‘இனியவை பெறினே தனி தனி நுகர்கேம்’ (Post No.8244)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8244

Date uploaded in London – 26 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘இனியவை பெறினே தனி தனி நுகர்கேம்’

‘எவ்வளவு இன்பம் தரும் பொருள் கிடைத்தாலும் அதைத் தனியாக பயன்படுத்த மாட்டோம். எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம்’.

இந்த அருமையான கருத்து ரிக் வேதம், பகவத் கீதை, தமிழ் வேதமாகிய திருக்குறள் , சங்க நூலான புறநாநூறு முதலிய பல இடங்களில் வருவதால் படித்தும் ஒப்பிட்டும் மகிழக் கூடிய வரிகளாகும்

முதலில் தலைப்பில் சொன்ன வரியைக் காண்போம். இது 18 சங்க கால நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் வருகிறது; அதாவது பத்துப்பாட்டு, எட்  டுத் தொகை என்ற இரு பெரும் தொகுப்பில் எட்டுத் தொகையில் வருகிறது; பதிற்றுப் பத்தில் நாலாவது பத்தைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார். புலவர் பெயரே மிகவும் சுவையானது லண்டனில் காஸ்ட்டா (COSTA) காப்பிக் கடைகளையும், பாரிஸில் 18 டிகிரி காப்பிக் கடைகளையும் தமிழ்நாட்டில் கும்பகோணம் டிகிரிக் காப்பிக் கடைகளையும் நினைவு படுத்தும் பெயர். ஆனால் இவருக்கும் நாம் இன்று அருந்தும் ‘காப்பி’க்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை

இவர் காப்பியக்குடியில் பிறந்த பிராமணப் புலவர்;காப்பியாறு என்னும் ஊர் ஒன்று இருந்திருக்கலாம்  . இவர் பாடிய பாடலுக்காக 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சேர மன்னன் இவருக்கு 40 நூறாயிரம் பொன் (gold) னும் ஆட்சியில் ஒரு பகுதியும் கொடுத்தான் .

நாலாவது பத்தில் பரிசிலர் வெறுக்கை என்ற தலைப்பில், “உலகத்தோரே பலர்மன் செல்வர்” என்று துவங்கும் பாடலில் மூன்று  வரிகள் அருமையான வரிகள்

இனியவை பெறினே தனி தனி நுகர்கேம் ;

பகுத் தூண்  தொகுத்த ஆன்மைப்

பிறர்க்கென வாழ்தி நீ யார் மாறே

பாடலின் சுருக்கப் பொருள் –

“களங்காய் கண்ணி நார்முடிச் சேரல் ! நீ பகைவர் மதிலை அழிக்கும் குதிரைப் படையையும் யானைப் படையும் உடையவன் . நாட்டைத் திருத்தி செம்மைப் படுத்தியவன். ஒளி பொருந்திய நெற்றியுடைய ராணியின் கணவன் ; ஆண் சிங்கம்; பரிசு பெற வருவோரின் பொக்கிஷம் (வெறுக்கை) நீ; வான வரம்பன் என்ற பட்டம் உடையோன்;

“இனிய  பொருள்கள் பலவற்றைப் பெற்றால் அவற்றைத் தனியாக அனுபவிப்போம் ; ஆகையால் அவற்றை என்னிடம் கொடு என்று கேட்கமாட்டாய்; குற்றமற்ற உள்ளம் உடையவன் ; பல்லோர்க்கும் பகுத்தளித்து உண்பதற்காக உணவினைச் சேர்க்கிறாய் ; தன்னலமின்றி பிறர் நலத்துக்காகவே வாழ்கின்றாய் ; ஆகையால்தான் உன்புகழ் எல்லோரையும் விட மேம்பட்டு விளங்குகிறது” .

இதை வள்ளுவனும் இரண்டே வரிகளில் அழகாக மனதில் பதியுமாறு சொல்லிவிட்டான்:–

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை – குறள்  322

புறநாநூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி ,

“இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்

இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” – பாடல் 182

என்று பாடுகிறார். இந்திரன் அமிழ்தம் என்பதெல்லாம் அக்காலத்தில் சர்வ சாதாரமாகப் பயன்படுத்தப்பட்டது . வள்ளுவரும் அதை உறுதி செய்கிறார்.

மொத்தத்தில் எவ்வளவு சிறந்த உணவு கிடைத்தாலும் அதைத் தனியாக உண்ணக் கூடாது என்று இமயம் முதல் குமரி வரையுள்ள புலவர்கள் பாடினார்கள்.

விருந்தோம்பும் பண்பு, பகுத்துண்ணும் பண்பு இவைகளை பாராட்டும் பழங்கால ப் பாட்டுக்கள் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டுமே உண்டு.

எல்லாவற்றுக்கும்  முன்பாகவே கீதையிலும் ரிக் வேதத்திலும் இக்கருத்து உள்ளது.

“புஞ்ஜதே தே த்வகம் பாபாயே பசந்தி ஆத்ம காரணாத்”–

எவர்கள்  தமக்கெனவே சமைக்கிறார்களோ அவர்கள் பாபத்தையே உண்கிறார்கள்

-பகவத் கீதை 3-13

“தேவர்கள் உங்களுக்கு , வேள்வியின் முடிவில், இனிய பொருட்களைத் தருவார்கள் ; அதை மீண்டும் அவர்களுக்கு கொடுக்காமல் இருப்பவன் திருடன்” —பகவத் கீதை 3-12

இறைவன் கொடுத்ததை  மீண்டும் இறைவனுக்குப் படைத்து, பல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே வேள்வியின் தத்துவம்.

இதற்கெல்லாம் மூல காரணமாக அமைந்தது ரிக் வேத மந்திரம் 10-117-6

“நான் ஒரு உண்மையை சொல்கிறேன்; உழைக்காமலேயே உணவைப் பெறுகிறார்கள் முட்டாள்கள்;  இது அவனுக்குத் தாழ்வையே தரும்;  அவன் நண்பர்களுக்கும் தருவதில்லை; இதனால் அவனை நேசிப்போரும் இல்லை. பிறருக்குக் கொடுக்காமல் உண்பவன் குற்றம் புறிந்தவனே – ரிக் வேதம் 10-117-6

“கொடுப்பார் ஏத்தி , கொடார்ப் பழிப்பர்”—‘பகிர்ந்து கொடுப்போரை உலகம் வாழ்த்தும்; பகிராதோரை உலகம் தாழ்த்தும்’ என்று தொல்காப்பியமும் செப்பும்.

tags – இனியவை பெறினே, இந்திரர் அமிழ்தம்,பகுத்துண்டு

–சுபம்—

Leave a comment

Leave a comment