DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Wriiten by S NAGARAJAN
Date: 28 September 2015
Post No: 2194
Time uploaded in London :– 15-12
(Thanks for the pictures)
கம்பன் காவிய இன்பம்
கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும், கம்பனும்!
ச.நாகராஜன
கண்ணாடி
உலக மகாகவி கம்பன் என்று சொன்னால் உதட்டைப் பிதுக்குவர் ஆங்கில இலக்கியம் நன்கு அறிந்தோர் – பழைய காலத்தில்!
அது ஆங்கிலேயர் அரசாண்ட காலம். தமிழைப் படிக்க வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தாலும் தமிழில் ஒன்றும் இல்லை என்று சொல்வது ஒரு வித கௌரவம்!
இரண்டு மொழிகளின் இலக்கியங்களையும், கூடவே சம்ஸ்கிருத இலக்கியங்களையும் படித்தோர் இன்று மனமார ஒப்புக் கொள்வர் கம்பன் உலக மகா கவி தான் என்று.
உதாரணத்திற்கு ஒரே ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.
ஆடி! கண்ணாடி!!
வள்ளுவரின் கண்ணாடி
வள்ளுவர், குறளில் எதிரில் இருப்பதை உள்ளபடி கண்ணாடி பிரதிபலிப்பது போல நெஞ்சம் கடுத்ததைக் காட்டி விடும் முகம் என்றார். கண்ணாடிக்கு அவர் பயன்படுத்திய சொல் பளிங்கு.
“அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்” (குறள் 706)
வள்ளுவரிலிருந்தே கண்ணாடி உவமை பல்வேறு விதமாக காவியங்களில் இடம் பெற்று வந்துள்ளது.
ஆலங்குடி வங்கனாரின் கண்ணாடி
குறுந்தொகையில் ஒரு பாடல் (எண் 8). ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் பாடிய பாடல் இது.
பரத்தை ஒருத்தி வீட்டிலிருந்து தன் இல்லம் ஏகிய தலைவன் ஒருவனை, அந்தப் பரத்தை தன் பெண்டாட்டி சொன்னபடி அவன் ஆடுவதாக எல்லோரும் கேட்க (எரிச்சலுடன் நையாண்டியாக) இதைக் கூறுகிறாள்.
கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே
வயலில் இருக்கும் மரம் ஒன்றிலிருந்து கீழே விழும் இனிய பழத்தைக் குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்விப் பிடிக்கும் நாட்டவனான ஊரன், என்னுடைய வீட்டில் இருக்கும் போது பெரும் பேச்சைப் பேசுவான் (அதாவது பரத்தை வீட்டில் ஆட்டம் போடுவான்) ஆனால் தன் இல்லம் ஏகி விட்டாலோ கண்ணாடி முன்னால் கையைத் தூக்கினால் அதுவும் தூக்குவது போல தன் மனைவிக்குப் பணிவிடை செய்வான். (அவள் பேச்சு தான் அங்கே; அங்கு ஆட்டம் மாறும் – அவள் சொல்வதற்கு ஆடுவான்! அதாவது விளையாட்டு விதிகளே மாறி விடும்).
என்ன ஒரு பாடல் பாருங்கள், கண்ணாடியை மையமாக வைத்து! செய்ததைச் செய்யும் கண்ணாடி போல ஆகி விடுவானாம் அங்கே. மனைவி கையைத் தூக்கினால் இவனும் ஆடி போலத் தூக்கி ஆட வேண்டியது தான்!
முகுரவானனன்
திருதராஷ்டிரனை விவரிக்க வந்த வில்லிப்புத்தூரார் வில்லி பாரதத்தில் முகுரவானனன் என்று கூறுகிறார் (ஆதிபருவம் சம்பவச் சருக்கம் பாடல் 115)
முகுரம் என்றால் கண்ணாடி. ஆனனம் என்றால் முகம். கண்ணாடி போன்ற முகத்தை உடையவன் என்று பொருள். கண்ணாடி எப்படி தான் பிறரால் காணப்பட்டு பிறரைத் தான் காணும் உணர்ச்சி அற்று இருக்கிறதோ அது போல திருதராஷ்டிரனை அனைவரும் பார்க்க முடிந்தாலும் அவர்களைக் காண முடியாத பிறவிக் குருடன் அவன் என்பதை இந்தப் பெயர் விளங்கச் சொல்கிறது.
இனி உலக இலக்கியத்திற்கு வருவோம்.
ஷேக்ஸ்பியரின் கண்ணாடி
ஷேக்ஸ்பியர்! இலக்கியப் பிரியர்கள் விழிகளை விரிப்பர். அவர் இயற்றிய 43 நூல்களில் எட்டு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து நானூற்றி இருபத்தியொன்று (8,84,421) வார்த்தைகள் இருப்பதாக எழுத்தெண்ணிப் படித்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த எட்டு லட்சத்து எண்பத்திநான்காயிரம் + வார்த்தைகளில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாத வார்த்தைகள் 10. அதில் கண்ணாடியும் ஒன்று!
அவரது படைப்பான Measure for Measure இல் (II.II) ஒரு காட்சி. இஸபெல்லாவின் சகோதரனான க்ளாடியோவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது – லார்ட் ஏஞ்சலோவின் ஆணைப்படி. இஸபெல்லா தன் சகோதரனை விடுவிக்க வேண்டும் என்று ஏஞ்சலோவிடம் மன்றாடுகிறாள் இருவரும் மனிதர்களிடம் உள்ள குறைபாடுகளைப் பற்றி விவாதிக்கின்றனர். அப்போது, “Mankind’s glassy essence’ என்று ஷேக்ஸ்பியர் கூறுகிறார். இதன் அர்த்தம் யாருக்கும் சரிவர இன்று வரை விளங்கவில்லை. Glassy என்றால் கண்ணாடி போல உடை படுவதா? அல்லது பிரதிபலிப்பதா? அல்லது குணாதிசயம் அல்லது மனநிலை என்ற உளவியல் பொருளை எடுத்துக் கொள்வதா? இதுவரை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. (அர்த்தம் சரிவர விளங்காத ஷேக்ஸ்பியருடைய இதர ஒன்பது வார்த்தைகள்: Armgaunt, balk’d, Braid, Cock- a-hoop, Demuring, Eftest, Impeticos, Portagem Watch-case)
கம்பனின் இரு கண்ணாடிகள்
இனி கம்பனுக்கு வருவோம்:
சுந்தரகாண்டம், கடல் தாவு படலத்தில் ‘எழுந்தோடி’ எனத் தொடங்கும் 41வது பாடல்!
அநுமன் கடலிலிருந்து எழுந்த மைநாக மலையைப் பார்க்கும் காட்சி!
அழுங்கா மனத்து அண்ணல் (அற்புதமான இந்த சொல் தொடரைப் பற்றிய எமது கட்டுரை ஞான ஆலயம் இதழில் வெளியிடப்பட்டுள்ளதைப் படிக்கலாம்)
‘எழுந்து ஓங்கி விண்ணோடு மண் ஒக்க, இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின் உம்பர் ஓங்கிக்
கொழுந்து ஓடி நின்ற கொழுங் குன்றை வியந்து நோக்கி,
அழுங்கா மனத்து அண்ணல், ‘இது என் கொல்?’ எனா அயிர்த்தான்’
எதற்கும் சலியாத மனத்தினாகிய அநுமன் விளங்குகின்ற கண்ணாடி ஒன்றின் மீது இட்ட ஓர் உளுந்து உருள்கின்ற காலத்திற்குள்ளே ஆகாயத்திற்கும் மேலாக வியாபித்து மேலும் கீழும் எங்கும் முடியும் அடியும் படர்ந்து நின்ற மைநாக மலையை ஆச்சரியத்துடன் பார்த்து , ‘இது என்ன’ எனச் சந்தேகித்தான்.
கண்ணாடி ஒன்றில் உளுந்து ஒன்றை உருட்டிப் பாருங்கள். அது எந்த வித உராய்வுமின்றி விரைந்து ஓடும் ஒரு க்ஷணத்திற்குள்ளாகவே. இதில் உள்ளிருந்த மைநாக மலை பிரதிபலிப்பு போல வந்ததையும் பிரதிபிம்பம் காட்டும் கண்ணாடி உவமை எடுத்துக் காட்டுகிறது.தடையின்றி இயங்குதல், விரைவு, பிரதிபிம்பம் ஆகிய மூன்றை கண்ணாடியில் உருளும் உளுந்து காட்டுகிறது.
இலங்கை நகரை வர்ணிக்க வேண்டும். ராவணனின் இலங்கையை யாராலாவது சரியாக வர்ணிக்க முடியுமா? உலகப் பெரும் புலவராக இருந்தாலும் சரி தான்! முடியுமா?
இப்போது கண்ணாடியின் உதவியை நாடுகிறான் கம்பன். இன்னொரு கண்ணாடியைக் கம்பன் உவமையாகக் காட்டுகிறான். இலங்கை நகருக்காக! அந்த அருமையான பாடல் இது:-
அநுமன் இலங்கைக்கு இப்பால் உள்ள பவள மலை மீது கால் பதிக்கிறான். இலங்கையை நோக்குகிறான்.
மண் அடி உற்று, மீது வான் உறு வரம்பின் தன்மை
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி,
விண்ணிடை, உலகம் என்னும் மெல்லியல், மேனி நோக்கக்
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையைத் தெரியக் கண்டான்
(பாடல் 79, கடல் தாவு படலம்)
நிலவுலகின் அடிப்பாகம் வரையிலும் வேர் ஊன்றப் பெற்று,உச்சியோ வானுலகில் பொருந்துதலால், உலகத்தின் மேல் மற்றும் கீழ் எல்லை நிலையை மதிப்பிடுவது போன்றதும் தன்னுடைய பாதம் தங்கியதுமான அந்தப் பவள மலையின் மீது நின்று அநுமன், வானத்திலுள்ள தேவலோகமாகிய பெண் தனது வடிவழகைப் பார்ப்பது போல நிலைக் கண்ணாடி வைத்தது போல விளங்குகின்ற இலங்கையைப் பார்த்தான். வானுலகத்தின் மறுபதிப்பு அல்ல, அல்ல, பிரதிபிம்பமே இலங்கை.
நமக்கு நாமே உருவகப்படுத்த வேண்டும்
கண்ணாடி உவமை கவிஞனின் வேலையைக் கவினுற முடித்து விட்டது. கண்ணாடியின் மீது உளுந்து ஓடுவதை எந்த ஒருவராலும் தானே எளிதில் செய்து பார்க்க முடியும். தடையின்மை, வேகம், பிரதிபிம்பம் ஆகியவற்றை நேரில் உணர முடியும். இலங்கை கண்ணாடியோ ஒவ்வொருவரின் கற்பனையைப் பொருத்து அமையும். தேவலோகம் பற்றிய கற்பனையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செய்து கொள்ளலாம். அதன் பிரதிபிம்பமே இலங்கை.
கற்பனை செய்து கண்டு கொள் என்ற இந்த உத்தி, உலக மகா கவிகளுள்ளே உன்னதமான ஒருவருக்கு மட்டுமே உதிக்க முடியும்! கம்பன் அப்படிப்பட்ட அருமையான கவி. உலக மகாகவியைக் கண்ணாடி முன்னால் நிறுத்தினால் அதன் பிரதிபிம்பமாக கம்பன் அமைவான். (இங்கும் அவனது கண்ணாடி உவமை தான் உதவுகிறது!!!)
உலகின் ஒப்பற்ற கவிஞன் கம்பன்
இப்போது பார்ப்போம் :- வள்ளுவரின் கண்ணாடி உளவியல் ரீதியிலான நெறி முறைக் கண்ணாடி. ஆலங்குடி வங்கனாரின் கண்ணாடி வாழ்வியல் அங்கத்தின் நாடக பாணியிலான கண்ணாடி. வில்லிப்புத்தூராரின் கண்ணாடி ஒரு மனிதரை விளக்க வந்த கண்ணாடி. ஷேக்ஸ்பியரின் கண்ணாடி தெளிவற்ற கண்ணாடி. கம்பனின் இரு கண்ணாடிகளோ ஒன்று செய்முறைக்கு எளிது; இன்னொன்றோ கற்பனைக்கும் அரிது; அவரவர் மனக்குதிரையின் வேகத்தையே அது பொருத்திருக்கும்.
இப்போது எடை போட்டுப் பார்த்தால் கண்ணாடி (முன்னாடி) முன்னர் ஷேக்ஸ்பியர், கம்பரில் யார் ஜொலிக்கிறார்கள்?!
முடிவு உங்கள் கையில்!
***********
Sanganur Mahadevan
/ September 29, 2015ஷேக்ஷ்பியரின் கண்ணாடி வெறும் வார்த்தை. எதை குறிப்பிடுகிறது என தெரியவில்லை. கம்பர்ரின் கண்ணாடியோ தெளிவாக நடப்பதை காட்டுகிறது.