
RESEARCH ARTICLE WRITTEN by London swaminathan
Date: 17 JULY 2018
Time uploaded in London – 14-56 (British Summer Time)
Post No. 5229
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
விட்ட குறை தொட்ட குறை- வள்ளுவன், மநு, கண்ணன் தரும் வியப்பான தகவல் ( POST No.5229)

இளம் வயது மேதைகள் பற்றி நிறைய கேள்விப்படுகிறோம்; படிக்கிறோம். நமது குடும்பங்களிலேயே சிலருக்கு இசையும் நடனமும் இயற்கையாகவே வருகிறது. சிலர் கணிதத்தில் புலிகளாக இருக்கின்றனர். சிலர் ஐந்து ஆறு வயதிலேயே கவி பாடுகின்றனர். இவற்றுக்கு எல்லாம் விஞ்ஞானத்தில் சரியான விளக்கம் காணப்படவில்லை. ஆனால் தமிழ் வேதமாகிய திருக்குறளில் தெய்வப் புலவன் இது பற்றித் திரும்பத் திரும்ப விளம்புகிறான். கண்ணனும் பகவத் கீதையில் மொழிகிறான். மநுவும் அவனது சட்டப் புத்தகமாகிய மனு ஸ்ம்ருதியில் நுவல்கிறான். கொஞ்சம் ஆழமாக உழுவோம்; அகலமாக உழுதல் பயன் தராது.
மநு சொல்கிறான்: ஒருவன் ரிக் யஜுர், சாம வேதத்தில் வல்லவனான ஒருவனுக்கு உணவு படைத்தால் அவனது ஏழு தலை முறை கடைத்தேறும் என்று.
அதாவது இந்துக்களின் நம்பிக்கை– ஒருவன் செய்யும் வினையானது ஏழு தலை முறைகளுக்குப் பயன்படும். அவனது ஏழு தலை முறைகளுக்கோ அவனது உறவினரின் ஏழு தலைமுறைக்கோ எப்படிப் பொருள் கொண்டாலும் சரியே.
கண்ணபிரான் பகவத் கீதையில் இன்னும் கொஞ்சம் விளக்குகிறான்:
நல்லது செய்பனுக்கு கெடுதி என்பதே வராது என்று சொல்லிவிட்டு அத்தகைய நல்லோர் யோகிகளின் வீட்டிலோ செல்வந்தர்களின் வீடுகளிலோ பிறப்பான் என்று சொல்லிவிட்டு:-
தத்ர புத்தி ஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்
யததே ச ததோ பூயஹ சம்சித்தௌ குரு நந்தன- 6-43
பொருள்
“அங்கு முன் உடலில் உண்டாகிய அந்த புத்தியின் கூட்டுறவை அடைகிறான். குரு நந்தன! மேலும் அதைவிட மேலான நிலையை எய்த முயல்கிறான்”– என்கிறார்
இதற்கடுத்த ஸ்லோகம் ஒன்றில் (6-45) பல பிறப்புகளில் படிப் படியாக முன்னேறி உயர்ந்த கதியை அடைகிறான் என்கிறார்.
அதாவது ஒருவன் கற்ற விஷயங்கள் மறுபிறப்பிலும் உதவி, மேலும் மேலும் ஒருவனை உயர்த்துகிறது.

நாம் கற்கும் கல்வி FIXED DEPOSIT பிக்ஸட் டெபாஸிட் அல்லது லாங் டேர்ம் டெபாஸிட் LONG TERM DEPOSIT போல பலன் தரும்.
இதைக் காளிதாசனும் ஆமோதிக்கிறான்.
ரகுவம்சம் என்னும் காவியத்தில் மன்னன் திலீபனின் அரசாங்கப் பணிகள் அனைத்தும் ரஹஸியமாகவே இருந்தன; பலன் கிடைத்த பின்னரே அரசனின் செயல் என்ன என்பதை அறியமுடிந்தது. அதாவது இந்த ஜன்மத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வெற்றியைக் கொண்டு அவனது முன் ஜன்ம புண்யத்தை அறிவது போல. ( ரகு 1-20) என்கிறார்.
சுதர்ஸனன் என்பவன் கல்வி கற்றது ஆசிரியர்களுக்குச் சிரமம் இல்லாமல் இருந்து. அவன் கற்பதெல்லாம் பூர்வ ஜன்மத்தில் கற்றதை நினைவு படுத்திக்கொண்டது போல எளிமையாக இருந்தது (18-50)
இங்கும் பூர்வ ஜன்மக் கல்வி அடுத்த ஜன்மத்தில் பயன்பட்டதைக் காளிதாஸன் பாடுகிறான்.
இவர்கள் எல்லோரையும் விட வள்ளுவன்தான் தெளிவாகச் சொல்கிறான்:-
அவன் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆறு குறள்களில் செப்புகிறான்:
62, 107, 126, 398, 538, 835

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின் -62
பொருள்
நல்ல புதல்வர்களை பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீயவை தீண்டாது. இது மநு சொன்னதைப் போல இருக்கிறது
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு- 107
தமக்கு நேர்ந்த துன்பத்தை விலக்கியவரின் நட்பைப் பெரியோர்கள் ஏழு பிறவிகளிலும் நினைத்துப் பார்ப்பர்.
இதற்கு ஒரு பழைய உரை– தேவர், அசுரர், மனிதர், மிருகம், பக்ஷி, ஊர்வன, நீர் வாழ்வன என்றும் விளக்கம் தரும்; அப்படிப் பார்ப்பதும் இந்து தர்மமே.
ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து – 126
பொருள்
ஒரு பிறவியில் ஆமை போல புலன்களை அடக்கக் கற்றுக் கொண்டால் ஏழு பிறவிக்கும் பாதுகாவலாக அமையும்; இது கிருஷ்ணன் பகவத் கீதையில் சொன்னதை அப்படியே சொல்லுவது போல உள்ளது.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து – 398
இதில் வள்ளுவன் மிக தெளிவாகச் சொல்லுகிறான்; ஒரு பிறப்பில் கற்ற விஷயங்கள் ஏழு பிறப்பிலும் தொடந்து வந்து உதவும்.
கற்ற கல்வியானது எந்தப் பிறப்பிலும் மறையாது.
எழு பிறப்பு என்பதை பல, எண்ணற்ற பிறப்புகள் என்றும் பெரியோர்கள் வியாக்கியானம் செய்வர்.
புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்- 538
அறிவுடையோர் சொன்ன விஷயங்களை நினைவிற் கொண்டு செயல்பட வேண்டும். அப்படிச் செய்யாதோருக்கு ஏழு பிறப்பிலும் நன்மை உண்டாவது இல்லை.
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான் புக்கழுந்தும் அளறு- 835
பொருள்
பேதை என்பவன் யார்? ஏழு பிறவியில் அடையக்கூடிய , அனுபவிக்கக்கூடிய நரக துன்பத்தை ஒரே பிறவியில் செய்யக்கூடியவன் ஆவான்
காளிதாசனும் வள்ளுவனும் கண்ண பிரானும் மநுவும் சொன்னது என்ன?
நீங்கள் படித்த எந்த விஷயமும் வீண் போவது இல்லை; ஒவ்வொரு பிறவியிலும் வந்து உங்களுக்கு உதவும்; அங்கிருந்து மேற்கொண்டு கற்று அடுத்த படிக்கு முன்னேற உதவும்.

இனியும் தேவார திவ்வியப் பிரபந்தத்தையோ
வேத வேதாந்தங்களையோ (வேதாந்தம்= உபநிஷத்) படிப்பதை தாமதிக்கலாமா?
அடுத்த ஜன்மத்தில் நீங்களும் இளம் வயது மேதை ஆவீர்கள்!
TAGS-ஏழு பிறப்பு, விட்ட குறை தொட்ட குறை, இளம் வயது மேதை
–சுபம்–