
Post No. 8064
Date uploaded in London – – – 29 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
அமர்ந்தவாறே தியானம் செய்தால் புத்தராகி விட முடியுமா?
ச.நாகராஜன்
அமர்ந்தவாறே தியானம் செய்தால் புத்த நிலையை அடைந்து விடலாம் எனப் பலரும் நினைக்கின்றனர்.
இது சரிதானா?
சான் எனப்படும் தியானம் அமர்ந்து தியானம் செய்யும் போது மனதை வழிப்படுத்த வேண்டும் என்று போதிக்கிறது. அதைச் சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.
தர்மத்தை ஞானத்தைக் கொண்டு மனதைப் பயன்படுத்தி ஒளி பெறச் செய்தல் தான் புத்த நிலையை அடைய வழியாகும்!
ஒருமுறை மாஸ்டர் நான்யு ஹுவாய்ரங் (Master Nanyue Huairang) என்பவர் (677-744) தனது சீடரான மாஜு டாவோய் (Mazu Daoyi) அருகில் வந்தார்.
மாஜுவுக்கு தியானம் என்றால் நிரம்பப் பிடிக்கும். மணிக்கணக்காக அமர்ந்திருப்பார். இப்படி மாதக் கணக்கில் தியானத்தைப் பயிற்சி செய்து வந்தார்.
மணிக்கணக்கில் மாஜு தினம் அமர்வதைக் கேள்விப்பட்ட மாஸ்டர் நான்யு இந்த இளம் சீடன் அப்படி என்ன தியானம் செய்கிறான், அதன் மூலம் எந்த நிலையை அடைந்திருக்கிறான் என்று பார்க்கலாம் என நினைத்தார்.
மாஸ்டர் : அப்பனே! இப்படி அமர்ந்தவாறே தியானம் செய்து எந்த நிலையை அடைய நீ நினைக்கிறாய்?
மாஜு : நான் புத்தராக வேண்டும் என்று இப்படிச் செய்கிறேன்.
இதைக் கேட்ட மாஸ்டர் அருகிலிருந்த ஒரு செங்கல்லை எடுத்து பெரிய கல்பாறை ஒன்றில் மெதுவாகத் தேய்க்க ஆரம்பித்தார்.
சிறிது நேரம் இப்படிக் கழிந்தது.
மாஜுவுக்கு ஆவல் உந்தியது. ஏன் மாஸ்டர் இப்படிச் செய்கிறார்?
மாஜு கேட்டார் : மாஸ்டர்! ஏன் இப்படி செங்கலை பாறாங்கல்லில் தேய்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
மாஸ்டர் உடனே பதில் கூறினார் இப்படி : “இந்த செங்கல்லை ஒரு கண்ணாடி ஆக்கத் தான் இப்படி பாலிஷ் செய்து கொண்டிருக்கிறேன்.”
மாஜூ ஆச்சரியம் ததும்பக் கேட்டார் : “அதெப்படி செங்கல்லை பாறாங்கல்லில் தேய்த்து கண்ணாடி ஆக்க முடியும்?”
மாஸ்டர் பதில் சொன்னார் : “ செங்கல்லை பாறாங்கல்லில் தேய்த்துக் கண்ணாடி ஆக்க முடியாதென்கிறாய், அப்படியானால் அமர்ந்த நிலையில் தியானம் செய்து நீ மட்டும் எப்படி புத்தராக முடியும்?”
நெடு நேரம் அமர்ந்து தியானம் செய்தால் புத்தராகி விடலாம் என நினைத்திருந்த மாஜு திகைத்துப் போனார்.
திகைப்பு மேலிட அவர் மாஸ்டரிடம் கேட்டார் : “பின்னர் எது தான் சரியான வழி?”
மாஸ்டர் புன்முறுவல் ததும்பச் சொன்னார் : “ அப்பனே! இது காளை மாடு வண்டியை இழுப்பதற்கு ஒத்தது. காளை நகரவில்லை என்றால் உன் கையிலிருக்கும் சவுக்கால் காளையை அடிப்பாயா அல்லது வண்டியை அடிப்பாயா?”
மாஜுவுக்கு வாய் அடைத்துப் போனது. காளை மாடு நகரவில்லை என்றால் வண்டியை அடித்து என்ன பிரயோஜனம்? அவருக்குச் சற்று புரிந்தது போல இருந்தது. மாஸ்டர் முகத்தை நோக்கினார்.
மாஸ்டர் தொடர்ந்தார் : “தியானம் என்பது மனதைப் பயிற்சிப்படுத்தும் வழிமுறை. உட்கார்ந்திருப்பது அல்ல வழி ! வெறுமனே உட்காருவதால் தியானம் சித்திக்காது. அல்லது கண்ணை மூடிப் படுத்திருந்தாலும் பலன் இருக்காது. மாறாக புத்த நிலையை எய்தி புத்தராக வேண்டுமெனில் புத்தருக்கென்று ஒரு வடிவம் தனியாக இல்லை என்பதை முதலில் அறிய வேண்டும். புத்த தர்மம் என்பது கீழ்ப்படிதல் இல்லாத தர்மம். உலகை ஒருவன் பற்றி இருக்கவும் கூடாது; உதறித் தள்ளவும் கூடாது. நீ இப்படி புத்த நிலையை அடைவதற்காகத் தொடர்ந்து அமர்ந்திருப்பதானது “புத்தரைக் கொலை” (Killing the Buddha) செய்வதாகும்.
தனது தவறை உணர்ந்த மாஜூ இன்னும் மாஸ்டரின் அறிவுரையை எதிர்
நோக்கி அவர் முகத்தை பக்தியுடன் பார்த்துக் கேட்டார் : “ அனைத்து தர்மங்களுக்கும் இயைந்தபடி என் மனதை நான் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது?”

மாஸ்டர் விளக்கினார் : “ நல்லது! நீ இப்போது நன்கு விளங்கிக் கொண்டாய் – மனம் என்னும் நிலத்தில் விதைகளை விதைக்க வேண்டும்; நான் போதிக்கும் தர்மம் தான் மழை! கர்மப் பிணைப்புக்குத் தக நீ உனது உண்மையான வழியை உணர்வாய்!”
அன்றிலிருந்து நெடுநேரம் அமர்வதை மாஜூ விட்டு விட்டார்.
சுமார் பத்து ஆண்டு காலம் மாஸ்டருடன் தொடர்ந்து இருந்தார்.
பெரும் நிலையை எய்தினார்!
தியானத்தின் முக்கிய வெற்றி நல்ல விதைகளை மனதில் பதிய வைப்பதில் தான் அடங்கி இருக்கிறது. அதில் பெரியோர் போதிக்கும் அறநெறிகள் அல்லது தர்மம் மழையெனப் பொழியும் போது விதை முளைத்துச் செடியாகி, பின்னர் மரமாகிப் பழங்களைத் தரும்.!
tags –தியானம், புத்தர்,
***