லண்டனில் கிடைத்த ரோமானிய கழுகு சிலை
Written by London swaminathan
Date: 2 March 2017
Time uploaded in London:-10-35 am
Post No. 3684
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்திலும் ரிக்வேதத்திலும் கழுகு, பருந்து, கருடன், ராஜாளி என்ற பறவைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் சில அதிசய விஷயங்கள் — அதிசய ஒற்றுமைகள் — தெரிய வருகின்றன.
அவை என்ன?
1.இரண்டு கலாசாரத்திலும் இந்த வகைப் பறவைகள், இறைவனுடனும் அரசனுடனும் சம்பந்தப் பட்டுள்ளன.
2.இரண்டு கலாசாரங்களிலும் மரணம், மரணமிலாப் பெருவாழ்வு ஆகியவற்றுடன் இப்பறவைகள் சம்பந்தப் பட்டுள்ளன.
3.இரண்டு கலாசாரங்களிலும், சூரியனுடன் உடனுள்ள தொடர்பு காட்டப் பட்டுள்ளன.
4.மிகப்பழைய குறிப்புகள் உள்ளன.
கருட வாஹனம்
முதலில் ரிக் வேதத்தைக் காண்போம்:
ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் (பிரிவுகள்) இருக்கின்றன
கீழ்கண்ட இடங்களில் ஸ்யேன, சுபர்ணா முதலிய சொற்களால் இப்பறவைகள் குறிப்பிடப்படுகின்றன. இந்திரன், வருணன் போல பருந்தையும் ஒரு தேவதையாக வைத்து ஒரு துதி உள்ளது (4-27).
ஏன் இப்படி பருந்து அல்லது கருடன் மீது பாடினார்கள் என்பது ஒரு புதிராகவே இருக்கிறது!
மஹா சுபர்ண என்று சதபத பிராமணத்தில் சொல்ல்ப்படுகிறது (12-2,3,7)
சகன் என்று ஒரு பறவை குறிப்பிடப்படுகிறது; இது பற்றி யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை; பருந்தோ, கழுகோ என்று சந்தேகத்துடன் எழுதுவர்! (தைத்ரீய சம்ஹிதை 3-2,1,1)
சுபர்ண
இதற்கு இரண்டு பொருள் உண்டு; நல்ல இறக்கை உடைய; நல்ல இலை உடைய.
இது கழுகு அல்லது கருடன் அல்லது பருந்து போன்ற பறவை என்று ரிக்வேத உரைகாரர் எழுதுவர்.(1-164-20; 2-42-2; 4-26-4;8-100-8;9-48-3
ஸ்யேன என்ற சொல்லாலும் இப்பறவையை வேதம் குறிப்பிடும். சுபர்ணாவின் அரசனே கருடன் என்று அதர்வண வேதம் சொல்லும்; புராணங்களில் கருடனே விஷ்ணுவின் வாஹனமாக அமைந்தது.
கழுகு வடிவ யாக குண்டம்
விநோதச் செய்தி
அன்னப் பறவை பாலையும் தண்ணீரையும் தனித்தனியே பிரிக்கும் சக்தி படைத்தது என்று காளிதாசன் சொன்னதை தமிழ்ப் புலவர்களும் சொல்லுவது பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். ஜைமினீய பிராமணம் என்னும் நூலில், கிரவுஞ்சப் பறவை போல கழுகும் தண்ணீரையும் பாலையும் பிரிக்கும் சக்தி படைத்தது என்று எழுதியுள்ளதாக (2-438) கீத்தும் மக்டொனால்டும் எழுதிய வேத இன்டெக்ஸ் கூறுகிறது
இது தவறான மொழிபெயர்ப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் சுபர்ண என்ற சொல்லுக்கு அன்னம் என்ற பொருளும் உண்டு என்று விஷ்ணு சஹஸ்ரநாம உரை சொல்லும் (பக்கம் 88, சஹஸ்ரநாம உரை, எழுதியவர் அண்ணா, ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4).
விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று “சுபர்ண” என்று சஹஸ்ரநாமத்தில் வருகிறது.
பேரறிவு பேரின்பம் ஆகிய இரண்டு அழகிய இறக்கைகளை உடையவர் என்று பட்ட பாஸ்கரர் உரையில் இருக்கிறது. அவர் இது விஷ்ணுவின் ஹம்சாவதாரம் பற்றிய குறிப்பு என்பார்.
த்வா ஸுபர்ணா ஸயுஜா, ஸகாயா ஸமானம் வ்ருக்ஷம் பரிஷ்வஜாதே- முண்டகோபநிஷத் 3-1-1.
இதிலிருந்து பறவை என்ற பொதுப் பொருளிலும் கழுகு, கருடன், அன்னம் (ஹம்சம்) என்ற சிறப்புப் பொருளிலும் இச்சொல் கையாளப்ப ட்டது தெரிகிறது.
விட்டுணு சஹஸ்ரநாமத்தில் இரண்டு இடங்களில் சுபர்ணா என்ற சொல் விட்டுணுவைக் குறிக்கிறது. மற்றொரு இடத்தில் “வேதமாகிய இலைகளோடு கூடிய சம்சார மரத்தின்” என்று ஆதி சங்கரர் உரை சொல்லும். இதற்கு அவர் கீதையை மேற்கோள் காட்டுவார் (கீதை 15-1)
கழுகு வடிவ யாக குண்டம்
சிந்து சமவெளியில்
சிந்து சமவெளியில் கருடன் போல முத்திரை கிடைத்தது.
இறந்துபோனவர் வீட்டில் அந்த ஆன்மா கடைத் தேறுவதற்காக 13 நாட்களுக்குள் ஒரு நாள் கருட புராணத்தைப் படிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. கருடன் அமிர்தம் எடுத்து வந்த கதை, மரகதம், மாணிக்கத்தை எடுக்கும் முறை, கரிகால் சோழன் முதலிய அரசர்கள் பருந்து வடிவில் யாக குண்டம் வைத்து, ராஜசூய யக்ஞம் முதலியன செய்ததை முன்னரே எழுதிவிட்டேன்.
ரோமானிய மன்னர்களின் சடலத்தைத் தகனம் செய்யும்போது சிதைத்தீக்கு மேலே ஒரு கழுகைப் பறக்கவிடுவர். மன்னரின் ஆவி சொர்க்கத்துக்கு/ வானுலகத்துக்குச் செல்லுகிறது என்பது இதன் பொருள். இது இந்துக்களின் நம்பிக்கை. மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை போல மேலே பறதுவிடும் என்பது இந்துமத நூல்களில் காணப்படுகிறது. தமிழ் வேதமாகிய திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் இதே கருத்தைக் காண்க:-
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு (338)
அழாஅம் உறைதலும் உரியம் – பராரை
அலங்கல் அம் சினைக் குடம்பைப் புல்லெனப்
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு (கல்லாடனார், அகம்.113)
கீதை 2-22 இதே கருத்தை வேறு உவமையுடன் (நைந்த உடை) சொல்லும்
எகிப்தில் கழுகு/பருந்து
1.ஹோரஸ் HORUS (சூரிய என்பதன் திரிபுச் சொல்) என்ற இறைவனின் வடிவம்தாம் மன்னன் என்று சொல்லும் எகிப்திய கல்வெட்டுகளும் காகிதங்களும் அந்த ஹோரஸை ஒரு பருந்தாகவே FALCON காட்டியுள்ளன.
2.கி.மு.3000 முதல் வழிபடப்படும் ஹோரஸ் என்னும் சூரிய தெய்வத்தை இந்துக்கள் கருட வாஹனத்தைச் சித்தரிப்பதுபோல, பருந்து முகத்துடனும் , மனித உடலுடனுமே வரைவர்.
3.சில நேரங்களில் சூரியன் நடுவிலும் இரண்டு (SUN DISC WITH WINGS ) இறக்கைகள் பக்கவாட்டிலும் உள்ளது போலும் வரைவர்.
4.இந்தப் பறவையின் கண்கள் நல்ல தாயத்து என்று வரைந்து அதையும் அணிந்தார்கள். இந்துக்கள் கருடனைக் கண்டால் சுப சகுனம் என்பது போல!
உலகிலுள்ள பல பண்பாடுகளில் கழுகு, கருடன் பற்றியுள்ள நம்பிக்கைகள் (மாயன் Mayan, காதிக், Gothic, மெக்ஸிகோ Mexican ) இந்துமத நம்பிக்கைகளின் பிரதிபலிப்பே!
முடிவுரை:-
ரிக் வேதத்தின் காலம் கி.மு 4500 முதல் 6000 வரை என்று ஜெ ர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், இந்திய அறிஞர் பாலகங்காதர திலகரும் ரிக் வேதத்திலுள்ள வானியல் குறிப்புக்ளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். இதுவரை யாரும் அது தவறு என்று சொல்ல முடியவில்லை. நாமும் அந்த தேதியை ஒப்புக் கொண்டால் உலகில் கருடன்/கழுகு பற்றிப் பாடியவர்களில் நாமே முதல்வர் என்பதில் ஐயமில்லை.
அஸீரிய கழுகு தேவதை
கண்டபேரண்ட பட்சி (இரட்டைக் கழுகு) துருக்கி
–subam–