
Written by S Nagarajan
Date: 27 DECEMBER 2018
GMT Time uploaded in London – 5-40 am
Post No. 5840
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியிடப்பட்டுள்ள 405வது அத்தியாயம் (எட்டாவது ஆண்டு 41வது கட்டுரை)
அமேஸிங் க்ரெஸ்கின்!
ச.நாகராஜன்
மனமறியும் வித்தை எனப்படும் மெண்டலிஸம் (Mentalism) இன்று விஞ்ஞானிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. எண்ணத் தூண்டுதலால் எதையும் சாதிக்கலாம் என்ற ஒரு கருத்து என் எல் பி எனப்படும் நியூரோ லிங்க்விஸ்டிக் ப்ரொக்ராம் என்ற உத்தியினால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் பிறர் மனதைத் தூண்டி அவரை தனது வசத்திற்கு உள்ளாக்குவது சாத்தியம் தானா? விஞ்ஞானிகள் பலர் இந்த்த் துறையில் தீவிர ஆர்வம் காட்டி வரும் இந்த நாளில், இது சாத்தியம் தான் என்று இதைச் செய்து காட்டி அசத்துபவர் க்ரெஸ்கின்.
தி அமேஸிங் க்ரெஸ்கின் என்ற பெயரால் இன்று உலகெங்கும் பிரபலமாக அறியப்படும் இந்த மாயாஜால நிபுணரின் இயற் பெயர் ஜார்ஜ் ஜோஸப் க்ரெஸ்ஜி. (George Joseph Kresge; பிறப்பு 21-1-1935; வயது 84). அமெரிக்கரன இவர் லீ ஃபாக்கின் மாண்ட் ரக், தி மாஜிஷியன் என்ற காமிக் புத்தகத்தால் பெரிதும் கவரப்பட்டு மாஜிக் கலையைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் அமெரிக்க தொலைக்காட்சி சேனலில் அமேஸிங் க்ரெஸ்கின் என்ற தொடரால் பிரபலமானார். ஐந்து வருடங்கள் இந்தத் தொடர் சக்கை போடு போட்டது.இதை அனைவரும் விரும்பவே மீண்டும் தி நியூ க்ரெஸ்கின் ஷோ என்று புதிய தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
புகழ் பெற்ற இவரது மாஜிக் வித்தைகளில் அனைவரையும் மிகவும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் தலையாய வித்தை, நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தினுள் இவருக்குத் தரப்பட வேண்டிய ஒளித்து வ்வைக்கப்பட்டிருக்கும் செக்கைக் கண்டுபிடிப்பது தான்.
இவர் அரங்கத்தின் வெளியே சென்ற பின் அங்குள்ளோர் ஏதாவது ஒரு இடத்தில் செக்கை ஒளித்து வைத்து விடுவார்கள். வரலாம் என்று சொன்னவுடன் அரங்கத்தில் நுழைந்து நேராக செக் இருக்கும் இடத்திற்குச் சென்று அதை எடுத்துக் கொள்வார். கரகோஷம் வானைப் பிளக்கும்.
செக் கண்டுபிடிக்கப்படவில்லை எனில் தனக்கு அன்றைய ஷோவுக்காகத் தரப்படவேண்டிய தொகையை வாங்க மாட்டேன் என்பது இவரது உறுதி மொழி.
சுமார் 6000 ஷோக்களில் 11 முறை மட்டுமே இவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்!
சமீபத்தில் 2018, ஏப்ரல் 14ஆம் தேதி நியூயார்க் லயன் தியேட்டரில் இவரது இரண்டு மணி நேர நிகழ்ச்ச்சி நடந்தது. ஆடியன்ஸில் அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினரிடம் வழக்கம் போல் இவர் ஒப்பந்தத்தை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அந்த ஒப்பந்தப் பெப்பரைக் கண்டுபிடிக்கவில்லை எனில் பணம் வாங்க மாட்டேன் என்ற அவரது உறுதி மொழி அந்தப் பேப்பரில் எழுதப்பட்டிருந்தது.
வெளியில் சென்றவர், அழைக்கப்பட்டவுடன் அரங்கத்தினுள் நுழைந்தார். ஆனால் உடனே ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் எப்போதும் செல்வது போல இந்த முறை அவரால் செல்ல முடியவில்லை. அவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குத் திருப்பித் திருப்பிச் சென்று கொண்டிருந்தார். ஆனால் அங்கு அந்த பேப்பர் இல்லை. உடனே தன் தோல்வியை ஒப்புக் கொண்ட அவர் அன்று டிக்கட் மூலம் வசூலான அனைத்துப் பணமும் விலங்குகளின் நலனுக்காக அவைகள் பராமரிக்கப்படும் ஒதுங்கிடங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டாலும் அவரது ரசிகர்கள் அந்தத் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், முதலில் குழுவினர் ஒரு இடத்தில் அந்தப் பேப்பரை ஒளித்து வைத்தனர். அவரை வருமாறு கூறிவிட்டு அவர் வருவற்குள் இன்னொரு இடத்திற்கு அதை மாற்றி ஒளித்து வைத்தனர்.க்ரெஸ்கினோ முதலில் ஒளித்து வைக்கப்பட்ட இடத்திற்கே திரும்பித் திரும்பி வந்து கொண்டிருந்தார். இது குழுவின் ஏமாற்று வேலை என அவரது ரசிகர்கள் கோபத்துடன் கூறினர்.
மாயாஜால நிபுணரான க்ரெஸ்கின் மாஜிக்கை ஒரு பொழுது போக்குக் கலையாகவே கருதுகிறார். பிறர் மனதை அறியும் சக்தி எதையும் கொண்டிருப்பதாக அவர் கூறியதே இல்லை.
ஆனால் எதிர்காலம் பற்றிய கணிப்புகளை அவர் வெளியிடுவது வழக்கம்.
2002ஆம் ஆண்டில் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி லாஸ் வேகாஸில் மாலை 6 மணியிலிருந்து 9.45க்குள் வானில் ஒரு பறக்கும் தட்டு தென்படும் என்றும் அதி ஆயிரக்கணக்கானோர் பார்ப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் இருந்தது. அப்படி ஒருவேளை யாரும் அதைப் பார்க்கவில்லையெனில் 50000 டாலர் நன்கொடையாக அளிப்பதாகக் கூறினார். ஆனால் அப்படி ஒரு வானியல் நிகழ்வு நிகழவில்லை. க்ரெஸ்கினை இது பற்றிக் கேட்ட போது பல பச்சை வண்ணப் பொருளை வானில் பார்த்ததாகக் கூறி இருப்பதால் 50000 டாலரை நன்கொடையாகத் தர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விட்டார். ஹிப்நாடிஸத்தில் நிபுணரான அவர் 200 பேரை மனோவசியம் செய்து பறக்கும் தட்டைப் பார்க்க வைக்க முடியும் என்றார்.
ஹிட்லர் கூட மனோவசியத்தினாலேயே கூட்டத்தினரை ‘கட்டி’ வைத்தார் என்பது அவரது எண்ணம்.
.அவரிடம் மானேஜராக வேலை பார்த்த சீன் மக்ஜின்லி 2008ஆம் ஆண்டு அவருடனான தனது அனுபவங்களை வைத்து ‘தி க்ரேட் பக் ஹோவர்ட்’ (The Great Buck Howard ) என்ற படத்தை எடுத்தார்.
உலகம் கண்ட மனோவசிய நிபுணர்களில் க்ரெஸ்கின் தனிப்பெருமை கொண்டவர். முப்பது வருட வாழ்க்கையில் பதினோரு தரம் மட்டுமே செக்கைக் காணாமல் தோல்வியை ஒப்புக் கொண்ட அவரது நிகழ்ச்சிகள் இன்னும் தொடர்கின்றன.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ரால்ப் வில்லியம் ப்ரான் (Ralph William Braun பிறப்பு :18-12-1940 மறைவு: 8-2-2013) அமெரிக்காவில் இண்டியானாவில் பிறந்தவர். அவருக்கு ஏழு வயதாகும் போது அவரால் நடக்க முடியவில்லை. முதுகுத்தண்டு வடத்தில் ஏற்பட்ட கோளாறு அவரை ஊனமுற்றவராக ஆக்கியது. ஆனால் மனம் தளராதா ப்ரான் சக்கர நாற்காலியில் செல்ல ஆரம்பித்தார். இண்டியானா பல்கலைக் கழக வளாகம் மிக அகன்ற ஒன்றாக இருக்கவே அவரால் அதில் சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்ல முடியவில்லை. அதிலிருந்து விலகி சுலபமாக ஓடும் நாற்காலி ஒன்றைச் செய்தால் என்ன என்று யோசித்தார். விளைவு, கடுமையான உழைப்பின் மூலமாக எலக்ட்ரிக் வீல் சேர் ஒன்றை வடிவமைத்தார்.
அத்துடன் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர் ஒன்றையும் வடிவமைத்தார். இதைப் பார்த்து வியந்த பலர் ஊனமுற்ற தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் அதே போலச் செய்து தருமாறு வேண்டினர். உற்சாகத்துடன் ஒரு தொழிலகத்தைத் தொடங்கிய அவர் எலக்ட்ரிக் வீல் சேர்களைத் தயார் செய்து விற்க ஆரம்பித்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தொழிற்சாலையில் ஒரு தீ விபத்து ஏற்பட அது கருகிச் சாம்பலானது. ஆனால் அங்கு வேலை பார்த்த பணியாளர்கள் ஒன்றாக இணைந்து ப்ரானுக்கு உதவி தொழிற்சாலையை மீண்டும் துவங்க உதவினர். 700 தொழிலாளர்கள் பணியாற்றும் மூன்று தொழிற்சாலைகளை அவர் உருவாக்கினார். ஒவ்வொரு மாகாணமாகச் சென்று தன் தயாரிப்புகளுக்கு விற்பனை பிரதிநிதிகளை நியமித்து தனது நிறுவனத்தைப் பெரியதொரு நிறுவனமாக ஆக்கினார் அவர். இன்று 20 கோடி டாலர் நிறுவனமாக அது திகழ்கிறது. அவரது ஊக்கமூட்டும் இந்த மேற்கோளை உலகம் பாராட்டிக் கொண்டாடுகிறது :
மேலே உயருங்கள், எனது நண்பர்களே! பின்னர் மற்றவர்களை வாழ்க்கை ஏணியில் ஏற உதவுங்கள்!
(Rise above, my friends, and reach back to help others climb the ladder of life!)
***