
Written by London swaminathan
Date: 19 January 2017
Time uploaded in London:- 21-11
Post No.3558
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் எழுதிய ஏழே நூல்களில் 70,000 விஷயங்களைச் சொல்லுகிறான் என்றால் அது மிகையாகாது. அவன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் நாலாவது சர்கத்தில் ரகுவின் படைகள் புறப்பட்ட போது குதிரைக்கு ஆரத்தி எடுத்தது பற்றிச் சொல்லுகிறான். அவனது ரத, கஜ, துரக, பதாதி (தேர், யானை, குதிரை, காலாட் படை) என்னும் நால்வகைப் படைகளில் ஆறு பிரிவுகள் இருந்தது பற்றி உரைகாரர்கள் பல அதிசய விஷயங்களைச் சொல்லுவர்.

குதிரை ஆரதி: வாஜி நீராஜனம்
“வாஜி நீராஜனம் என்னும் சடங்கைச் செய்கையில் ஹோமத்தில் நன்கு மகிழ்விக்கப்பட்ட அக்னி வலமாகச் சுழன்றதால் அவனுக்கு (ரகு என்ற மன்னனுக்கு) அக்னி, வெற்றியைக் கொடுத்தான் போலும்” — ரகு வம்சம் 4-25
இந்த ஸ்லோகத்தில் இரண்டு விஷயங்கள் உள்ளன. அக்னி (தீ ஜ்வாலை) வலமாகச் சுழன்றால் சுப சகுனம். இதை பாரதம் முழுவதும் காணலாம். கோவிலை வலமாக வருவோம். பெரியவர்களை வலமாக வருவோம். எல்லாவற்றையும் வலது கைகளால் செய்வோம். சங்கத் தமிழ் இலக்கியத்தில் புலியானது, தான் கொல்லும் மிருகங்கள் இடப் பக்கம் விழுந்தால் சாப்பிடாது என்று பாடல்கள் உள்ளன. இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுப் பழமையான இலக்கியத்தில் உள்ளதாலும் வேறு எங்கும் இவ்வழக்கம் இல்லை என்பதாலும் ஆரிய-திராவிடப் பிரிவினைகள் கட்டுக்கதை என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளக்கும்.
இரண்டாவது விஷயம் வாஜி நீராஜனா= குதிரைக்கு ஆரத்தி.
போருக்குப் புறப்படுவதற்கு முன்னர் ஒரு நல்ல குதிரையையும் யானையையும் தேர்ந்தெடுத்து அதற்கு புஷ்ப, வஸ்திரம் (ஆடை), ஆபரணம் (அணி) ஆகியவற்றை அணிவித்து ஆரத்தி எடுப்பர்; இதற்கு குதிரை ஆரத்தி என்று பெயர்.
அடுத்த ஸ்லோகத்தில் தலை நகரைவிட்டு ரகு புறப்படுவதற்கு முன்னர், என்ன என்ன செய்தான் என்று வருகிறது:
தலைநகரிலும் எல்லைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தினான். பின்பகுதியிலுருந்து தாக்குதல் வராமல் உறுதி செய்தான் தெய்வ பலத் துடன் அறுவகைப் படை வீரர்களுடம் திக்விஜயம் செய்யப் புறப்பட்டான் 4-26
(நான்கு திசைகளிலும் சென்று மன்னர்களை வெல்லுவது திக்விஜயம் என்பதாகும்)
இந்த ஸ்லோகத்திலும் இரண்டு புதிய விஷயங்களைக் காணுகிறோம். முதலாவது ஒரு மன்னன் நாட்டை விட்டோ, தலைநகரைவிட்டோ போகும்போது, என்ன பாதுகாப்பு செய்ய வேண்டும் என்பதாகும். இரண்டாவது விஷயம் ஆறு வகைப் படைப் பிரிவுகள் என்பதாகும். அது என்ன ஆறுவகைப் படைப் பிரிவு என்று உரைகாரர்கள் எழுதிவைத்துள்ளனர்.

அறுவகைப் படைப் பிரிவு!
மௌலாஹா
நற்குடியில் பிறந்து பரம்பரையாகவே அரசனுக்கு ஊழியம் செய்வோர்; இவர்களை லஞ்சம் கொடுத்தோ, பணம் கொடுத்தோ மாற்ற முடியாது. விசுவாசமுடைய, நம்பத் தகுந்த படை வீரர்கள்.
ப்ருத்யாஹா
கூலிப்படை; இவர்கள் கூலிக்கு மாரடிக்கும் வீரர்கள். பணத்துக்காக வீரம் காட்டுவதால் அதிகம் நம்பிவிடக் கூடாது. இவர்களும் படையில் எப்போதும் இருப்பர்.
சுஹ்ருதஹ
நல்ல நண்பர்கள். அரசனது நண்பர்களும், அவர்கள் அனுப்பிய வீரர்களும் இதில் அடக்கம். இவர்கள் நண்பனுக்காக உதவி செய்ய வந்தவர்கள்; நம்பத்தக்கவர்கள்.
ச்ரேணயஹ
சண்டைக்காக அவ்வப்போது திரட்டப்படும் வீரர்கள்; சம்பளத்துக்காக வேலை செய்துவிட்டு போர் முடிந்தவுடன் வீட்டுக்குப் போய் வேறு வேலைகளைச் செய்வர்; ஒரு ரிசர்வ் படை போன்றது இவர்கள் தற்காலிகப் படை என்பதால் முழுக்க நம்ப முடியாது.
த்விஷதஹ
எதிரிப் படைகளிலிருந்து தாமாக ஓடி வந்தவர்களும், சிறைப் பிடிக்கப்பட்ட வீரர்களும் இந்தப் பிரிவில் இருப்பர். சில நேரங்களில் நிறைய பணம் கொடுத்து எதிரிப் படை வீரர்களைத் தம் பக்கம் இழுப்பதும் உண்டு. எதிரிக்கு எதிரி யாரோ அந்தப் படைகளில் இருந்தும் இப்படிச் சேர்க்கப்படுவர்.
ஆடவிகம்
காட்டுப் படை. காடுகளில் வாழும் வேடர்கள், பழங்குடி மக்களைக் கொண்டது இப்பிரிவு. காடுகளைக் கடந்து செல்லுகையில் அவர்களுடைய அறிவும் அனுபவமும் பயன்படும். மலைகளிலும், காடுகளிலும் சண்டை நடக்கையில் இவர்கள் மிகவும் உதவுவர். மேலும் மரங்களை வெட்டி சாலை அமைத்தல் முதலிய பணிகளுக்கு இவர்களின் உதவி தேவை ஆனால் முழுவதும் நம்பிவிட முடியாது.

இது போல தமிழ் இலக்கியத்திலும் பலவகைப் படைப் பிரிவுகள் பற்றிச் சுவையான செய்திகள் உண்டு. அவைகளைத் தனியாகக் காண்போம்.
–subham–