பாரதி போற்றி ஆயிரம் – 8 (Post No.4510)

Date: 18  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-32 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4510

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 8

  பாடல்கள் 43 முதல் 51

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

பாடல்கள் 43 முதல் 51

மகா கவி

பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!
ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான
ஒட்டைச்சாண் நினைப்புடையர் அல்லர். மற்றும்
வீரர்அவர்! மக்களிலே மேல்கீழ் என்று
விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்பார்!
சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற
செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்.

அகத்திலுறும் எண்ணங்கள், உலகின் இன்னல்
அறுப்பவைகள்; புதியவைகள்; அவற்றை யெல்லாம்
திகழ்பார்க்குப் பாரதியார் எடுத்துச் சொல்வார்
தெளிவாக, அழகாக, உண்மையாக!
முகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை
முனை முகத்தும் சலியாத வீரராகப்
புகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப்
புனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்.

பழையநடை, பழங்கவிதை, பழந் தமிழ்நூல்,
பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை;
பொழிந்திடுசெவ் வியஉள்ளம் கவிதை யுள்ளம்
பூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள்
அழுந்தியிருந் திட்டதமிழ் எழுந்த தென்றே
ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்.
அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை
அறிந்திலதே புவிஎன்றால் புவிமேற் குற்றம்!

கிராமியம்நன் னாகரிகம் பாடி வைத்தார்
கீர்த்தியுறத் தேசியம் சித்த ரித்தார்
சராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார்.
தங்குதடை யற்றஉள்ளம் சமத்வ உள்ளம்;
இராததென ஒன்றில்லாப் பெரிய உள்ளம்!
இன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்!
தராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த
தமிழ்ப் பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி!

ஞானரதம் போலொருநூல் எழுது தற்கு
நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்
போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?
புதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே
தேனினிப்பில் தருபவர்யார்? மற்றும் இந்நாள்
ஜெயபே ரிகைகொட் டடாஎன் றோதிக்
கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டிவைத்த கவிதைதிசை எட்டும் காணோம்!

“பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச்
சே”யென்ற பாரதியார் பெற்ற கீர்த்தி
போய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று
பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள்
வேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென் பார்கள்;
வீணாக உலககவி அன்றென் பார்கள்.
ஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவ னைப்போய்
உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள்.

“சாதிகளே இல்லையடி பாப்பா” என்றார்
“தாழ்ச்சிஉயர்ச் சிகள்சொல்லல் பாவம்” என்றார்.
சோதிக்கின் “சூத்திரர்க்கோர் நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி”
ஓதியதைப் பாரதியார் வெறுத்தார் நாட்டில்
ஒடுக்கப்பட் டார்நிலைக்கு வருந்தி நின்றார்.
பாதிக்கும் படி”பழமை பழமை என்பீர்
பழமைஇருந் திட்டநிலை அறியீர்” என்றார்.

தேசத்தார் நல்லுணர்வு பெரும் பொருட்டுச்
சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்.
காசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கி,அதைக் கனிவாய் உண்டார்.
பேசிவந்த வசைபொறுத்தார். நாட்டிற் பல்லோர்
பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற
மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால்
முரசறைந்தார்; இங்கிவற்றால் வறுமை ஏற்றார்.

வையத்து மாகவிஞர் மறைந்து போனார்;
வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்
செய்வதென்ன? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்;
சில நாட்கள் போகட்டும் எனஇ ருந்தார்.
உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்
உலககவி அல்லஅவர் எனத் தொடங்கி
ஐயர்கவி தைக்கிழுக்கும் கற்பிக் கின்றார்
அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ?

[ இது அந்நாளில் ஆனந்த விகடனில் “ரா.கி” (கல்கி)யால் பாரதி உலககவி அல்ல  என்றும், அவர் பாடலில் வெறுக்கத் தக்கன உள்ளன என்றும், எழுதியதற்கு மறுப்பாக எழுதப்பட்டது.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

 

*****

Leave a comment

Leave a comment