A scene from Bharati Drama
Date: MARCH 13, 2018
Time uploaded in London-15-01
COMPILED by S NAGARAJAN
Post No. 4810
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
பாடல்கள் 442 முதல் 454
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்
பாரதி பத்துப்பாட்டு
நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு இரண்டாம் அத்தியாயம் தொடர்கிறது
இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி
31 முதல் 43 வரை உள்ள பாடல்கள்
சொந்த மண்ணை விட்டு வந்து
சோர்ந்து வாழ்தல் வாழ்க்கையோ?
இந்தி யாவில் சிறையி லென்னை
இட்ட போதும் தாழ்ச்சியோ?
இந்த வாழ்வு தேவை யில்லை
என்று வந்து சிறையிலே
தந்த துன்பம் ஏற்று மீண்டாய்
சார்ந்த நட்பால் விரைவிலே
வறுமை யுன்னை கடையம் தன்னில்
வாட்டி வதைத்த நாளிலும்
சிறுமை செய்து சுற்ற மெல்லாம்
சீறி விழுந்த போதிலும்
உறுதி யோடு சென்னை வந்து
உற்ற இதழின் பணியேற்றே
இறுதி வரையில் எழுதி எழுதி
எனக்கெ னவுயிர் தந்தாயே
சுதந்திர ஆடை நெய்திட நூலை
சேர்த்திடும் அந்நாளே – அங்கு
அதையவர் அன்றே அணிந்திட் டாற்போல்
ஆடுவோ மேயென்றாய் – உலகில்
இதனிலும் தீர்க்க தரிசனம் என்பதை
எங்கும் பார்த்ததில்லை – பின்னர்
அதன்படி சுதந்திர பூமியில் மக்கள்
ஆடியே பாடினரே!
இறந்த காலச் சிறப்புகள் பாடி
இறும்பூ தெய்தினையே! – ஆனால்
பிறங்கும் நிகழ்கா லத்தின் நிலையை
பிழையற உரைத்தனையே – அன்றே
சிறந்த எதிர்கா லத்தின் மேன்மையை
சீருற மொழிந்தனையே – அதனால்
கறங்கும் திரிகா லமும்மொழி ஞானக்
கவியாய் திகழ்ந்தனையே!
புதிதாய் மலர்ந்த ருஷியப் புரட்சியின்
பெருமையை உணரவைத்தாய் – மேலும்
மதித்தற் குரிய பெல்ஜிய வாழ்த்து
மாஜினி சபதமுடன் – நாளும்
விதியது வோயென பீஜித் தீவினில்
வேதனைப் படும்பெண்கள் – கொண்ட
கதியையும் பாடி எல்லையில் உலகக்
கவியாய் உயர்ந்தனையே!
வந்தே மாதரம் என்பார் – அது
தந்திடும் பொருளுணராமலே மொழிவர்
வந்தே மாதரம் என்றால் – எங்கள்
மாநிலத் தாயை வணங்குத லென்றே
சிந்தை தெளிந்திட உரைத்தாய் – பொருள்
செம்மையாய் உணர்ந்திட வேமொழி பெயர்த்தாய்
இந்த நாளிலும் இன்னும் – அதை
இகழ்வாய் பேசிடும் ஈனருள ரன்றோ?
தாயின் மணிக்கொடி என்றே – நான்
தாங்கிடும் துவசத்தின் சிறப்பை வடித்தாய்
சேயிவர் உயிரினைத் தந்தும் – அதன்
செம்மையை உதிரத்தால் காப்பாரென் றுரைத்தாய்
ஆயினும் நிகழ்வது என்ன? – இன்று
அவரவர்க் கெனதனிக் கட்சிகள் கண்டே
ஏயின கொடிகள்கிழ் நின்றார் – அதில்
எனக்குள தேசியக் கொடியினை மறந்தார்
பொன்விழா கண்டஎன் நாட்டில் – இன்னும்
பஞ்சமும் பசியும் தீர்ந்திட வில்லை
அன்றுநீ உணவைப் பறிக்கும் – மனிதர்
அகன்றிடு வாரென அகமிக மகிழ்ந்தாய்
இன்றுமந் நிலையே அமைத்தார் – பலர்
ஏழைக ளாகிட சிலர்யாவும் பறித்தார்
என்றிவர் வறுமைகள் நீங்கும் – பாரதி
அன்றுதான் நீ சொன்ன பாரதம் ஓங்கும்
முப்பது கோடி மக்களுக் கோருயிர்
முன்னம் உரைத்தனையே – இன்று
செப்பரும் நூறு கோடி யாயிவர்
சிதைவுற்று நின்றனரே
அறுபது கோடி தடக்கை களாமென
அகம்மிக மகிழ்ந்திருந்தாய் – ஆனால்
இருநூறு கோடி கரங்க ளிருந்தும்
ஏதும்முன் னேற்றமில்லை
மேவினர்க கின்னருள் செய்பவள் தாயென
மேன்மை யுறவுரைத்தாய் – இங்கே
மேவிய பற்பல பேதங்க ளால்பகை
மூண்டுள தென்செய்வேன்?
அல்லவ ராயின் அவரை விழுங்குவள்
அன்னையென் றேவுரைத்தாய் – என்ன
சொல்லுவேன் இவர்கள் மாறுபட் டுத்தம்மைத்
தாமே விழுங்கினாரே
அடிமை விலங்கினை உடைத்திட அந்நாள்
அரியநற் கவிதைகள் தீட்டிவிட்டாய்
முடிவே இல்லாத மதஇன சாதியாம்
விலங்குகள் இந்நாளில் பூட்டிவிட்டார்
கடின முயற்சிகள் அதனிலும் தேவையாய்
கழற்ற முடியாமல் திணறுகின்றேன்
விடிவினைக் காணவே மீண்டும் நீவந்தால்
விடுதலை பெறுவேன் வாழியவே.
பாரதமாதா பார்வையில் பாரதி முற்றும்
தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி
2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.
இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069
நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.
****