Oil Lamp picture from Wikipedia
Written by S Nagarajan
Article No 1691; Date 5th March 2015
London Time: 6 am
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
19. எண்ணெய் இல்லாமல் விளக்கை எரிப்பது எப்படி?
ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:
अन्तेरंडाविवाहश्चेदादावेव स कुतो न इति न्यायः
ante randavivahascedadaveva sa kuto na iti nyayah
அந்தே ரண்டாவிவாஹஷ்சேதாதாவேவ ச குதோ ந இதி நியாயம்
விதவையைக் கல்யாணம் செய்வது பற்றிய நியாயம் இது.
ஒரு விதவையைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினால் ஏன் அவள் மணம் புரிந்து கொண்டு விதவையான பின்னர் அவளை மணம் புரிந்து கொள்ள விரும்ப வேண்டும்? அவள் கன்னியாக இருந்த போது அவளை மணம் முடித்திருக்கலாமே!
இந்த நியாயம் ஒரு காரியத்தை அது முடிக்க வேண்டிய உரிய காலத்தைக் கடந்து விட்ட பின்னர் முடிக்க நினைப்பதைக் குறிக்கிறது.
குறித்த பருவத்தில் செய்ய வேண்டிய காரியத்தை அந்தந்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்பதை உணர்த்த வரும் நியாயம் இது.
Clapping hands
अन्धकवर्तकीयन्यायः
andhak vartakiya Nyayah
அந்தகவர்தகீய நியாயம்
கைகளைத் தட்டுபவனும் பறவையும் பற்றிய நியாயம் இது.
ஒருவன் தன் இரு கைகளையும் பலமாகத் தட்டிக் கொண்டே இருக்கிறான். அவன் கைகளில் பறவை உட்கார்ந்திருக்க முடியுமா?
அதன் உயிருக்கே அது ஆபத்தாக அல்லவா அது முடியும்!
இது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று! ஆக இது போல நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காரியத்தைக் குறிக்க வரும் நியாயம் இது.
Nausea/vomiting image
अन्यद्भुक्तमन्यद्वान्तमितिन्यायः
anyadbhuktam anyadvantamiti nyayah
அன்யத்புக்தம் அன்யத்வாந்தமிதி நியாயம்
சாப்பிட்டது ஒன்று; வாந்தி எடுத்தது இன்னொன்று என்பது பற்றிய நியாயம் இது!
எதையாவது ஒன்றை உண்ட பின்னர் வாந்தி எடுத்தால் உண்டது தானே வர வேண்டும்!
ஒரு கேள்வி கேட்கப்படும் போது அதற்கு விடை அளிக்காமல் வேறு எதையாவது பதிலாகச் சொல்லும் போது இந்த நியாயம் உரைக்கப்படும்.
கேள்வியையே தொடவில்லையே, எதையோ உளறுகிறாயே என்று சொல்ல இந்த நியாயம் பயன்படும்.
अस्नेहदापनन्यायः
asnehadapana nyayah
அஸ்நேஹதாபன நியாயம்
எண்ணெய் இல்லாமல் எரிக்கப்படும் தீபம் பற்றிய நியாயம் இது!
இது பல இடங்களில் பயன்படுத்தப் படும் ஒன்று.
ஒரு மனிதன் தான் சம்பாதிப்பதை விட அதிகமாகச் செலவழிக்கும் போது எண்ணெயே இல்லாமல் எப்படி தீபம் எரியும்– வரவு இல்லாமல் செலவழிப்பது எப்படி சாத்தியம் – என்ற இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
அஸ்திவாரமே இல்லாமல் ஒருவன் கட்டிடம் எழுப்பினால் அது என்ன ஆகும்?
இயல்பான அழகே இல்லை; தன்னை அழகாக எப்படிக் காட்ட முடியும்?
உள்ளீடே இல்லை; பெரிதாக தன்னை எல்லாம் இருப்பது போல ஒருவன் எப்படிக் காட்ட முடியும்?
நிரந்தர நன்மையை நினைக்காமல் வந்து போகும் ஒன்றை விரும்பினால் அது நிலைக்குமா?
இப்படிப்பட்டப் பல்வேறு சூழ்நிலைகளில் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
Punching air picture
अकाशमुष्टिहननन्यायः
akasamushtihanana nyayah
ஆகாசமுஷ்டிஹனன நியாயம்
கைகளின் முஷ்டியினால் ஆகாயத்தை அடிப்பது பற்றிய நியாயம் இது!
ஆக்ரோஷமாக கைகளின் முஷ்டியினால் ஆகாயத்தை ஒருவன் அடிக்கத் தொடங்கினால் அவனை என்னவென்று சொல்வது!
முடியாத ஒன்றை ஒருவன் செய்யும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்!
********
swami_48@yahoo.com






You must be logged in to post a comment.