பெர்த் கண்ட்ரோலும் டெத் கண்ட்ரோலும்! ரமணரின் அறிவுரை! (Post No.7279)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 30  NOVEMBER 2019

Time  in London – 7-41 am

Post No. 7279

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

வெளிநாட்டிலிருந்து ஒரு பத்திரிகையாளர் பகவான் ரமண மஹரிஷியைத் தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்தார்.

அவரிடம் அவர், “பகவான்! நாங்கள் பெர்த் கண்ட்ரோலுக்காக (குடும்பக் கட்டுப்பாட்டிற்காக) ஒரு இயக்கம் ஆரம்பிக்கப் போகிறோம். பெர்த் கண்ட்ரோல் (Birth Control) பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? அதை எங்கள் பத்திரிகையில் வெளியிடுவோம்” என்றார்.

ரமணர் மௌனமாக இருந்தார்.

வந்த பத்திரிகையாளர் திருப்பித் திருப்பித் தான் கேட்ட கேள்வியையே கேட்டுக் கொண்டிருந்தார்.

உடனே பகவான், “அன்பரே! நீங்களும் நானும் ஏற்கனவே பிறந்து விட்டோம். அதை இந்த நிலையில் கட்டுப்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் நீங்களும் நானும் நிச்சயமாக ஒரு நாள் இறக்கப் போகிறோம். ஆகவே அது பற்றி நீங்கள் இன்னும் அதிகக் கவலைப்பட வேண்டாமா? தயவுசெய்து டெத் கண்ட்ரோல் (Death Control) பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்!”

வந்த பத்திரிகையாளர் நகர்ந்தார்.

என்ன ஒரு அற்புதமான உபதேச உரையை ரமண மஹரிஷி அருளினார் பாருங்கள்!

(இமய மலையில் வசிஷ்ட குகையில் வசித்து வந்த சாந்தானந்தா பூரி கூறிய சம்பவம் இது)

***

மேலை நாட்டு எழுத்தாளரான பால் பிரண்டன் கூறியுள்ள சம்பவம் இது:

“பக்தர்களும் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தோரும் ஹாலில் குழுமி இருந்த போது யாரோ ஒருவர் ஹாலுக்குள் நுழைந்து அந்த டவுனில் எல்லோரும் அறிந்த ஒரு பிரபலமான கிரிமினல் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிவித்தார். உடனே அவரைப் பற்றி அனைவரும் பேச ஆரம்பித்தனர். அவரது இயல்பு, அவர் செய்த குற்றங்கள், அவரது குணாதிசயத்தில் மிக மோசமான அம்சங்கள் என்பது போன்றவற்றைப் பற்றிப் பலரும் கூற ஆரம்பித்தனர்.

இந்தப் பேச்செல்லாம் முடிந்த பிறகு மஹரிஷி தனது முதல் தடவையாகத் தன் வாயைத் திறந்தார். அவர் கூறினார் :” அது சரி, அவர் எப்போதும் தன்னை சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தார். ஏனென்றால் அவர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பது வழக்கம்.”

***

வேளச்சேரி ரங்க ஐயர் என்பவர் பகவான் ரமணரின் பள்ளிப்படிப்புக் காலத்தில் வகுப்புத் தோழராக இருந்தவர். அவர் தனது ஒரு அனுபவத்தை இப்படி விளக்கியுள்ளார்.

“ஒரு முறை நான் ஸ்காந்தஸ்ரமத்தில் பகவானை விட்டு சிறிது நேரம் வெளியில் சென்றேன். அவர் அப்போது உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். நான் திருப்பி வந்த போது அவர் வெளியில் ஒரு படுக்கையில் அமர்ந்திருந்தார். அதைப் பற்றி ஒன்றும் நினைக்கவில்லை நான்.

ஆனால் ஆசிரமத்தின் உள்ளே சென்ற போது அவரை எப்படிப் பார்த்தவாறு வெளியில் சென்றேனோ அதே போல அவர் உள்ளேயே இருந்தார். இதைப் பற்றி பகவானிடம் நான் சொன்ன போது அவர் சிரித்தவாறே கூறினார் :” அதை அப்போதே ஏன் சொல்லவில்லை? அந்தத் திருடனை அப்போதே நான் பிடித்திருப்பேனே!”

“அசாதாரணமான நிகழ்வுகளுக்கெல்லாம் பகவானின் பதில் இப்படித்தான் இருக்கும்! இப்படிப்பட்ட நிகழ்வுகளை அவரிடம் சொன்னால் அவர் அதை ஒதுக்கி விடுவார் அல்லது அதை ஜோக்காக எடுத்துக் கொண்டு விடுவார்.  அற்புத நிகழ்வுகளில் தனது பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டு தங்கள் முக்கிய லக்ஷியமான ஆத்மனை அறிவது என்பதை விட்டுவிடக் கூடாதே என்பதால் தான் அவர் இப்படிச் செய்தார்.”

***

பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கையில் இது போன்ற அற்புத நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. அதைப் படிப்பது ஒரு தெய்வீக அனுபவமாக இருக்கும்!

SUBHAM

Leave a comment

2 Comments

  1. R Nanjappa's avatar

    R Nanjappa

     /  November 30, 2019

    குடும்பக்கட்டுப்பாடு மட்டும் அல்ல, சமூக சீர்திருத்தம், ஆசிரமத்தில் சமபந்தி
    சாப்பாடு என்றிப்படி இன்னும் பல விஷயங்களைப் பற்றி பகவானிடம் கேட்பர். தேசிய
    வாதிகளும் சீர்திருத்தக் காரர்களும் பல விஷயங்களில் அவர் கருத்தைக் கேட்பர்.
    பகவான் பதில்சொல்ல மாட்டார். ‘நான் ஏதாவது சொன்னால், இந்த சாமியார் இப்படிச்
    சொல்கிறார் என்று விளம்பரப்படுத்துவார்கள். வந்த ஜோலியைப் பார்த்துகொண்டு
    போவதுதானே’ என்பார். தங்கள் கருத்துக்களைப் பரப்ப , பகவானையோ ஆசிரமத்தையோ
    முகாந்தரமாகப் பயன்படுத்தக் கூடாது என்பது கருத்து.
    பகவான் பழகியவர்களிடம் மிகவும் சகஜமாக நடந்துகொள்வார். பள்ளித் தோழர் இந்த
    வேளச்சேரி ரங்க ஐயர் மிகவும் கொடுத்துவைத்தவர். ஒருமுறை ஜாதகப்படி ஏதோ போதாத
    கலம் என்று அறிந்து ஆசிரமத்திற்கு வந்துவிட்டார். பகவான் அவரை ஒரு வருடம்
    ஆசிரமக் காம்பவுண்டை விட்டு வெளியில் போக அனுமதிக்காமல் கவனித்துக்கொண்டார்.
    அவசியமாக எங்காவது போகவேண்டுமென்றால், அவருடன் வேறொருவரை அனுப்பி, அவர் எங்கு
    போகவேண்டுமோ அங்கு மட்டும் நேரே போகச்சொல்லி , பின் நேராக ஆசிரமத்திற்கே
    திரும்பிவரும்படிச் செய்வார்!.
    இத்தகைய கருணைத் திறத்தை முருகனார் பலவாறு பாடிப் பரவியிருக்கிறார்:

    *மலத்தடை நீக்கியிம் மண்ணகத்தோரை*
    *வலியவந் தாட்கொளு மாவருட் கடலே….*
    *திட்டமா நந்தம்மைத் தீப்பிறவி சேராமே*
    *சட்டமா யாட்கொண்ட தண்ணளியின் சீர்…..*
    *ஆதார வேங்கடனே அஞ்சலென்றா னா**தலால்*
    *வாதாடலற் றவ்வரதற்கே யன்பாகிப்*
    *பாதார விந்தந் தலையாற் பணிவோமாய்த்*
    *தூய்தாய தொண்டுபட்டுத் தோழமைக்கே பாங்காகிக்*
    *கோதாய் நீராடிக் குளிரேலோ ரெம்பாவாய்.*

  2. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  November 30, 2019

    super. Not only in those days he protected the devotees. Even now whoever thinks him will be protected. There are many instances, even after his “physical Death” HE EVER LIVES!
    THANKS FOR YOUR BEAUTIFUL COMMENTS, MR NANJAPPA. MAY BHAGAVAN RAMANA BLESS US ALL! S.NAGARAJAN

Leave a comment