பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த 100 கேள்விகள்! – 4 (Post No.5712)

Written by S Nagarajan

Date: 29 November 2018

GMT Time uploaded in London –11- 08 am
Post No. 5712

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 4

பாண்டியன் வியந்து போனான்.ஒவ்வொரு நாளும் பெருகி வரும் கூட்டத்தில் அருகிலிருந்த சோழ நாடு, சேர நாடு ஆகிய நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் வருவதைக் கண்டான்.

அவர்கள் தங்குமிடத்திற்கென ஏராளமான கூடாரங்களை அமைத்ததோடு உணவுக்கென ஏராளமான சமையல்கூடங்களையும் திறக்கச் செய்தான்.

அவை கூடியதும் வள்ளுவரிடம் கேள்வி கேட்க ஒரு கூட்டமே எழுந்தது.

இதை முறைப்படுத்த வேண்டி அமைச்சர் ஒவ்வொருவரையும் வரிசையாகத் தங்கள் கேள்விகளை கேட்கச் சொன்னார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது ஊரில் தனக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்லி விட்ட ஒருவரை எண்ணி நொந்து கொண்டார் அவருக்கு என்ன தண்டனை என்று கேட்டார்:

வள்ளுவர் கூறினார்:

தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன் நெஞ்சே தன்னைச் சுடும்

தன் மனச்சாட்சியை மீறிப் பொய் சொன்னவனுக்கு அவன் நெஞ்சமே தகுந்த தண்டனையைத் தந்து விடும். ஒவ்வொரு நாளும் அவன் தகிப்பான் என்று புலவர்கள் விரிவாக விளக்கியபின் கேள்வி கேட்டவர் அமைதியானார்.

தனது வீட்டில் கோபத்துடன் இருக்கும் கணவனையும் பெரியவரையும் சுட்டிக் காட்டிய பெண்மணி இதனால் தான் பெரிதும் மன வருத்தம் அடைவதாகவும் அவர்களுக்கு ஒரு வாழ்வியல் ரகசியத்தை அருள வேண்டுமென்றும் வேண்டினாள்.

 

வள்ளுவர் கூறினார்:

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.

அடடா என்று கூவிய புலவர்கள் அதை விரித்து உரைத்தனர். சேர்ந்தவரைச் சேர்ந்தவுடன் விஷம் கூடக் கொல்லாது. ஆனால் சினம் சேர்ந்தவுடன் ஒருவரின் வாழ்க்கை நிம்மதியைக் கொன்று விடும். அவனது மகிழ்ச்சி, செல்வம் எல்லாம் போய்விடும். அது மட்டுமன்றி அவனுக்கு கஷ்ட காலத்தில் உதவும் தெப்பமாக இருக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்ஆகியோரையும் அது சுட்டு அழித்து விடும்.

அந்தப் பெண்மணியின் கணவரும் தந்தையும் எழுந்தனர். இனி ஒருக்காலும் தெப்பத்தைச் சுட விடமாட்டோம்; சேர்ந்தவரைக் கொல்லும் சினத்தை விட்டு விட்டோம் என்று உரக்கக் கூவவே மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

நெருங்கிய நண்பன் தன்னை ஒரு கஷ்டமான சூழ்நிலையில் கைவிட்டு விட்டதைச் சொல்லி ஒருவர் மனமுருக, அவரைப் பார்த்து வள்ளுவர் கூறினார்:

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்

நட்பு என்பது நிலைத்திருப்பது. அது நல்ல காலத்தில் மட்டுமல்ல; ஒருவனின் கஷ்ட காலத்திலும் மறையக் கூடாதது. அப்படி ஒருவர் இருந்தால் அது நட்பே அல்ல; அதை நினைத்தாலே நெருப்பே வேண்டாம்; உள்ளமே சுடும்; பார்த்துப் பழகுங்கள் என்று வள்ளுவர் அறிவிப்பதை அனைவரும் உணர்ந்தனர்.

கிராமப் புறத்திலிருந்து வந்தவர் தன் ஊரில் நல்ல கொள்கைகளை விடும், ஊர் செல்வந்தரைப் பற்றிக் கூறினார்; அதே ஊரைச் சேர்ந்த இன்னொருவர் அஞ்சி வெட்கப்பட வேண்டிய காரியங்களைக் கூட அவர் செய்வதாகக் கூறினார்.

அடடா என கூட்டத்தினர் வருத்தப்பட்ட போது வள்ளுவர் கூறினார்:

குலஞ் சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை

ஐயோ! கொள்கை தவறினால் அது குலத்தையே அல்லவா கெடுக்கும்; நாண வேண்டிய பழி காரியங்களைச் செய்தால் அனைத்து நன்மைகளையும் அல்லவா அழித்து விடும் என்று கூட்டத்தினர் பேச கேள்வி கேட்டோர் வள்ளுவர் கூற்றை எழுதிக் கொண்டனர். கிராமத்தில் அதை எழுத வேண்டுமென்று தீர்மானித்தனர்.

மகளிர் பக்கத்திலிருந்து ஒரு இளம் அழகி எழுந்தாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என மஹாராணி வியந்தவாறே அவளைப் பார்த்தாள்.

“ஐயனே, கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளம்  சுடும் என்று சொன்னீர்களே! என் உள்ளம் சுடுகிறதே,இது எதனால்? என்று நொந்தவாறே கேட்டாள்.

வள்ளுவர் புன்முறுவல் பூத்தார்; கூறினார்:

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்

பெரும்புலமை வாய்ந்த மஹாராணியார் அந்த இளம் அழகியைத் தன்னிடம் வரச் சொன்னார். அவளது கணவன் கடல் கடந்து பொருள் சம்பாதிக்கச் சென்றதை அறிந்து கொண்டாள். அவரை மறக்கவும் முடியவில்லை; மறக்காமல் நினைத்தாலும் பிரிவை நினைத்தே உள்ளம் சுடுகிறதே என்ற அவளது நிலையை எண்ணி, அவளிடம் ‘வருத்தப்படாதே; உன் கணவனை உடனே இங்கு திரும்பச் செய்கிறோம்.

அரண்மனையிலோ அல்லது படையிலோ தக்க வேலை ஒன்றைத் தகுதிக்கேற்பத் தரச் சொல்கிறேன்’ என்று கூறவே பெண்கள் அனைவரும் ராணியார் வாழ்க என்று கூவினர்.

பிரிவுத் துன்பம் தெரிந்த மகத்தான ராணி அல்லவா அவர் என்று மகளிர் பெருமிதத்துடன் பேச புலவர் ஒருவர் எழுந்தார்.

“இன்று ஒரு அதிசயம் பார்த்தீர்களா!

 

சுடும் என்ற சொற்களை வள்ளுவப் பிரான் எப்படிப் பயன் படுத்தி இரகசியங்களை விளக்கி இருக்கிறார் என்பதை ஓர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன் நெஞ்சே தன்னைச் சுடும்

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்

குலஞ் சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்

 வள்ளுவர் வாழ்வியல் இரகசியங்களைத் தேர்ந்த சொற்களால் விளக்கும் அருமையே அருமை” என்று மகிழ்ந்து கூறினார்

வள்ளுவரின் தெள்ளுதமிழ் அமுதத்தைப் பருகிய மக்கள் கூட்டம் கலைந்தது. மறு நாள் மலர்ந்தது.

   தொடரும்

***

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் குறட்பாக்களின் எண்கள் 293,306,799,1019,1207

TAGS– 100 கேள்விகள்! – 4 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: