
WRITTEN BY S NAGARAJAN
Date: 29 December 2015
Post No. 2437
Time uploaded in London :– 5-34 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
வில்லிபாரதம்
சிவ பக்தன் அர்ஜுனன்
ச.நாகராஜன்

Shiva seen in cloud (from face book friends)
அற்புதக் கவிஞர் வில்லிப்புத்தூரார்
வில்லிப்புத்தூரார் வைஷ்ணவத்தையும் சைவத்தையும் எப்படி சரிநிகர் சமானமாகப் போற்றி வந்துள்ளார் என்பதை வில்லி பாரதத்தைப் படிப்பவர் எளிதில் உணர்வர்.
சிவனைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் பரவசமடைகிறார் வில்லிப்புத்தூரார்.
சிவபூஜைக்குப் பின்னரே உணவு
சிறந்த சிவ பக்தனான அர்ஜுனன் சிவ பூஜை செய்யாமல் உணவருந்த மாட்டான்.
இதை பதின்மூன்றாம் போர்ச் சருக்கத்தில் ஒரு அருமையான பாடலில் காணலாம்.
அபிமன்யுவைச் சூழ்ந்து நின்று கௌரவர்கள் அனைவரும் வஞ்சகமாக அவனைக் கொல்ல, அதை அறிந்த அர்ஜுனன் புலம்பித் தவிக்கிறான்.
“வா, என்னுடன் கைலாயம் சென்று காலைக்குள் திரும்பி விடலாம்” என்று கண்ணன் அவனை அழைத்துச் செல்கிறான்.
அங்கே செல்லும் வழியில் பசி தாகத்தினால் அர்ஜுனன் வருத்தமுற, கண்ணன், மாம்பழம் உள்ளிட்ட கனிகள், கரும்புச் சாறை உண்ணுமாறு அன்புடன் கூறுகிறான் இப்படி:-
“மாங்கனி, வாதையின் கனி, வருக்கையின்
தீம் கனி, கன்னலின் செய்ய நீர், உள;
வேம் கனல் பசியும், நின் விடாயும் ஆறவே
ஈங்கு இனிது அருந்துதி, ஏந்தல்!”
இதைக் கேட்ட அர்ஜுனன் சிவ பூஜை இன்னும் செய்யவில்லையே என்கிறான்.
சரிந்தவர் சரிவு அறத் தாங்கும் நாயகன்
பரிந்து, இவை உரைத்தலும் ‘பாவை புங்கன் மேல்
புரிந்திலன், இன்னமும் பூஜை!’ என்றனன்,
வரிந்த வெஞ்சிலைக்கு மண் மதிக்கும் வீரனே
(பாவை பங்கன் – சிவ பெருமான்)
சரிந்தவர்களின் மெலிவு நீங்குமாறு காப்பாற்றும் கண்ணன், அன்போடு இப்படிக் கூற, “ சிவபூஜை இன்னும் செய்யவில்லையே” என்கிறான் அர்ஜுனன்.

கண்ணனே சிவன்
இப்போது அடுத்த பாடலில் மாபெரும் உண்மையை விளக்குகிறார் வில்லிப் புத்தூரார்.
கண்ணன் உடனே அர்ஜுனனை நோக்கி, “என்னை பூஜை செய்! நானும் சிவனும் ஒருவரே” என்கிறான்.
அற்புதமான இந்தப் பாடல் இதோ:-
மரு வரு கானக மலரினால் எமைப்
பொரு அரு பூசனை புரிதி, ஐய நீ.
இருவரும் ஒருவரே என்பது இன்று போய்
அருவரை அவன் அடி அடைந்து காண்டியே
அரியும் சிவனும் ஒண்ணு
அறியாதவன் வாயிலே மண்ணு
என்று பாமரனும் அறியும் பெரிய உண்மையை பண்டிதர்களும் கூடச் சில சமயம் அறிவதில்லை.
அந்த மாபெரும் உண்மையைக் கண்ணனே பிரகடனம் செய்கிறான்.
அர்ஜுனனின் சிவ துதி
இதற்கு முன்னர் ஆரணிய பர்வத்தில், அர்ஜுனன் கைலை சென்று சிவ தியானத்துடன் தவ விரதம் பூண்டு சிவனை நோக்கித் தவம் செய்யும் சிறப்பை அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தில் வில்லிப்புத்தூரார் அற்புதமாக அழகுற விளக்குகிறார்.
தன்னைச் சுற்றி நான்கு புறங்களிலும் அக்கினியை மூட்டித் தவம் செய்யும் போது அக்நி தேவன் அவனைச் சுடவில்லை. சிவ தியானத்தால் அவன் உடல் எங்கும் புளகம் கொள்கிறது.
பின்னர் வேடனாக வந்த சிவபிரானுடன் அவன் போர் செய்ய, இறுதியில் சிவ தரிசனம் கிடைக்கிறது.
அப்போது அவன் சிவனைத் துதிக்கும் பாடல்கள் அருமையான பாடல்கள். அவற்றில் ஒன்று:-
ஆதியே அண்டமும் அனைத்துமாய் ஒளிர் சோதியே கொன்றை அம் தொங்கல் மௌலியாய் வாதியே மரகதவல்லியாள் ஒரு
பாதியே பவளம் ஆம் பரம ரூபியே
இதன் பொருள் எளிதில் விளங்கக் கூடியதே.
அனைத்திற்கும் முதன்மை ஆனவனே!
உலக உருண்டைகள் அனைத்துமாய் விளங்கி ஒளிர்கின்ற ஜோதியே!
கொன்றை மலர் அணிந்த முடியை உடையவனே
பேச வல்லவனே
மரகதவல்லியான உமையை இட பாகத்தில் கொண்டுள்ளவனே
வலப்பாகம் பவழ மயமான சிறந்த வடிவுடையவனே
இப்படி சிவனைப் போற்றித் துதித்து அர்ஜுனன் கூறுவதாக அமையும் ஐந்து பாடல்களும் வில்லிப்புத்தூராரை சிறந்த சிவ பக்தராகவே காட்டுவதைக் கண்டு பிரமிப்பை அடைகிறோம்.
ஒவ்வொரு சருக்கத்திலும் கடவுள் வாழ்த்து பாடுவது அவர் வழக்கம். (சில சருக்கங்களில் மட்டும் இல்லை; மானசீகமாக வாழ்த்தினாரா அல்லது ஏடு எழுதியவர்கள் விட்டு விட்டார்களா, தெரியவில்லை)
கடவுள் வாழ்த்தில் திருமாலை வணங்கும் அவர் பல இடங்களில் சிவபிரானைப் போற்றுவது அரியும் சிவனும் ஒண்ணு என்பதை அவர் அனுபவபூர்வமாக உணர்ந்ததினால் என்பதை விளங்கிக் கொள்கிறோம்.
உண்மை ஒன்றே!
இராமாயணமும் மஹாபாரதமும் விளக்கும் பல உண்மைகளில் முக்கியமான ஒன்று : பல்வேறு தோற்றங்களில் வருவது ஒரே பரம்பொருளே என்பது தான்!
ஏகம் ஸத்; விப்ரா: பஹுதா வதந்தி
(உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாகக் கூறுகின்றனர்)
வில்லியை ஆழ்ந்து கற்போம்; உண்மைகளை நன்கு உணர்வோம்!
********
You must be logged in to post a comment.