
Written by S NAGARAJAN
Date: 4 January 2017
Time uploaded in London:- 4-52 AM
Post No.3512
Pictures are taken from different sources; thanks.
Contact: swami_48@yahoo.com
சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 18
இந்தக் கட்டுரையில் பரிபாடலில் வரும் 4,5,6,8 ஆம் பாடல்களில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..
பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 4
ச.நாகராஜன்
பரிபாடலில் நான்காம் பாடல்
பரிபாடலின் நான்காம் பாடல் 73 அடிகளைக் கொண்டுள்ளது.
இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பெட்ட நாகனார். திருமாலைப் பற்றிய அழகான பாடல் இது. இதில் இரணியனைக் கொன்று பிரகலாதனைக் காப்பாற்றிய வரலாறு வருகிறது. பிரகலாதன் என்ற பெயரையும் இதில் காணும் போது புராணங்கள் பாரதம் முழுவதிலும் பரவி இருந்தமை தெரிய வருகிறது. வராக அவதாரத்தின் சிறப்பு, கருடக் கொடியின் பெருமை போன்றவை சிறப்பு வாய்ந்த சொற்களால் வர்ணிக்கப்படுகிறது.
நின்னோர் அன்னோர் அந்தணர் அருமறை (வரி 65)
என்ற இந்த வரியால், “திருமாலின் பெருமை அளப்பதற்கு அப்பாற்பட்டது. அது அந்தணர் ஓதும் வேதத்தால் உரைக்கப்படுகிறது” என்பது விளக்கப்படுகிறது.
ஐந்தாம் பாடல்
அடுத்ததாக, பரிபாடலின் ஐந்தாம் பாடல் 81 அடிகளைக் கொண்டுள்ளது.
இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் கண்ணகனார். முருகனைப் பற்றிய அழகான பாடல் இது. முருகனிடம், “யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல; அருளும் அன்பும் அறனும் மூன்றும்” மட்டுமே யாம் வேண்டுவது என்னும் வரிகள் மனதை உருக்குபவை.
இதில் வரும்,
“ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து” (வரிகள் 22,23)
என்பதன் பொருள் :
ஆதி அந்தணன் என்பது புராதன பிராமணனான பிரம்மம்.அந்த ஆதி அந்தணன் புவி என்னும் ரதத்தில் எப்படி நன்கு ரதத்தை நடத்துவது என்பதை அறிந்து வேதத்தை குதிரைகளாகக் கொண்டு புவி மீது நடத்துகிறான்.
ஆறாம் பாடல்
அடுத்ததாக, பரிபாடலின் ஆறாம் பாடல் 106 அடிகளைக் கொண்ட நீண்டதொரு சுவையான பாடல்..
இதைப் பாடியவர் ஆசிரியர் நல்லந்துவனார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் மருத்துவன் நலலச்சுதனார். வையையின் பெருமையை மிக அழகுற விளக்கும் பாடல் இது. வையையில் வெள்ளம் கரையையும் உடைத்துக் கொண்டு ஓட மகளிரும் ஏனையோரும் புனலாடுதல் உள்ளிட்ட பல காட்சிகளை அழகுறப் படம் பிடித்துக் காட்டும் பாடல் இது.
ஓடி வரும் வெள்ளத்தால் அந்தணர் கலக்கம் அடைகிறார்களாம். அதைப் பாடல் அழகுறச் சொல்கிறது இப்படி:
நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழை புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு (வரிகள் 43-45)
புலம் என்றால் வேதம். புலம் புரி என்பதால் வேதம் ஓதும் அந்தணர் என்பது சொல்லப்படுகிறது. அவர்கள் மணத்துடன் கரை புரண்டோடும் ஆறு கண்டு (நாறுபு நிகழும் யாறு கண்டு) இது வேறு பல மணம் கொண்டு அழிந்தது என்று (வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழை) வேதம் ஓதும் அந்தணர் மருண்டு கலங்கினர் (புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு)
அழகான வையைப் பற்றி விளக்கும் அற்புதமான பாடல் இது.
எட்டாம் பாடல்
அடுத்ததாக, பரிபாடலின் எட்டாம் பாடல் 130 அடிகளைக் கொண்ட நீண்டதொரு அழகிய பாடல்..
இதைப் பாடியவர் ஆசிரியர் நல்லந்துவனார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் மருத்துவன் நலலச்சுதனார். திருப்பரங்குன்றின் மாண்பினை இதை விடச் சுவையாகக் கூற முடியாது என்ற அளவில் பரங்குன்றின் சிறப்பை விளக்கும் அற்புதப் பாடல் இது.
இமய மலையை ஒக்கும் சிறப்புடைய குன்று எது தெரியுமா?
பதிலைப் பாடல் தருகிறது இப்படி:
“பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும் இமயக் குன்றினில் சிறந்து” (வரிகள் 11,12)
முருகன் உறைந்து அருள் புரியும் மலை இமயத்தில் சிறந்ததாக இல்லாமல் இருக்க முடியுமா என்ன?
“யாவரும் பிறரும் அமரரும் அவுணரும் மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்”
(வரிகள் 8,9)
தேவர்கள், அசுரர்கள், முதுமொழி எனப்படும் வேதம் ஓதுவதில் நிபுணர்களான தவ முதல்வரும் வந்து சேரும் இடம் திருப்பரங்குன்றமே!
பரங்குன்றின் அருமை பெருமைகளை தேர்ந்தெடுத்த தமிழ்ச் சொற்களால் உரைக்கும் இந்தப் பாடலை அனைவரும் படித்தல் வேண்டும்.
அரு மறை, வேதம், புலம், முது மொழி என்று இப்படி, பல சொற்களால் வேதம் புகழப்படுவதையும் அதை ஓதும் அந்தணர் மேன்மை உரைக்கப்படுவதையும் இந்தப் பரிபாடல் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன..
**********