Radio Talk written by S NAGARAJAN
Date: 13 November 2015
POST No. 2325
Time uploaded in London :– 13-15
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்
(நான்காம் பாகம்)
ச.நாகராஜன்
சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்
Part 1 posted on 6th November 2015;Part 2 posted on 7th November 2015
Part 3 on 8th nov. Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.’part-6 on 12th Nov.15
7.பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்போம்!
சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்க மனித குலம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பல. அவற்றுள் முக்கியமான ஒன்று பயோடைவர்ஸிடி என்னும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதாகும்.
பூமியில் ஒரு குறித்த பகுதியில் காணப்படும் உயிரினங்களின் வகைகள் மற்றும் எண்ணிக்கையில் பல்வகைமையைக் கொண்டிருப்பதையே பயோடைவர்ஸிடி அல்லது பல்லுயிர்ப் பெருக்கம் என்று கூறுகிறோம்.
ஒரு ஆரோக்கியமான பல்லுயிர்ப் பெருக்கம் ஏன் தேவை?
அது ஒவ்வொருவருக்கும் இயற்கை ஆதாரங்கள் பலவற்றை வழங்குகிறது என்பதால்!
பயோடைவர்ஸிடி அல்லது பல்லுயிர்ப்பெருக்கத்தினால் ஏற்படும் முக்கியமான நன்மைகளுள் சிலவற்றைப் பார்ப்போம்:
சுற்றுப்புறச்சூழல் மனித குலத்திற்குத் தரும், நீர் ஆதாரத்தை அது பாதுகாக்கிறது.
மணல் ஆதாரத்தை அது உருவாக்குகிறது; மற்றும் பாதுகாக்கிறது.
ஊட்டச் சத்துக்களை சேமித்து வைக்கிறது; மறு சுழற்சி செய்து தருகிறது.
சுற்றுப்புறச் சூழல் மாசுகளை தகர்க்கிறது; உறிஞ்சிக் கொள்கிறது.
உலகின் தட்பவெப்ப நிலையைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது.
சுற்றுப்புறச் சூழல் அமைப்புகளைப் பராமரிக்கிறது.
எதிர்பாராது எற்படும் இயற்கை நிகழ்வுகளிலிருந்து நம்மை மீட்கிறது.
உயிரிய ஆதாரங்களான உணவு, மருத்துவ ஆதாரங்கள் மற்றும் மருந்து தயாரிக்க உதவும் செடிகள், மரச் சாமான்களைத் தயாரிக்க உதவும் மரங்கள், அலங்காரச் செடிகள் ஆகியவற்றைப் பாதுகாக்கிறது. பறவைகளுக்கான உணவு வகைகளைத் தருவதோடு பல்வேறு வகை உயிரினங்களின் பாதுகாப்பு, மரபணு பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் உதவி செய்கிறது.
இது தவிர சமூகத்திற்கு ஆதாயம் தரும் வகையில் பண்பாட்டைப் பாதுகாத்துப் பேணுகிறது; உல்லாச சுற்றுலா ஸ்தலங்களை உருவாக்கி மக்களை மகிழ்விக்கிறது. எதிர்காலத்திற்கான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
ஒரு செலவும் இல்லாமல் இயற்கை நமக்குத் தரும் இதைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? இவற்றை நாமே அமைக்க முயன்றால் அதற்கு ஆகும் செலவு கோடானு கோடிகளைத் தாண்டும்.அதோடு இதை உருவாக்கப் பல்லாயிரம் பேர் பல்லாயிரம் ஆண்டுகள் முயற்சிக்க வேண்டும்.
ஆகவே அரிதாக நமக்கு இயற்கை அருளியுள்ள பயோடைவர்ஸிடி எனப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தை அழிக்காமல் காத்து சுற்றுப்புறத்தைக் காப்பது நமது கடமை,அல்லவா!
******************



You must be logged in to post a comment.