
Written by S NAGARAJAN
Date: 2 January 2016
Post No. 2450
Time uploaded in London :– 6-06 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
வில்லி பாரதம்
பாவச் செயல்களைப் பரப்பாதே!
ச.நாகராஜன்
இரகசியம் விண்டுரைக்கும் வில்லிப்புத்தூரார்
வில்லிபாரதத்தில் ஏராளமான இரகசியங்களை வில்லிப்புத்தூரார் போகின்ற போக்கில் சொல்லிக் கொண்டே போவார். உன்னிப்பாகப் படிப்பவர்கள் அதை சட்டென்று பிடித்துக் கொண்டு நம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.
இன்றைய நாளில் ஃபேஸ் புக்கில் வம்பு வளர்க்கும் நம்மவர்களில் பலர் அதில் அடுத்தவர்களின் பாவச் செயல்களைப் பகிர்ந்து கொள்வதையே தமது முதல் கடமையாகக் கொண்டுள்ளனர்.
ஃபேஸ் புக்கை நலம் பரப்பும் வலிமை வாய்ந்த ஆயுதமாகப் பயன்படுத்தாமல் வம்பில் ஈடுபட்டிருப்பதால் நமக்கு நினைவாற்றல் குறைகிறது என்றும், மனச் சோர்வு ஏற்படுகிறது என்றும் விஞ்ஞான ஆய்வுகள் தற்போது தெரிவிக்கின்றன. ஆக இந்த பாவம் பகிரும் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு பாரதம் தரும் செய்தி ஒன்று உண்டு!
ஐயோ பாடல்
பாரதத்தில் வரும் அவலமான காட்சி ஒன்றைப் பார்ப்போம். திரௌபதியின் துகில் உரியும் காட்சி அது.
விகர்ணன் திரௌபதியை அலங்கோலமாக இழுத்து வர சூழ்ந்திருக்கும் அரசர் எல்லாம் “ஊமர்கணம்” போல அமர்ந்திருக்கும் கொடுமையான காட்சி.
திரௌபதி சபையோரை நோக்கி இது நியாயமா, நீதியைச் சொல்லுங்கள் என்று கேட்கிறாள்.
சபையோர் மௌனமாக இருக்கின்றனர்.
கவிஞருக்குப் பொறுக்கவில்லை. பிறக்கிறது ஒரு “ஐயோ” பாடல்.
(நேயர்கள் எமது “ஐயோ பாட்ல்கள்” கட்டுரையைப் படித்ததை நினைவு கூரலாம். படிக்காதவர்கள் படிக்கலாம்)
மையோ டரிக்கண் மழை பொழிய வாடுங் கொடியின் மொழிக்காகார்
வெய்யோ னெண்ணந்தனக்கா கார் விறல் வேந்தர் வெரூஉக் கொண்டு
பொய்யோ வன்று மெய்யாகப் புனையோ வியம்போ லிருத்தாரை ஐயோ வந்தக் கொடுமையையா முரைக்கும் பொழுதைக் கதிபாவம்
(சூது போர்ச் சருக்கம் பாடல் 236)
இதன் பொருள்: – (வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் உரையின் படி)
கௌரவர் சபையில் உள்ள பராக்கிரமம் உள்ள வேலாயுதத்தை ஏந்திய அரசர்கள் துரியோதனனிடத்தில் கொண்ட அச்சத்துடன், மையையும் செவ்வரியையும் உடைய கண்களிலிருந்து மழை போல நீர் பெருக வாடும் பூங்கொடி போன்ற திரௌபதியினது கேள்விக்குச் சரியான பதில் கூறத் திறனற்றவர்களாக இருந்ததால் கொடியவனாகிய துரியோதனனின் எண்ணத்திற்கு உடன்பட்டுக் கூறாதவ்ர்களாயும் பொய்யே இல்லாமல் உண்மையாகவே அழகாக எழுதிய ஓவியம் போலவே இருந்தார்கள்.

ஐயோ!
அந்தக் கொடுமையைக் குறித்து யாம் எடுத்துச் சொன்னாலும் கூட அப்பொழுது நமக்குப் பெரும் பாவம் உண்டாகும்.
ஒரு பெரிய இரகசியத்தை கவிஞர் இங்குச் சுட்டிக் காட்டுகிறார்.
ஒருவன் பாவச் செயலை இன்னொருவன் எடுத்துரைத்தால் அவ்வாறு உரைப்போனையும் அந்தப் பாவத்தில் பாதிப் பங்கு சேரும் என்பது அறநூல் கொள்கை.
ஆகவே ஐயோ, கவிதைக்கென்று நடந்ததைச் சொன்னாலும் கூட எனக்கும் அல்லவா அந்தப் பாவத்தில் பாதி வந்து சேரும் (ஐயோ அந்தக் கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு அதிபாவம்) என்று புலம்புகிறார் வில்லிப் புத்தூரார்.
ஆகவே தான், ‘அடுத்த வீட்டுப் பெண் ஒடிப் போய் விட்டாள் என்று வீடு வீடாகச் சென்று வம்பளப்பதற்கு முன்னர் உன் வீட்டுப் பையன் வீட்டில் இருக்கிறானா என்று உறுதி செய்து கொள்’ என்று சொன்னார்கள் பெரியோர்.
பாவச் செயல்களைச் செய்யாதே; பங்கு கொள்ளாதே; அதைப் பரப்பாதே என்பது அறநூல் தரும் அறிவுரை.
பரப்புவது பற்றித் தெரியாதவர்களுக்கு வில்லி பாரதத்தில் இந்த இடம் மாபெரும் இரகசியத்தை அறிவிக்கிறது.
இந்த ஐயோ பாடல் அழகான பாடல்!
பாவத்தைத் தடு; புண்ணியம் சேரும்
பாவம் புண்ணியம் பற்றிய இன்னொரு இரகசியத்தை கீசகன் வதைச் சருக்கத்தில் வில்லிப்புத்தூரார் அற்புதமாக விண்டுரைக்கிறார்.
பண்ணிய வினைகளின் பயனலாது தாம் எண்ணிய கரும மற்றி யாவரெய்தினார் திண்ணிய கீசகன் செய்த தீங்கிவன் புண்ணியமானதாற் புகல்வதென்கொலாம்
(கீசகன் வதைச் சருக்கம் பாடல் எண் 83)
கீசகன் திரௌபதியை அடையக் கருதுகிறான். அந்தத் தீச்செயலால் அவனது தீவினைப் பயன் அவனை அழிக்கிறது. அதுவே பீமனுக்கு புண்ணியப் பயனாக இருந்தது என்று ஒரு அழகிய இரகசிய உண்மையை இங்கு வில்லிப்புத்தூரார் உலகினருக்கு எடுத்துரைக்கிறார்.
பாடலின் பொருள் : அவரவர் செய்த புண்ணிய பாவ ரூபமான செய்கைகளின் பயனை அடைவதல்லாமல் தாம் நினைத்த செயலை வினைப்பயனுக்கு மாறாக அடைந்தவர் யார் தான் இருக்கிறார்கள்? வலிமை வாய்ந்த கீசகனின் தீச்செயல் பீமனுக்குப் புண்ணியப் பயனைத் தருவதாக ஆயிற்று.
இதைப் பற்றி யாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது (புகல்வது என் கொல்?)
ஒரு இரகசியத்தை வெளியிடும் போதெல்லாம் கவிஞர் வில்லிப்புத்தூரார் திரைமறைவிலிருந்து வெளிவந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
எத்தனை அற்புதமான கவிஞர் அவர்!
பாவச் செயலைத் தடுப்பவன் ஒருவனுக்கு பாவியின் தீவினையே புண்ணியமாகிறது. கீசகப் பாவியை அழிக்க வந்த பீமனுக்கு அந்தப் பாவியின் பாவமே புண்ணியமாகிறது.
புண்ணிய பாவ மெக்கானிஸத்தில் இந்த ‘ட்ரான்ஸ்பர்” நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
ஆக பாவச் செயலைப் பரப்பக் கூடாது என்பது மட்டுமல்ல; பாவச் செயலைத் தடுத்தால் புண்யம் தானே சேரும் என்பதும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு இரகசியம் தானே!
*******
S.n. Ganapathi
/ January 2, 2016வணக்கம்
அஹா அருமையான உதாரணங்களுடன் இன்றைய மக்களின் மனப்பாங்கு எவ்வாறு ..???திருத்தி கொள்ள வேண்டியது ???
நன்றி .s.n.ganapathi..