியிடம் கேட்டேன். அதோ பாருங்கள். துருக்கி, அதன் அருகில் இருக்கும் தீவு கிரீட் தீவு என்றார். அப்பொழுது கப்பல் மத்திய தரைக் கடலில் சென்று கொண்டிருந்தது”
இந்த சம்பவம் ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட விவேகாநந்தர் சம்பாஷணைகள் என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குப் பின்னர் விவேகாநந்தர் இந்த விஷயத்தை ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.
புத்தர் தலையைச் சுற்றி வரையப்படும்
ஒளிவட்டம் — ஏசுவைச் சுற்றறீருப்பதை பழைய ஓவியங்களில் காணலாம்.
பைபிளில் அத்வைதம்!
அத்வைதம் என்பது என்ன? அவ்வையார் அழகாகக் கூறிவிட்டார்: ஒன்றாகக் காண்பதே காட்சி! நாம் அனைவரும் இறைவனின் ஒரு அம்சம். அதை உணரும்போது முக்தி கிட்டும்—அஹம் பிரம்மாஸ்மி! – என்பது அத்வைதம்.
இவ்வளவு பெரிய கொள்கையை – இந்துக்கள் போற்றிவரும் கொள்கையை —பாலைவன ஆட்டிடையர்கள் இடையே சொன்னால் அவர்களுக்குப் புரியாது. கல்லைக் கொண்டு எறிந்து விரட்டி விடுவார்கள். ஆகவே ஏசு தனது சீடர்களின் பக்குவத்தை அறிந்து அவர்களை படிப்படியாக அழைத்துச் செல்வதை விவேகாநந்தர் அழகாக எடுத்துரைக்கிறார்.
முதலில் ஏசு சொன்னார்: பர மண்டலத்தில் இருக்கும் பிதாவை நேசியுங்கள்; அதாவது வானுறையும் தெய்வத்தை வழிபடுங்கள் என்று. பின்னர் பக்குவம் அடைந்த சீடர்கள் இடையே பேசுகையில் நான் தான் மரம்; நீங்கள் அதன் கிளைகள் என்றார். மிகவும் பக்குவம் அடைந்த சிஷ்யர்கள் இடையே பேசுகையில் “ நானும் என் பிதாவும் ஒருவரே என்றார். இது அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி என்ற உபநிஷத மகா வாக்கியங்கள்”
சுவாமி விவேகாநந்தரின் இந்த சொற்பொழிவு, ஏசு, இமய மலைக்கு வந்து குருகுல வாசத்தில் உபநிஷதங்களைக் கற்றதை உள்ளங்கை நெல்லிக் கனி போல விளக்கும்.
மேலும் புத்த மதத்தினர் — பிரசாரகர்களுக்கு என்ன என்ன வழிமுறைகளைப் பின்பற்றினரோ — அதே முறைகளை கான்வெண்டுகள் பயன்படுத்தின. உபநிஷதக் கதைகள் போல பல குட்டிக் கதைகளை ஏசுவும் சொன்னார். குருடன் குருடனை வழி நடத்துவது போல என்ற கடோபநிஷத், திருமந்திர உவமைகளையும், பாலும் தேனும் ஆறாக ஓடும் என்ற சம்ஸ்கிருத சொற்றொடர் களையும் பைபிள், ஏசு உரைகளில் காணலாம்
ஏசுவின் சீடர்கள்– புத்த மத வழக்கங்களை மேற்கொண்டனர்.
ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 250 ஆண்டுகளுக்கு முன்னரே மாமன்னன் அசோகன் உலகம் முழுதும் புத்த மதப் பிரசாரகர்களை அனுப்பியதால் பலருக்கும் இவ்வழி முறைகள் பற்றித் தெரியும். நூற்றுக் கணக்கான புத்தமத பழக்க வழக்கங்களை, துவக்க கால கிறிஸ்தவ பிரசாரகர்கள் பயன்படுத்தியதை‘The Original Jesus’ written by E R Gruber and G Kersten என்ற புத்தகத்தில் காணலாம்.
ஏசு கிறிஸ்துவை மீன் என்று அழைத்தது எதனால்?
ஏசு கிறிஸ்துவுக்கும் கிரேக்க நாட்டுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவனைக் கூப்பிட்டு மூக்கைத் தொடு என்றால் நேரடியாக மூக்கைத் தொடுவதற்குப் பதிலாக கழுத்துக்குப் பின் கையை வளைத்துத் தொட முயற்சிப்பதற்கு இது சமம்.
ரோமானிய (இத்தாலி) சாம்ராஜ்யத்தில் ஏசுவுக்கு துவக்க காலத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஆகையால் கிறிஸ்தவ மதத்தினர் ஏசுவைக் குறிக்க, மீன் என்று பொருள்படும் கிரேக்க சொல்லைப் பயன்படுத்தினர். இது ஒரு நீண்ட சொற்றொடரின் முதல் எழுத்துக்களால் ஆன சுருக்கச் சொல் என்று ஆராய்ச்சியாளர்கள் கஷ்டப்பட்டு பொருள் கண்டனர்.
பானை என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்று கேட்டால் பாலும் நெய்யும் வைக்கும் பாண்டத்துக்கு பால்+நெய்= பானை என்று எட்டுக்கட்டி பொய் சொல்வது போன்றதே இது.
உண்மையில் ‘’ஜஸ’’ என்ற சம்ஸ்கிருத சொல் மீனைக் குறிக்கும். ஜஸானாம் ச மகர அஸ்மி == மீன்களில் நான் மகரமாக இருக்கிறேன் – என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையின் விபூதி யோகத்தில் சொல்லி இருக்கிறார். ஆக ‘’ஜஸ’’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லையே (ஜஸ= ஜீஸஸ்) கிறிஸ்தவர்கள் சங்கேதச் சொல்லாக பயன் படுத்தினர் என்று பொருள் கொள்வதே பொருத்த முடைத்தாம்.
மீன் சின்னம் அதிர்ஷ்ட சின்னம் என்பதால் உலகம் முழுதும் – அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே பயன்படுத்தினர்.
இதுவரை சொன்ன விஷயங்களில் இருந்து ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை, அவர் தேர புத்தர்- ஈசான்ய வகுப்பைச் சேர்ந்த ஒரு துறவி என்றும், இந்து மதக் கருத்துக்களைக் கற்று- பாலை வன ஆட்டு இடையர் களுக்குப் புரியும் வகையில் அவர் சொன்னார் என்றும், இந்துக்களைப் பொறுத்தவரையில் அவருடைய போதனைகள் வெறும் அரிச்சுவடி என்றும் துணிய முடிகிறது
இந்தக் கட்டுரை மூன்றாம் தொடரில் நிறைவு பெறும்.



You must be logged in to post a comment.