
Written by S.NAGARAJAN
Date: 6 September 2017
Time uploaded in London- 5-27 am
Post No. 4187
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
ஹெல்த்கேர் செப்டம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
ஆயுர்வேத மஹிமை
நீடித்து ஆரோக்கியத்துடன் வாழ சரகர் கூறும் ஏழு மூன்றுகள் பற்றிய அறிவுரை! – 1
ச.நாகராஜன்
உலக மக்களுக்காக கருணையுடன் படைக்கப்பட்ட நூல் சரக சம்ஹிதை.
உலகில் தோன்றியவர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் நீடித்து வாழ அற்புதமான வழிமுறைகளை அவர் இந்த நூலில் எளிய முறையில் விளக்கியுள்ளார்.
அதில் அவர் ஏழு மூன்றுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.
உயிர் வாழ வாழ்க்கைக்கு ஆதாரமான மூன்று விஷயங்கள்
மூன்று விதமான வலிமைகள்
மூன்று விதமான காரணங்கள்
மூன்று விதமான வியாதிகள்
வியாதி உருவாக மூன்று விதமான அமைப்புகள்
மூன்று விதமான வைத்தியர்கள்
மூன்று விதமான சிகிச்சை முறைகள்
இவற்றை அறிந்து கொள்ளுங்கள் என்கிறார் சரகர்.
இதை அறிந்தவர் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்த பயனைப் பெறுவார்; அதாவது நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வார்.
உயிர் வாழ வாழ்க்கைக்கு ஆதாரமான மூன்று விஷயங்கள் யாவை?
உணவை உட்கொள்ளுதல்
தூக்கம்
பிரம்மசர்யம் அனுஷ்டித்தல்
இந்த மூன்றினால் கட்டுப்பாடான வாழ்க்கை அமைகிறது. உடல் வலிமை பெறுகிறது. வனப்பும் பொலிவும் கூடுகிறது.வளர்ச்சி ஏற்படுகிறது. முழு ஆயுள் வரை இவை நீடிக்கின்றன. ஒன்றே ஒன்று, இதையொட்டி இங்கு விவரிக்கப்படும் வியாதிக்கான காரணங்களை வரவழைக்காமல் இருக்க வேண்டும், அவ்வளவு தான்!
இந்த மூன்று ஆதாரங்கள் உப ஸ்தம்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஸ்தம்பம் என்றால் தூண்.

ஒரு வீட்டிற்கு ஆதாரமாக அமைபவை தூண்களே. அல்லது இந்தக் காலத்தில் சுவர்களே! அவற்றின் வலிமையைப் பொறுத்தே வீட்டின் ஆயுள் காலம் நிர்ணயிக்கப்படும்.
இந்த ஆதாரமான சுவர்களுக்கு அல்லது தூண்களுக்கு வலிமை ஊட்டும் வகையில் துணைத் தூண்கள் அதாவது உப ஸ்தம்பங்கள் தேவைப்படுகின்றன.
அதே போல இந்த உலகில் மனிதப் பிறவி எடுத்ததற்கான காரணத்தின் ஆதாரமாக சென்ற பிறவியில் நாம் செய்த வினைப்பயன்கள் அமைகின்றன.
பிறவி எடுத்தாகி விட்டது. இனி அதற்கு வலிமை ஊட்ட உப ஸ்தம்பங்களாக உணவு, தூக்கம், பிரம்மசர்யம் ஆகிய மூன்றும் அமைகின்றன.
உணவு என்று இங்கு குறிப்பிடப்படுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு மட்டுமே!
தூக்கமும் பிரம்மசர்யமும் கூட அளவுடன் அனுசரிக்கப்பட வேண்டும். அவை நீடித்த ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும்படியாக இருக்க வேண்டும்.
அடுத்தது மூன்று விதமான வலிமைகள்.
ஒன்று இயல்பாக உடலில் அமைந்த்திருக்கும் பலம்
இன்னொன்று ஒவ்வொரு மனிதனின் வயது மற்றும் பருவ காலத்தை ஒட்டி ஏற்படும் பலம்
அடுத்தது சரியான உணவுத் திட்டமுறை போன்றவற்றால் நாம் பெறும் பலம்.
இயல்பான உடல் பலம் பிறப்பால் வருவது.இது இயற்கையான தாதுக்களால் அமைவது. இயல்பாக அமைவதால் இதற்கு வேறு ஒரு அன்னியத் துணை எதுவும் தேவை இல்லை.
சிலர் பிறப்பிலேயே பலவானாக இருக்கிறார்கள். சிலர் பிறப்பிலேயே நோஞ்சானாக இருக்கிறார்கள். இது மரபணுவால் வரும் அமைப்பு.
மழைகாலம், வெயில் காலம் போன்ற பருவகால மாறுதல்கள் மற்றும் வயதால் வருவது இன்னொரு விதமான பலம்.
அடுத்து நெய் மற்றும் இதர உணவு வகைகளைச் சரியான முறையில் எடுத்துக் கொள்வது, சரியான முறையில் ஓய்வெடுப்பது, உடல்பயிற்சி போன்றவை இளமையைத் தக்க வைத்துப் பெறும் பலமாகும்.
அடுத்து வியாதிகள் உருவாவதற்கான காரணங்கள் மூன்று.
புலன்களை அதிகமாகப் பயன்படுத்துவது,
புலன்களைப் பயன்படுத்தாமலேயே இருப்பது,
புலன்களைத் தவறாகப் பயன்படுத்துவது, இதையொட்டிய செய்கைகள், காலம் இவற்றால் வியாதிகள் உருவாகின்றன.
எடுத்துக்காட்டாக கண்களை எடுத்துக் கொள்வோம். பிரகாசமான ஒரு பொருளை உற்று நெடு நேரம் பார்த்தால் கண்கள் என்ன ஆகும்?
எதையும் பார்க்காமலேயே இருந்தால் கண்களின் பயன் தான் என்ன?
அதே போல தவறாகப் பயன்படுத்துவது என்பது – கண்களை ஒரு பொருளின் அருகே கொண்டு சென்று பார்ப்பது அல்லது வெகு தூரத்திலிருந்து பார்க்க முயல்வது, பயமுறுத்தும் அல்லது ஆச்சரியமூட்டும் காட்சிகளைப் பார்ப்பது போன்றவையாகும்.
இதே போல அதிக ஓசை காதுக்கு ஆகாது. கெட்ட நாற்றம், இரசாயன பொருள்களின் நாற்றம் போன்றவற்றை மூக்கினால் ஏற்படும் வியாதிகளுக்குக் காரணமாகச் சொல்லலாம்.

எதையும் அதிகப்படியாக உண்பதை நாக்கின் மூலம் ஏற்படும் வியாதிக்கான காரணமாகச் சொல்ல்லாம்.
தவறான மசாஜ், குளிர்ந்த நீரில் திடீரெனக் குளிப்பது போன்றவை வியாதிகளுக்குக் காரணமாக அமையும்.
பேச்சு, மனம், உடல் ஆகிய இவை சரியான முறைப்படி உபயோகப்படுத்தபப்ட வேண்டும்.
அதிகமான பேச்சு ஆபத்து. தீய எண்ணம் கொண்ட மனம் தீமைக்கு வித்து. நல்ல ஆரோக்கியத்திற்கு வழி வகுக்காத பழக்க வழக்கங்களைக் கொண்ட உடல், வியாதிக்கான மூல காரணமாகும்.
ஆகவே பேச்சு, மனம், உடல் ஆகிய மூன்றையும் பத்திரமாகக் கட்டுப்பாடுடன் கண்காணிக்க வேண்டும்.
மழை காலமோ அல்லது கோடை காலமோ வழக்கத்திற்கு மாறாக நீண்டிருந்தால் அதுவும் கூட அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டதாகும். அதே போல குறைந்திருந்தால் குறைவாகப் பயன்படுத்தப்பட்டதாகும். மழை காலமோ இதர பருவமோ வழக்கத்திற்கு மாறாக இன்னொன்றைத் தந்தால் அது தவறான பயன்படுத்தலுக்கு அடையாளமாகும்.
வியாதிகள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
ஒன்று உடல் தோஷத்தால் வருவது.
அடுத்தது வலிப்பு, விஷம் முதலியவற்றை உட்கொள்வது, காற்று, தீ, விபத்து போன்றவற்றால் வருவது.
அடுத்தது மனதிற்கு ஒத்தது அல்லது மனதிற்கு ஒவ்வாதது ஆகியவற்றால் ஏற்படும் மனோவியாதி
மனோவியாதியால் அவஸ்தைப்படும் புத்திசாலியான ஒருவன் தனக்கு தீங்கு பயக்கும் விஷயம் என்ன என்பதை மீண்டும் மீண்டும் ஆலோசித்து தீங்கு பயப்பனவற்றை அகற்ற வேண்டும்.
மனோ வியாதிகளைக் குணமாக்கும் நல்லோர்களை ஒருவன் ஆதரிக்க வேண்டும்.
ஆன்மா, தேசம், காலம், வர்த்தமானம், குடும்பம், பலம், திறன் ஆகியவை பற்றிய அறிவை ஒவ்வொருவனும் பெற வேண்டும்.
இப்படி சரகர் அறிவுரை வழங்குகிறார்.
சரகர் சாமான்யனான ஒருவனை கருத்தில் கொண்டு அவனுக்கு அன்புடன் கூறிய அறிவுரையைக் கனிவான சொற்களால் வழங்குவது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.
சரக சம்ஹிதையின் பதினொன்றாம் சூத்திரத்தில் இடம் பெறுபவற்றையையே இங்கு இப்போது நாம் பார்க்கிறோம்.
இதன் தொடர்ச்சியை அடுத்துக் காண்போம்.