
Post No.7786
Date uploaded in London – 5 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் 450 தமிழ்ப் புலவர்கள் ஏறத்தாழ 2500 கவிதைகள் இயற்றினர். இதில் 4 வரிப் பாட்டிலிருந்து 782 அடிகள் உள்ள மதுரைக்காஞ்சி வரை 18 நூல்கள் உள . இவற்றில் மதுரைக் காஞ்சி என்ற நூல் மதுரையின் சிறப்பைக் கூறுகிறது. ஆயினும் ஒரு வியப்பான செய்தி மதுரை என்ற சொல் 782 அடிகளில் வரவில்லை. அதைப் பாடிய மாங்குடி மருதனுக்கு ‘மதுரை பாக்காதவன் கழுதை’ என்ற மலையாளப் பழமொழி நினைவுக்கு வந்திருக்கும். அட, ஊரறிந்த பார்ப்பானுக்குப் பூணுல் எதற்கு என்ற பாணியில் பாட்டின் தலைப்பில் மட்டும் மதுரையை வைத்துவிட்டு உள்ளே கூடல் முதலிய பெயர்களை பயன்படுத்துகிறார். அதில் மதுரை நகரில் அந்தணர் பள்ளி பற்றியும் பாடுகிறார். பிராமணர்களின் வீடுகள் மலைக்குடைவரை போன்ற அமைப்பில் வீடுகளில் வசித்ததாகவும் பாடுகிறார். அவர்கள் ‘தத் த்வம் அசி (நீயே அது ) , அஹம் பிரஹ்மாஸி (நானே பிரம்மம் /இறைவன் ) என்ற கருத்தை உணர்ந்தவர் அந்தணர் என்றும் போற்றுகிறார். இதற்கு அடுத்தபடியாக மதுரையில் அக்காலத்தில் இருந்த சமணர், பவுத்தர் பற்றியும் குறிப்பிடுகிறார்.
இக்கருத்தை ‘ஏகமேவ அத்விதீயம்’ என்ற பிரம்ம சூத்திர சொற்களாலும் விளக்குவார்கள். அதாவது ‘ஒன்றேயன்றி இரண்டல்ல’ என்னும் அத்வைத தத்துவம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

நச்சினார்க்கினியர் மதுரைக் காஞ்சி அந்தணர் பள்ளிக்கு எழுதிய உரைதனில் ‘ஒருதாம்’ என்ற சொல்லை விளக்குகிறார்.
மதுரைக் காஞ்சி என்னும் சங்க கால நூல் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும் நூல். எழுதியவர் மாங்குடி மருதனார்
உ.வே.சாமிநாதையர் வெளியிட்ட ‘பத்துப் பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்’ என்ற நூலும், ‘வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள்’ என்ற தலைப்பில் கே.சி. லட்சுமிநாராயணன் எழுதிய மிகப் பெரிய நூலும் ‘ஒருதாம்’ பற்றிய விளக்கத்தைத் தருகின்றன .
முதலில் மதுரைக் காஞ்சி நூலில் வரும் அந்தணர் பள்ளி வரிகள் – 468-474
“சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி
உயர் நிலை உலகம் இவண் நின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்”
பொருள்
மதுரை மாநகரில் அந்தணர்கள் வாழ்ந்த இடம் குறித்து இந்த அடிகள் தெரிவிக்கின்றன. அந்தணர்கள் வேதங்களை பொருள் விளங்க கற்று அறிந்தவர்கள். அவர்கள் அந்த வேதங்கள் கூறுகின்ற ஒழுக்கங்களின்படி வாழ்பவர்கள் . அவர்கள் தாங்களே இறைவர்கள்களாக ஆனவர்கள். அவர்கள் மிக உயர்ந்த மோட்சத்தை இந்த உலகத்தில் இருந்தபடியே அடைபவர்கள். அவர்கள் கர்ம நெறியிலிருந்து ஒரு போதும் விலகாதவர்கள். அவர்கள் உயிர்களிடத்தில் அருள் நிரம்பியவர்களாக இருப்பவர்கள் .
ஒரு தாம் ஆகி – என்ற சொற்றொடர் மிக ஆழமான பொருளைக் கொண்டது அவனே தானே ஆகிய நிலை. ஒன்றான பிரமம் தாங்களே ஆய் — என்பது பொருள். tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘தத் த்வம் அசி’ – ‘அது நீ ஆகிறாய்’ – என்ற வேத மஹா வாக்கியம் இது. இதை ‘அஹம் பிரஹ்மாஸ்மி’ – ‘நான் பிரம்மம் ஆக இருக்கிறேன்’ என்றும் சொல்லுவார்கள்.
நச்சினார்க்கினியர் வேறு சில சுவையான செய்திகளையும் சேர்க்கிறார்.
“வேதங்கள் மூன்றே என்பதும் அதர்வ வேதம் மந்திர சாகை என்பதும் இங்கே அறியற்பாலன .
இருக்கும் யசுரும் சாமமும் – இவை தலையாய ஒத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தாற் காரியப்படுத்தலின் இலக்கியமுமாயின.அதர்வமும் ஆறங்கமும் தரும நூலும் இடையாய ஒத்து . அதர்வம் ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடு சூழும் மந்திரங்களும் பயிறலின் அவற்றோடு கூறப்படாதாயிற்று” — என்று தொல்காப்பிய புறத்திணை சூத்திரம் 20 க்கு நச்சி. எழுதிய உரையை உ.வே.சா . எடுத்துக்காட்டியுள்ளார்.
அந்தணர் என்போர் வேதாந்தத்தை எப்போதும் பார்ப்பார்.
இதனால் அந்தணர், பார்ப்பார் என்று அழைக்கப்படுவர்.
வேத+அந்தம்= வேதாந்தம் என்பது வேதத்தின் முடிவு/ துணிபு. அதாவது உபநிஷதம் கூறும் உண்மை. tamilandvedas.com, swamiindology.blogspot.com
நீயே கடவுள் – என்னும் உயர் நிலை.
இதை அஹம் பிரம்மாஸ்மி , தத் த்வம் அசி என்பர்; இவை மகா வாக்கியங்கள் நான்கினில் இரண்டு.
மற்ற இரு வாக்கியங்கள்
பிரக்ஞானம் பிரம்ம
அயமாத்மா பிரம்ம
அந்தணர் என்போர் மூன்று வேதங்களைக் கற்றவர்கள்; நான்கு வேதங்களை அறிந்தவர்கள் என்பதையும் நச்சி . உரை தெளிவாக உரைக்கிறது. சம்ஸ்கிருதத்தை அறியாதோர் வேதத்தைப் பயிலவும் இயலாது.
XXXXX

மூன்று கின்னஸ் நூல் சாதனையாளர்கள்
இந்தியாவில் மூன்று பேர் பிரம்மாண்டமான சாதனை செய்தனர். எழுதி, எழுதி, எழுதி, எழுதி …………. வாழ்நாள் முழுதும் எழுதித் தள்ளினார்கள். அவர்களில் முதலாமவர் வேத வியாசர். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் துவாபர யுகத்தில் வாழ்ந்தவர். கலியுகம் வந்தவுடன் ஒவ்வொரு வேத நூலாக அழியப் போகிறதை ஞானக் கண்களால் கண்டு 18 புராணங்களையும், உலகிலேயே மிகப் பெரிய நூலான மகா பாரதத்தையும் எழுத்து வடிவில் கொணர்ந்தார்.வேதங்களையும் நான்காகப் பிரித்து 4 சீடர்களை அழைத்து இதை பரப்புங்கள் என்றார் . அதனால் இன்று வரை எல்லா பிரிவு இந்துக்களும் அவரைக் குரு என்கின்றனர்; வழிபடுகின்றனர்.
அடுத்ததாக ஆதி சங்கரர். அவர் காலத்தில் ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்’, தமிழில் ‘டைப் அடிக்கத் தெரிந்தவன் எல்லாம் பிளாக் எழுதும் அறிஞன்’ என்ற அதி பயங்கரக் கொடுமை நிலவியது. 96 வகை பிரிவுகள் தாண்டவமாடின . அவற்றை எல்லாம் அழித்து அறு வகை வழிபாட்டை உருவாக்கி, உபநிஷதம் முதல் விஷ்ணு சஹஸ்ரநாமம் வரை உரைகளை எழுதித் தள்ளினார். அதனால் இன்றும் அவரை இன்றும் குருவாக்கப் போற்றுவர் சிவனை வழிபடுவோர். tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதே போல தமிழுக்கு என்று ஒருவனை இறைவன் படைத்தான் அவர் பெயர் நச்சினார்க்கினியர் . மதுரையைச் சேர்ந்த பாரத்வாஜ கோத்ரப் பிராஹ்மணன் ; இதை அவரே ஒவ்வொரு உரைக்கும் கீழாக எழுதி பெருமைப்படுகிறார் . அவர் கையில் கிடைத்த, தமிழ் நூல்களுக்கு எல்லாம் உரைகளை எழுதித் தள்ளினார். இதனால் அவரை மற்றவர்கள் ‘உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ என்று பாடிப் பரவினர்
அவர் உரை இல்லாவிடில் இன்று பெரும்பாலான சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு அர்த்தம் தெரியாமல் போயிருக்கும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

tags — சங்க இலக்கியம், ‘அஹம் பிரம்மாஸ்மி’ ,மதுரைக் காஞ்சி, ‘ஒருதாம்’,
நச்சினார்க்கினியர்
—-subham—-