
Written by S NAGARAJAN
Date: 27 December 2015
Post No. 2430
Time uploaded in London :– காலை 5-37
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
வில்லிபாரதம்
மரகதஜோதி வீரன் அர்ஜுனன், இராமனே!
ச.நாகராஜன்
வில்லிபாரதம்
தமிழின் செழுமையைக் காட்டும் அற்புத இலக்கியங்களில் வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதமும் ஒன்று.
சொற்சுவையும் பொருள் சுவையும் மஹாபாரதத்திற்கே உரித்தான சிறப்புத் தன்மையும் சேர்ந்த கலவை செந்தமிழில் கிடைக்கிறது என்றால் அதன் பெருமையைச் சொல்லவா வேண்டும்.
உலக இலக்கியங்களில் எல்லாம் தலை சிறந்த தனி இடத்தைப் பிடித்திருக்கும் அர்ஜுனன் சிறந்த சிவ பக்தன். அவன் சிவனை நோக்கித் தவம் செய்து பாசுபதாஸ்திரத்தைப் பெறுகிறான்.
இந்த அருமையான சம்பவத்தை வில்லிப்புத்தூரார் விவரிக்கும் விதமே தனி!
சிவனைப் போற்றும் போதெல்லாம் அர்ஜுனனையும் போற்றுகிறார்.

கோதண்ட இராமனே காண்டீவ அர்ஜுனன்
சிவனைத் துதிக்கும் அர்ஜுனன் யார் என்பதில் ஒரு இரகசியம் பொதிந்து இருக்கிறது அந்த மாபெரும் இரகசியத்தை வில்லிப்புத்தூரார் படிப்படியாக பல்வேறு விதமா சொல்லிக் கொண்டே வருகிறார்.
காண்டீவம் ஏந்திய மரகதஜோதி வீரன் அர்ஜுனன் கோதண்டம் ஏந்திய இராமனே தான் என்பதே அந்த இரகசியம்.
அர்ஜுனன் மரகதம் போல் ஜொலிப்பதால் மரகதஜோதி வீரன் என்று அவனை அழைக்கிறார் வில்லிப்புத்தூரார்.
‘மையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ, ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான்’ என்று இராமனை வர்ணிக்கிறான் மஹாகவி கம்பன்.
இராமனு அர்ஜுனனும் ஒரே நிறம்!

வேடனாக உருத்தரித்து சிவன் அர்ஜுனனுடம் போர் புரியும் சம்பவத்தை அர்ஜுனன் தவநிலைச் சருக்கத்தில் சொல்ல வருகிறார் வில்லிப்புத்தூரார்.
விராதன் ஆதி நிசாசரேசரை வென்று முச்சிகரத்தின் மேல் இராதவாறு அடல் அமர் புரிந்த இராமனே நிகர் ஏவினான்
(புராதனாகம வேத எனத் தொடரங்கும் பாடல் – 92)
விராதன் முதலான ராக்ஷஸத் தலைவர்களை ஜயித்து மூன்று சிகரங்களை உடைய திரிகூடகிரியில் (அதாவது இலங்கையில்) இல்லாதவா கொடிய போரைச் செய்த இராமனையே ஒத்த அம்புத் தொழிலைச் செய்யும் அர்ஜுனன் என்பதே இதன் பொருள்.
மாதலி கூற்று
அடுத்து நிவாதகவசர் காலகேயர் வதைச் சருக்கத்தில் இந்திரனின் சாரதியான மாதலி அர்ஜுனனிடம் அவனை ஏற்றிச் செல்லும் தேரைப் பற்றிச் சொல்கிறான்.
‘நீ ஏறி வரும் இந்தத் தேர் ஜம்புவன், ஜம்புமாலி என்னும் பெயருடைய அசுரர் இருவரை இந்திரன் வதைத்த அந்த நாளில் ஏறி வந்த அதே தேர் தான். இராவணனை வதை செய்து இராமன் வென்ற பிறகு அந்த நாளில் ஏறிய அதே தேர் தான் இது”
“தும்பையஞ்சடையான் வெற்பைத் துளக்கிய சூரன் மாள விம்பவார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இத்தேர்”
(பொருள்: தும்பைப் பூவைச் சூடிய அழகிய சடையினை உடைய சிவபிரானின் கைலாச மலையை அசைத்த சூரனாகிய இராவணனை வட்டமாக வளைந்த, நீண்ட கோதண்டம் என்னும் வில்லை உடைய ராமபிரான் ஜயித்த காலத்தில் ஏறிச் சென்றது இந்தத் தேர்)
கோதண்டம் என்ற வில் சக்கரம் போல வளையும் தன்மை (விம்பம் வார் சிலை) உடையது.
காண்டீவம் என்னும் அர்ஜுனனின் வில்லும் இதே போலச் சக்கரம் போல வளையும் தன்மை உடையது. என்ன ஒற்றுமை!

இராமன் போல அம்பு வீசும் அர்ஜுனன்
இன்னுமொரு ஒற்றுமையைச் சுட்டிக் காட்டுகிறார் தமிழ்க் கவிஞர்!
காஸ்யப முனிவரின் மனைவியான திதிக்குப் பிறந்த அசுரர்கள் அர்ஜுனன் மீது அம்புகளை வீச அர்ஜுனன் வைஷ்ணவாஸ்திரத்தை அவர்கள் மீது செலுத்துகிறான்.
அது வெள்ளம் போல அசுரர் படைகளை மாய்க்கிறது. இது எப்படி இருக்கிறது?
முன்னொரு நாளில் இராமன் கடல்நீர் வெள்ளத்தை வற்றச் செய்த விதம் போல இது இருக்கிறது.
வண்ணவிற்படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த பண்ணெனப் படுத்தது அந்தப் பைந்துழாய்ப் பரமன் வாளி
(நிவாதகவசர் காலகேயர் வதைச் சருக்கம் விண்ணிடத்தசனி எனத் தொடங்கும் பாடல் – எண் 78)
பைந்துழாய்ப் பரமன் வாளி என்பது வைஷ்ணாவாஸ்திரம்.
அர்ஜுனன் இராமன் தானோ!
தன் ஒற்றை வில்லைக் கொண்டு அம்பு மழை பொழிகிறான் அர்ஜுனன்.
அதை வில்லிப்புத்தூரார் வர்ணிக்கிறார் இப்படி:
“தவரினுக்கு இராகவன் கொல் என வரும் தனஞ்சயன்”
(அவர் விடுத்த எனத் தொடங்கும் பாடல் – எண்126)
(தவரினுக்கு – வில் வித்தையில் இராகவன் கொல் என – இராகவன் தானோ என்று சொல்லும்படி வரும் – அவதரித்த
தனஞ்சயன் – அர்ஜுனன்)

அர்ஜுனன் இராமனே!
அர்ஜுனன் இராமன் தானோ என்று சொல்லும்படி இருந்தது என்ற வில்லிப்புத்தூரார் கடைசியில் இந்திரன் வாயிலாக அர்ஜுனன் இராமனே என உறுதிப் படுத்துகிறார்.
பாடலைப் பார்ப்போம்:-
ஆதி நாயகன் மாமாயன் அமரர் தம் துயரும் ஏனைப் பூதல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணிச் சீதை தன் கொழுநநான திண்டிறல் இராமன் போல ஓத நீருலகில் மீண்டும் அர்ஜுனன் உருவம் கொண்டான்
இந்திரன் கூறுவதாக வரும் இந்தப் பாடலின் பொருள் :
முதல் கடவுளாகிய திருமால் தேவர்களது துன்பத்தையும் மற்ற பூமி தேவிக்கு உற்ற துயரத்தையும் தீர்ப்பதற்காக சீதையின் கணவனான மிக்க வலிமை உடைய இராமனாக அவதரித்தது போல கடல் நீர் சூழ்ந்த உலகில் மறுபடியும் அர்ஜுனனது உருவம் எடுத்து அவதரித்தான்.
அர்ஜுனன் இராமனே என்பதைப் படிப்படியாக வில்லிப்புத்தூரார் சொல்லும் பான்மை சிறந்த கவிகளுக்கே உரித்தான நாடக பாணியில் அமைந்துள்ளது சுவாரசியமான விஷயம்!
அனைத்தையும் சுவைத்துப் படித்தால் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும்.
கம்பசூத்திரம் என்பது போல வில்லி சூத்திரமும் இருக்கிறது!
*******
You must be logged in to post a comment.