
Written by london swaminathan
Date: 25 December 2015
Post No. 2425
Time uploaded in London:- 9-00 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
மனைவி, மகன், நில, புலன்கள் முதலியன எல்லாம் ஒருவனை எப்படிப் பந்த பாசத்தில் சிக்க வைக்கும் என்பதற்கு ஒரு சுவையான கதை.
ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதன் இனிப்புப் பலகாரங்களைச் செய்து விற்கும் வியாபாரம் நடத்தி வந்தார். அவர் ஒரு தர்மவான். போகும் வரும் சந்யாசிகளுக்கு உணவு கொடுத்து மரியாதை செய்வார். ஒரு நாள் ஒரு சந்யாசி அந்தப் பக்கம் வரவே, அவரை வரவேற்று, வாழையிலையில் அன்னத்துடன் தான் செய்த இனிப்புப் பலகாரங்களையும், ஒரு குவளையில் பாலையும் பரிமாறினார். அந்த சந்யாசி அவரை வயிறார வாழ்த்தி, “அன்பனே, உனது பக்திக்கு மெச்சினோம். உம்மை சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்க அருமருந்தாகிய ஒரு உபதேசத்தை உமக்கு அருள திருச்சித்தம் கொண்டுள்ளோம்” என்றார்.
சுவாமி! மிக்க மகிழ்ச்சிதான். ஆனால் அதற்கு இது தருணமல்ல. மனைவி மக்களைக் காப்பாற்றும் கடமை உளதே என்றார்.
சாமியாரும் (சந்யாசி) அதற்கென்ன பின்னொரு சமயம் வருவோமென்று கூறிச் சென்றார். சில ஆண்டுகள் சென்றன. மீண்டும் அவ்வழியே அந்த சந்யாசி வந்தவுடன் அறுசுவை அன்னம் படைத்தான் அந்த இனிப்பு வியாபாரி. “அன்பனே, காலம் கனிந்ததா? உபதேசத்துக்குத் தயாரா?” என்று சாமியார் வினவ, “சில ஆண்டுகளுக்கு முன் என் மனைவி இறந்துவிட்டாள். இப்பொழுது இரு மகன்களுக்கும் கல்யாணம் முடிக்கவேண்டிய கடமை உளது” என்றார். சாமியார் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
இன்னும் சில ஆண்டுகள் சென்றன. சாமியார் அதே வீட்டுக்கு வந்தார். வழக்கம்போல உபசரிப்பு. இப்பொழுது இரண்டு மகன்களுக்கும் கல்யாணம் நடந்து தம்பதி சகிதம் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். சாமியார், கடைக் கண்களால் வியாபாரியைப் பார்த்தார். அவருக்கு சட்டென விளங்கியது.

“இன்னும் உபதேசத்துக்கு நேரம் வரவில்லை. ஏனெனில் மகன் கல்யாணத்துக்கு வாங்கிய கடன்களை அடைக்க வேண்டி இருக்கிறது” என்றார். சாமியாரும் சிரித்துக் கொண்டே வந்த வழியே சென்றார்.
ஆண்டுகள் பல உருண்டோடின. மீண்டும் வந்தார் சாமியார். வழக்கம் போல அறு சுவை உணவு. ஆனால் வியாபாரியைக் காணவில்லை. மகன்களிருவரும் “தந்தை இறந்துபோய் சில ஆண்டுகள் ஆனதாக”ச் சொன்னார்கள். உடனே சந்யாசி தனது ஞான திருஷ்டியால், அவரது தந்தை அதே வீட்டில் மாட்டுக் கொட்டிலில் மாடாய்ப் பிறந்திருப்பதை உணர்ந்தார்.
மகன்களிடம் சாக்குப் போக்குச் சொல்லி நைஸாக மாட்டுக் கொட்டிலுக்குச் சென்றார். இந்த மாட்டை எங்கே வாங்கினீர்கள்? என்றார். இது வாங்கிய மாடல்ல. முன்னால், இந்த வீட்டிலிருந்த, பசு ஈன்ற கன்றுதான் இது என்றனர். மகன்களிருவரும் வீட்டுக்குள் சென்ற சமயம், அந்த மாட்டிடம் அது யார் என்பதை உணர்த்தி இப்போது ஞான உபதேசத்துக்குத் தயாரா? என்று கேட்டார். அதற்கு அந்த பசு சொன்னது:
“ஐயோ, இப்போது வேண்டாம். என் மகன்களிருவரும் வரும்படியின்றி கஷ்டப்படுகிறார்கள். நான் கொடுக்கும் பாலை விற்றுப் பணம் சம்பாதிப்பதால் அவர்கள் கஷ்டம் நீங்கியபின்னர் தான் தயார்” என்றது. அந்த சாது சந்யாசியும் சிரித்துக் கொண்டே விடைபெற்றுச் சென்றார்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த வீட்டுக்கு வந்தபோது, மகன்கள், ஒரு நாயை வளர்த்து வருவதைக் கண்டார். அது சந்யாசியைக் கண்டவுடன் அவர் மீது தாவிக்குதித்து ஓடி வந்தது. மகன்கள் இருவரும் அதைக் கட்டிப்போட்டுவிட்டு, உணவு படைத்தனர். மாடு இறந்து போன பின்னர் வீட்டுக்குத் தானாகவே வலிய வந்த ஒரு நாயை வளர்க்கத் துவங்கிய கதைகளைச் சொன்னார்கள். அனத சந்யாசி ஞானதிருஷ்டியில் பார்த்த போது மாடாகப் பிறந்து, இறந்த பின்னர் அந்த வியாபாரிதான் இப்போது நாயாகப் பிறந்திருக்கிறார் என்பதை அறிந்தார். யாருமில்லத சமயம் அதனிடம், அது யார் என்பதைச் சொல்லி, உபதேசம் செய்ய்யத் தயாராக இருப்பதாகவும், அதைக் கேட்டால், இந்த நாய்ப்பிழைப்பு தேவையில்லை என்றும் சொன்னார்.

அதற்கு அந்த நாய் சொன்னது:
சுவாமி! இப்போது வேண்டாம். என் மகன்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த வீட்டை அவர்கள் இல்லாத போது நான் தான் காவல் காக்கிறேன் என்று சொன்னது.
அந்த சந்யாசியும் சிரித்துக் கொண்டே வந்தவழியே போய்விட்டார். இந்த வியாபாரியை பிறப்பு- இறப்பு என்ற மாயச் சுழலிலிருந்து விடுவிக்க முயன்றாலும், முடியவில்லையே! இந்த சவாலை சமாளித்தேயாக வேண்டும் இன்னும் ஒரு முறை வருவோமென்று கங்கணம் கட்டிக் கொண்டார். விசுவாமித்திரர், திரிசங்கு மஹாராஜனை சுவர்க்கத்துக்கு அனுப்பிய கதை போல இருக்கிறதே! என் தவ வலிமையைப் பயன்படுத்தி இவனை விடுவிப்பேன்; பந்த பாசம் என்பது அவ்வளவு வலியதா என்று வியந்தார்.
ஆண்டுகள் பறந்தன. அதே சந்யாசி தள்ளாடித் தள்ளாடி அந்த வியாபாரி வீட்டுக்கு வந்தார். இப்பொழுது நாயும் இறந்து விட்டது. மகன்கள் இருவருக்கும் இந்த சந்யாசி நம்மை விட மாட்டான் போல இருக்கிறது, இவனை விரட்ட வேண்டும் என்று கோபத்துடன் வந்தனர். அவருக்குப் புரிந்துவிட்டது உடனே ஞான திருஷ்டியால் ஒரு விஷயத்தை அறிந்தார். அவர்களிருவரும் கோபத்துடன் வந்தவுடன், “இவ்வளவு நாளாக உங்களுக்குச் சொல்ல மறந்த ஒரு ரஹசியத்தைச் சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்தேன்” என்றார்; உடனே அவர்கள் சோறு படைத்து , இனிப்பு கொடுத்து மெதுவாக ரஹசியம் என்ன? என்று கேட்டனர்.
தோட்டத்தில் மரப் புதர்களுக்கிடையில் அவரது தந்தை 100 பவுன் தங்க நகையைப் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார். உடனே அவர்கள் இருவரும் கடப்பாரை , மண்வெட்டி சகிதம் விரைந்தனர். அங்கே ஒரு பாம்பு அவர்கள் மீது சீறிப்பாய்ந்தது. இந்த சந்யாசி நம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டு இப்படி பாம்பிருக்கும் புதருக்கு அனுப்பியிருக்கிறான் என்று எண்ணி அவரை அடிக்க ஓடி வந்தனர். அவர் உடனே, “நிறுத்துங்கள், அந்தப் பாம்பு அங்கேயுள்ள புதையலுக்குக் காவலாக இருக்கிறது” என்றார்.

உடனே அதைக் கொல்வதற்காக பாம்பு! பாம்பு! என்று கத்தியவுடன் ஊர் ஜனங்கள் எல்லோரும் வந்து அதை அடித்துக் கொன்றனர். அவர்கள் எல்லோரும் போன பின்பு இரண்டு மகன்களும் அந்த தங்கப் புதையலைப் பங்கு போட்டுக் கொண்டனர். அந்த சந்யாசியும் பாம்பின் ஆவியைப் பிடித்து அதைக் கரயேற்றி அப்படியே மாயமாய் மறைந்தார். அதை இரண்டு மகன்களும் வியப்புடன் பார்த்தார்கள்.
அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாது. ஒருவருடைய பந்த பாசத்தை விடுவித்து, ஒருவரைக் கரையேற்ற ஞானிகளும் கூட மிகவும் பிரயத்தனம் (முயற்சி) செய்ய வேண்டியிருக்கிறது. வியாபாரியின் வீட்டில் ஒரு நாள் உணவு சாப்பிட்டதாலும் அவர் தர்மவான் என்பதாலும் அவரை ஜனன-மரணச் சுழலிலிருந்து அந்த சந்யாசி விடுவித்தார்.
–subham–
S.n. Ganapathi
/ December 25, 2015அன்புடன் வணக்கம்
மிக அருமையான நீதி கதை ..
நன்றி