
Written by london swaminathan
Date: 30 January 2016
Post No. 2490
Time uploaded in London :– 4-36 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது! வில் முனையைவிட சொல் முனை வலியது என்பதை உலகம் அறியும். சோழ மன்னனை துச்சமாக மதித்தான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். போஜ ராஜனை கெஞ்சும்படி வைத்தான் உலக மஹா கவிஞன் காளிதாசன். கிரேக்க நாட்டிலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளனின் சக்தி மிகப்பெரியதாக விளங்கியது. இதைக் காட்டும் இரண்டு சுவைமிகு சம்பவங்களைக் காண்போம்.
கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே மோதல் உருவானது. ரோமானியர்கள், ஏதென்ஸ் நகர அதீனீயர்களைச் சிறைப்பிடித்து சைரக்யூஸ் என்னுமிடத்தில் காவலில் வைத்தனர். போர்க் கைதிகளுக்குப் பொழுது போகவில்லை. கிரேக்க நாட்டின் கவிஞன், நாடகாசிரியன் யூரிபெடீசின் கவிதைகளை அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு சொன்னார்கள். நாம் அந்தாதி விளையாட்டு விளையாடுவது போல, அவர்கள் உற்சாகம் காட்டினர். இதை காவற்காரர்களும் ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்தார்கள்.
சாதாரணமாக கைதிகளை மிருகங்கள் போல நடத்தி, கண்ட வேலைகளைச் செய்யச் சொல்லுவது அங்கே வழக்கம். ஆனால் நாடகத்தில் வரும் கவிதையின் மஹா சக்தி, அந்தக் காவற்காரர்களின் மனதைக் கொள்ளை கொண்டது. இந்தச் செய்தி மேலதிகாரிகளுக்கும் போனது. அவர்களும் கைதிகளைத் தொடர்ந்து கவிதை வாசிக்கும்படி சொன்னார்கள். அந்தக் கைதிகளை, கவுரவ விருந்தாளிகளாக நடத்தி, பின்னர் விடுதலையும் செய்தார்கள்.
அதீனிய கைதிகள், ஏதன்ஸ் நகரத்துக்குத் திரும்பியவுடன் நேராக யூரிபிடீசின் வீட்டுக்குப்போய் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். வாள் முனையில் தோற்றாலும், பேனா முனையில் வெற்றி கிடைத்தது குறித்து யூரிபிடீசுக்கு ஏக சந்தோஷம். முன்னாள் கைதிகள் அவரை வணங்கி, ஐயன்மீர்! நீங்கள்தான் எங்களை விடுதலை செய்தீர்கள், உயிர் கொடுத்து காப்பாற்றினீர்கள் என்று பாராட்டிவிட்டுச் சென்றனர்.
Xxx

சோபோக்ளிசுக்கு விடுதலை!
கிரேக்க நாட்டின் புகழ்மிகு எழுத்தாளர்களில் ஒருவர் சோபோக்ளீஸ். அவர் சோகச் சுவை நாடகங்கள் எழுதுவதில் மன்னன். சதா சர்வ காலமும், அல்லும் பகலும் அனவரதமும் பேனாவும் கையுமாகத் திரிந்ததால், நிலபுலன்களையும், வீடு வாசலையும் அவர் கவனிக்கவில்லை என்று குடும்பத்தினர் கவலைப் பட்டனர்.
அவர்கள் என்ன சொன்னாலும் இவரோ “நமக்குத் தொழில் கவிதை- நாட்டிற்குழைத்தல்” என்ற கொள்கையுடன் எழுதினார்- எழுதினார்- எழுதிக் கொண்டேயிருந்தார். பிள்ளைகளுக்குப் பொறுக்கவில்லை. அப்பா மீது வழக்குத் தொடுத்தனர்.
வழக்கு, நீதி மன்றத்துக்குச் சென்றது. மகன்கள் சொன்னார்கள்: “எங்கள் அப்பனுக்கு படிச்சுப் படிச்சு மூளை குழம்பி போச்சு; வீட்டு வாசல் நினைவும் தப்பிப் போச்சு. ஆகையால் இந்தக் கிழவனை கையலாகாத பயல் என்று அறிவித்து, அந்த சொத்து சுகங்களை நிர்வகிக்கும் பொறுப்பை எங்களிடம் தர உத்தரவிட வேண்டுமென்று கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.
சோபோக்ளீஸ் நகைத்தார்; அப்பொழுதுதான் அவர் ஒரு அருமையான நாடகத்தை எழுதி முடித்திருந்தார். கையில் அந்த ஓலைச் சுவடிகள் இருந்தன. எடுத்தார் சுவடிகளை; தொடுத்தார் சொல் அம்புகளை. ஐயன்மீர்! வயது காரணமாக மூளை குழம்பியிருந்தால் நான் இப்படி எழுத முடியுமா? என்று வினவினார். அவருடைய எழுத்தின் மஹா சக்தியைக் கேட்ட நீதிபதிகள் அனைவரும், “கூரிய புத்தியுடையவர் இவர்” என்று அறிவித்து விடுதலை செய்தனர். மகன்கள் தொடுத்த வழக்கு மண்ணைக் கவ்வியது!
சொல் அம்பு வலியது; வில் அம்பு மெலியது;
சொல் வீச்சு சக்தி வாய்ந்தது; வாள் வீச்சு பலவீனமானது.

தன்னுடன் கிரேக்க நாட்டுக்கு வராவிடில், தலையைச் சீவிவிடுவேன் என்று இந்து சந்யாசியை மிரட்டினான் மாமன்னன் அலெக்ஸாண்டர். அந்த சந்யாசியோ இடிபோலச் சிரித்து, இந்த ஆன்மாவை வாள் வெட்டாது, தீ எரிக்காது, தண்ணீர் நனைக்காது; இது தோன்றியதுமில்லை; அழிவதுமில்லை. என்றுமுளது! –என்று இடிமுழக்கம் செய்யவே அலெக்ஸாண்டர் அசந்தே போனான்! அவனது வீர வாளை உறைக்குள் சொருகிவிட்டு அவரை வணங்கிச் சென்றான் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க, ரோமானிய எழுத்தாளைர்கள் எழுதிவைத்துள்ளனர் (முழு விவரம் வேண்டுவோர் “நிர்வாண சாமியார்களுடன் அலெக்சாண்டர்” என்ற என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் காண்க)
–சுபம்–
You must be logged in to post a comment.