கலியுகம் முடிந்து துவாபர யுகம் நடக்கிறது (Post.8576)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8576

Date uploaded in London – 26 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கலியுகம் முடிந்து துவாபர யுகம் நடக்கிறது

இப்போது நடப்பது கலியுகம் அல்ல; இது துவாபர யுகம் – என்ற வியப்பான செய்தியை நடிகர் ரஜினி  காந்த்தின் குரு கூறுகிறார். அவர் பெயர் யோகி யுக்தேஸ்வர் . அவர் பரம ஹம்ச யோகானந்தாவின் குரு;  பரம ஹம்ச யோகானந்தா எழுதிய ‘ஒரு யோகியின் சுயசரிதை ‘(An Auto Biography of a Yogi by Paramahamsa Yogananda)  என்பது தமிழ் உள்பட பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. யுக்தேஸ்வரின் குரு லாஹிரி மஹா சயர் . அவருடைய குரு பாபா மஹாவதார் என்று சொல்லுவர் . சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ் ந்தவர் .

நாம் இப்போது காணப்போகும் யுக்தேஸ்வர் கிரி என்பவர் வங்காளத்தில் பிறந்து பூரி நகரில் 1936ல் சமாதி அடைந்தார் . இவர்கள் அனைவரும் கிரியா யோகம் என்னும் முறையைப் பிரபலப்படுத்தினர்.

யுக்தேஸ்வர் கிரி என்ன சொல்கிறார்?

துவாபர யுகம் 1699-ல் துவங்கிவிட்டது கி.பி. 4099ல் முடிவடையும் . ஊர் பேர் தெரியாத ஒரு ஜோதிடர் இதையே சொல்லி இருந்தால் ஏதோ ‘பப்ளிசிட்டி’க்காக நம்மூர் அரசியல்வாதிகளும் நடிகர்களும் அவ்வப்போது சர்ச்சசைக்குரிய (Tweet) ட்வீட் செய்வது போல இதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட்  (Publicity stunt) என்று நினைக்கலாம். ஆனால் சொன்னவரோ அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் போற்றும் குரு .

இனி அவர் சொல்லுவதை விளக்கமாகக் காண்போம்.

க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் சதுர் யுகங்களும் — அதாவது 4 யுகங்களும் 12,000 ஆண்டுகளில் முடிவடையும் இதைப்போல் இருமுறை நடப்பது ஒரு முழு வட்டம் அதாவது ‘முழு யுகச் சுழற்சி’ (One Full Cycle of Yugas) என்கிறார்.

இதற்கு ஆதாரம் என்ன ?

மிகவும் பழைய ஸ்ம்ருதியான – அதாவது சட்டப்புத்தகமான– மனு ஸ்ம்ருதியில் முதல் அத்தியாயத்தில் க்ருத யுகம் முதல் கலியுகம் வரை 4000, 3000, 2000, 1000 ஆண்டுகள் என்ற கணக்கில் நடக்கும் . ஒவ்வொரு யுகத்துக்கு இடையே ‘யுக சந்தி’ என்னும் இடைவெளி பத்து +பத்து = 20 சதவிகிதம் இருக்கும் என்கிறார். ஆக மொத்தம் 12000 ஆண்டுகள்தான் மொத்தம் 4 யுகங்களுக்கும்.

அது சரி, யுக சந்தி என்னும் இடைவெளி பற்றிச் சொல்லுகையில் ஏன் பத்து + பத்து என்று சொல்கிறீர்கள்? என்று சிலர் நினைக்கலாம். அதாவது உதயமும் சந்தியாகால வெளிச்சமும் 10, 10 சதவிகிதம். இங்கே விளக்கத்தை நிறுத்திவிட்டு சிறிது சிந்தித்துப் பார்ப்போம். முதலில் 4000, 3000, 2000 , 1000 ஆண்டுகள் என்று 4,3,2,1 என்ற இறங்கு வரிசையில் பார்க்கிறோம். பின்னர் 10+10 இடைவெளிக் காலம் என்று பார்த்தோம். எவ்வளவு கண்ணக்குப்போட்டு இதைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

இப்படிக் கணக்குப் போட்டதற்கு என்ன காரணம் ?

இப்போதுதான் மேலை நாட்டு  விஞ்ஞானம் இதை ஆராயவே துவங்கி இருக்கிறது; அதாவது பூமியின் காந்த மண்டலம் ‘பல்டி’ அடிக்கிறது ; வட துருவம், தென் துருவம் ஆகிறது; அப்போது பூமியில் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன என்று ஒப்புக் கொள்கின்றனர்.

இதுவரை அவர்கள் சொல்லும் ஆண்டுகளுக்கும் நாம் சொல்லும் ஆண்டுகளுக்கும் முழு ஒற்றுமை இல்லாவிடினும் அவர்களிடையேயும் கருத்து வேறுபாடு இருக்கிறது ; ஒருவர் 2030ம் ஆண்டில் துருவங்கள் பல்டி அடிக்கும் என்கிறார். இதை முன்னரே சொல்லி இருக்கிறேன். அதுமட்டுமல்ல 4, 3, 2, 1 என்ற இறங்கு வரிசையில் க்ருத, த்ரேத , த்வாபர , கலி  என்று சொல்வதில் தர்மம் என்னும் வண்டி அல்லது பசு மாடு ஒவ்வொரு காலாக இழந்து கலி யுகத்தில் ஒற்றைக் காலில் தள்ளாடும் என்று மனு சொன்னதை முன்னரே கண்டோம்.

இப்போது மீண்டும் யுக்தேவர் கிரி என்னும் மஹான் சொல்லும் விஷயத்துக்கு வருவோம்.

அவர் சத்ய யுகம் என்னும் கிருத யுகம் என்பது கி.மு. 11,501-ல் துவங்கி 6701-ல் முடிந்துவிட்டது. பின்னர் த்ரேதா யுகம் கி.மு.3101-ல் துவங்கியது என்கிறார். ஆனால் நமது பஞ்சாங்கங்களோ அதை கலியுகத்தின் துவக்கமாகக் காட்டுகின்றன.

சுவாமி யுக்தேஸ்வர் கீரியும் யுக சந்தி கணக்கு முதலியவற்றை ஒப்புக்கொள்கிறார். ஆனால் கலியுகம் முடிந்து இப்போது துவாபர யுகம் நடப்பதாகவும் இதே போல ‘கார் ரிவர்ஸ் கியரி’ல் (Reverse Gear) போவது போல கலி, துவாபர, த்ரேதா, சதுர் என்று முடிக்கையில் ஒரு சுழற்சி முடியும் என்றும் சொல்கிறார். மொத்தம் 24,000 ஆண்டுகள்..

அதர்வ வேதத்தில் 4 யுகம் பற்றிய ஒரு குறிப்பில் ஒரு யுகம் என்பது 10,000 ஆண்டுகள் என்றும் சொல்லப்படுகிறது.

ஆக கலியுகம் என்பது 4,3,2000 ஆண்டு என்று நாம் சொல்லுவதை யுக்தேஸ்வர் மறுக்கிறார். அவரே மனு என்பவர் கி.மு 6701ல் வாழ்ந்தவர் என்றும் சொல்லுவதால் வேதகால நாகரீகம் அப்போது சரஸ்வதி நதிக்கரையில் இருந்தததை நாம் அறிய முடிகிறது

இதை முடிப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ளுவோம்.இந்து மதம் என்பது நீண்ட வரலாறு உடையது ; ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் (Herman Jacobi and B G Tilak)  முதலியோர் வான சாஸ்திரக் குறிப்புகளின் அடிப்படையில் ரிக் வேதத்துக்கு கி.மு. 6000 அதாவது இற்றைக்கு எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தேதி குறித்ததுள்ளனர் ; காலப்போக்கில் சொற்களும் வேறு வேறு பொருள் கொள்ளும்; ஆங்கில அகராதியைப் புரட்டினால் பில்லியன் (Billion)  என்பதற்கு 1000 கோடி என்ற பொருளையும் காணலாம். ஆனால் இப்போது நாம் 100 கோடி என்ற

எண்னைக் குறிக்கத்தான் பில்லியன் என்ற ஆங்கிலச் சொல்லை பயன்படுத்துகிறோம். இதே போல யுகக் கணக்கும் மாறி இருக்கலாம். அல்லது பெரிய யுகம், சின்ன யுகம் என்று இரண்டு கணக்கு இருக்கலாம்.

எங்கள் மதுரை நகரில் பேச்சு வழக்கில் ‘சின்ன எட்டு’,’ பெரிய எட்டு’ என்று சொல்லுவார்கள். வீடு , மனை, நிலம், முதலியவற்றை விலை பேசுகையில் முதலில் ‘சின்ன எட்டு’ 80,000 ஆகவும் பெரிய எட்டு , 8 லட்சமாகவும் இருந்திருக்கும் . இப்போது விலைவாசி பத்து மடங்கு உயர்ந்து விட்டதால் பெரிய எட்டு என்பது  எட்டு மில்லியன் அல்லது எட்டு கோடியாகக் கூட இருக்கும்.

 அதாவது RELATIVE  TERMS டெர்ம்ஸ் .

நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்த காலத்தில் BIG HOUSE பிக் ஹவுஸ், SMALL HOUSE ஸ்மால் ஹவுஸ் என்பதை மொழி பெயர்க்கச் சொல்லுவேன். அவர்கள் பெரிய வீடு , சின்ன வீடு என்று மொழி பெயர்ப்பார்கள்  உடனே அவர்களைத் தமிழ் நாட்டுக்குப் போய் எனக்கு ஒரு சின்ன வீடு வேண்டும் என்று சொல்லிவிடாதீர்கள். அதற்கு வேறு ஒரு பொருளும் உண்டு. கள்ளக்காதலி வீட்டை ‘சின்னவீடு’ என்பர் என்று சொன்னவுடன் எல்லோரும் சிரிப்பார்கள். ஆகையால் ஒரு எண் அல்லது கணக்கு என்பது எந்த இடத்தில் எந்தக் கட்டத்தில், எந்தக் காலத்தில் சொல்லப்படுகிறது என்பதை நோக்க வேண்டும். ‘வெள்ளம்’ என்றால் மலையாளத்தில் ‘குடிப்பதற்கு நீர்’ என்று பொருள்; இன்றைய தமிழ்நாட்டில் வெள்ளப் பெருக்கு FLOODS ‘பிளட்ஸ்’ என்று பொருள். சங்க இலக்கியத்தில் அது ஒரு பெரிய எண் . ஆக இடம், காலம் என்பது முக்கியம்.

இந்துக்கள் 26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியின் தலை ஒரு சுற்றுச் சுற்றுவதைக் கூட அறிந்து இருந்தனர். இதனால் துருவ நட்சத்திரம் மாறுவதையும் அவர்கள் அறிந்து இருந்தனர். ஒரு பம்பரம் சுற்றி முடியும் தருவாயில் ஒரு சுற்று சுற்றிவிட்டு தரையில் படுக்கும். அப்படித் தரையில் படுப்பதற்கு முன்னர் அது ஆடும் ஆட்டத்தை பூமியின் அச்சு ஆடும் ஆட்டத்துக்கு (Precessional Cycle) ஒப்பிடுவர். பம்பரம் ஒரு நிமிடத்தில் தலை ஆட்டத்தை முடிக்கும். ஆனால் பூமியின் தலையோ 26,000 ஆண்டுகளுக்கு மெதுவாக தலையைச்  சுற்றும். இதையும் அவர்கள் யுகக் கணக்கில் கொண்டனர் . அவர்கள் கொண்ட அறிவியல் அணுகுமுறையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது!!

tags – கலியுகம், துவாபர யுகம்,யுக்தேஸ்வர் .

–subham–

Leave a comment

Leave a comment