மனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி! ஒரு சுவையான கதை! (Post No. 3436)

Written by London swaminathan

 

Date: 10 December 2016

 

Time uploaded in London: 9-32 am

 

Post No.3436

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

This story is available in English in my blog.

 
மனம் ஒரு கடல். நம் ஒவ்வொருவரிடையேயும் மகத்தான சக்தி இருக்கிறது. அதைத் தேவை ஏற்படும் போது பிரயோகித்து அதிசயம் நிகழ்த்தலாம். இதோ பேராசிரியர் உஷர்புத் சொன்ன கதை. அவர் முதலில் அமெரிக்காவில் மின்னசோட்டா ப ல்கலைக் கழக சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியராக இருந்து பின்னர் வேதபாரதி என்ற பெயரில் சாமியார் ஆனார்.

 

“முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார். அவருடைய அண்ணன் பெரிய அறிவாளி; ஒரு நேரத்தில் அரசாட்சியைத் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு தவம் செய்யப் போய்விட்டார். தவத்தின் மூலமாக நிறைய சக்தி கிடைத்தவுடன் ஒரு ஆஸ்ரமம் அமைத்தார். ராஜாவின் அரண்மனை நதியின் ஒரு பக்கமும் மறுகரையில் அந்த ஆஸ்ரமமும் அமைந்திருந்தன.

 

காலம் உருண்டோடியது; தம்பிக்கு (ராஜவுக்கு) கல்யாணம் நடந்தது– மனைவி கர்ப்பவதி ஆனாள். கர்ப்பிணிப் பெண்கள் எப்போதும் நல்ல விஷயங்களைக் கேட்டால் குழந்தையும் அறிவாளியாகவும் ஞானியாகவும் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதை ஒட்டி மஹாராணியும் கணவனிடம் சொன்னாள்:

சுவாமி! நாதா! என் பிரிய நாயகரே; எனக்கோ விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது. உங்கள் குழந்தையும் உங்களைப் போல அறிவாளியாகவும், ஞானவானாகவும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் . ஆகையால் உங்கள் அண்ணனை — சந்யாசியைப் பார்த்துவர அனுமதி கொடுங்கள்.

 

ராஜாவுக்கு மெத்த மகிழ்ச்சி; அதற்கென்ன சென்று வா; வென்று வா! என்று செப்பினார். சாது சந்யாசிகளையும், அரசனையும் பெரியாயோர்களையும் பார்க்கச் செல்லுகையில் வெறும் கையுடன் போகக்கூடாது; ஏதேனும் அன்பாகக் கொடுப்பதற்குக் கொண்டுபோக வேண்டும் என்று இந்துமத சாத்திரங்கள் சொல்லுகின்றன. ஆகவே அவளும் உடனே நிறைய பலகாரங்களைச் சமைத்து எடுத்துக்கொண்டாள். புறப்படுவதற்கு முன் ராஜாவிடம்சென்று, அன்பரே ஆற்றைக் கடக்க படகு ஏற்பாடு செய்துவிட்டீர்களா? என்று வினவினாள்.

ராஜா சொன்னார்: கண்ணே! மணியே! கற்கண்டே! படகு எதற்கு? சத்தியம் செய்துவிட்டு அந்த சத்தியத்தின் பேரில் “நதியே வழிவிடு” என்றால் தானாக வழிவிடும். நந்த கோபன், கிருஷ்ணனை தலைமீது கூடையில் வைத்துக் கொண்டு யமுனையைக் கடக்கவில்லையா? அப்போது யமுனையே வழிவிட்டதே!

 

மனைவி/ மஹாராணி சொன்னாள்: அவர்களுக்கெல்லாம் மஹத்தான சக்தி இருந்தது. எனக்கு அப்படி ஒன்றுமில்லையே!

 

கணவர்/ ராஜா சொன்னார்:

அதனால் என்ன? என்னுடைய சக்தியை எடுத்துக் கொள். நதிக் கரைக்குப் போய் நில்; என் கணவன் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான நாள் முதல் இன்று வரை  பிரம்மச்சாரி என்பது உண்மையானால் நதியே எனக்கு வழிவிடு என்று சொல் என்றார்.

 

மனைவிக்கு ஒரு புறம் சந்தேகம்; மறுபுறம் குழப்பம்; என்னுடன் படுக்கையில் படுத்து என்னை கர்ப்பம் தரிக்கச் செய்தவர்; எப்படி பிரம்மச்சாரி என்று சொல்லுகிறார்?  சரி, போய்தான் அவர் சொன்னதைச் செய்வோமே என்று அவர் சொன்னபடியே செய்தாள். நதியும் விலகி வழிவிட்டது!

 

மகிழ்ச்சியுய்டன் மறுகரையிலுள்ள ஆஸ்ரமத்தை அடைந்தாள். ராஜாவின் அண்ணனான சாமியாருக்கு நாள் முழுதும் பணிவிடை செய்தாள்; உபதேச மொழிகளைக் கேட்டறிந்தாள். தான் கொண்டு சென்ற பலகாரங்களைப் பரிமாறி அவரை உண்ண வைத்தாள். அவரும் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லிச் சாப்பிட்டார்.

 

மாலை நேரம் நெருங்கியது; கணவனிருக்கும் அரண்மனைக்குப் போவதற்கு விடை பெற்றாள் சந்யாசியிடம்.

“தயவு செய்து, எனக்கு ஒரு படகு மட்டும் ஏற்பாடு செய்து விடுங்கள்; நான் பொழுது சாய்வதற்குள் அரண்மனைக்குப் போக வேண்டும்” என்றாள்.

சந்யாசியோ சிரித்துக் கொண்டே சொன்னார்:

“பெண்மணியே! சத்தியம் செய்துவிட்டுப் போ, நதி தானாக வழிவிடும் என்றார். என்ன சத்தியம் செய்வது?” என்று கேட்டாள்.

 

“நான் காலை முதல் மாலைவரை பணிவிடை செய்த சந்யாசி நாள் முழுதும் உண்ணா நோன்பு அனுஷ்டித்தது உண்மையானால் ஏ! நதியே! எனக்கு விலகி வழிவிடு என்று சொல்; நதியும் விலகிவிடும்” என்றார்.

அவளுக்கு மீண்டும் குழப்பம். என் கையால் சமைத்ததை நாள் முழுதும் சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருந்ததாகச் சொல்லுகிறாரே! என்று திகைத்தாள்

638d2-img_7098

ஆயினும் காலையில் வந்தபோது நிகழ்ந்த அதிசயம் மீண்டும் நடக்குமோ என்று எண்ணி, சந்யாசி சொன்னபடியே செய்தாள். நதியும் இரண்டாகப் பிரிந்து இடைவெளியில் பாதை உண்டாக்கியது. இதைக்கண்டு வியப்புற்ற அவள், கணவனிடம் இதற்கு விடை கேட்காவிடில் என் தலையே வெடித்துவிடும்; அவ்வளவு குழப்பமாக இருக்கிற து என்று எண்ணிச் சென் றாள்.

 

 

கணவன் அவளை இன்முகத்துடன் வரவேற்றவுடன் கேட்ட முதல்

கேள்வி:

நீங்கள் பிரம்மசாரியுமில்லை; உங்கள் அண்ணன் உண்ணாவிரதியும் இல்லை; நீங்கள் என் வயிற்றிலுள்ள குழந்தைக்குத் தந்தை; அவரோ நாள் முழுதும் நான் கொண்டு சென்ற உணவுவகைகளை ருசித்துச் சாப்பிட்டார்.

 

சுவாமீ! நாதா!! இதற்கு என்ன விளக்கமோ?

 

அவர் சொன்னார்:-

“அன்பே! ஆருயிரே! மனத்தின் விசாலம் பலருக்கும் தெரிவதில்லை. அது சமுத்திரம் போலப் பரந்தது; உண்மையாகவுள்ள சமுத்திரத்தைவிட ஆழமானது, பெரியது. அதில் நாம் துளிக்கூடப் பயன்படுத்தவில்லை. நான் உன்னுடன் படுக்கையில் படுத்து இன்பம் துய்த்தது உண்மையே; எனது அண்ணன்/ சந்யாசி நீ கொண்டுசென்ற உணவைப் புசித்ததும் உண்மையே. ஆயினும் எப்படி கடலின் ஒரு ஓரத்தில் அழுக்குப் படிந்தாலும், அந்தக் கடல் முழுதும் அழுக்குக் கடல் ஆகாதோ, அப்படியே மனத்தின் ஒரு ஓரத்தில் பதிந்திருக்கும் இக்காரியங்கள் — செயல்கள் — எங்களைப் பாதிக்காது.

 

என் கருத்து:–

மனத்தின் சக்தி மஹத்தானது; ஆதிசங்கரர்,ஜனக மஹராஜா போன்ற ஞானிகள் அதைப் பயன்படுத்தி பல அற்புதங்களைச் செய்துள்ளனர். மேற்கூறிய கதையைப் பின்னனியில் வைத்து மகான்களின் புரியாத செயல்களை ஆராய்ந்தோமானால் பொருள் விளங்கும்!

 

–subham–

 

Leave a comment

Leave a comment