
Post No. 8672
Date uploaded in London – –12 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

பொதுவாக மொழிகளைப் பெண்களாகக் (MOTHER OR SISTER LANGUAGE) கருதுவர். இந்த இந்துமத மரபை உலகம் முழுதும் இன்றும் பின்பற்றி, நெருங்கிய மொழிகளை சகோதரி – சிஸ்டர்- என்றே அழைப்பர் ; ஆயினும் மூளைச் சலவை செய்யப்பட தமிழர்களுக்காக ‘அண்ணன்’ என்று எழுதியுள்ளேன். இன்று உலகில் வழங்கும் மொழிகளில் அல்லது அவற்றின் மாபெரும் இலக்கியம் நூலகங்களை அலங்கரிக்கும் மொழிகளில் மிகவும் பழைய மொழிகள் சம்ஸ்க்ருதம், பாரசீகம், எபிரேயம் எனப்படும் ஹீப்ரு கிரேக்கம், லத்தின், தமிழ் ஆகிய மொழிகளாகும் . இவைகளில் தமிழ்தான் கடைக்குட்டி. அதாவது இலக்கியம், கல்வெட்டு சான்றுகளை எடுத்துக் கொண்டால் சின்னத் தம்பி தமிழ்தான்.
இரண்டு பொய்களைத் தமிழ் வெறியர்கள் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர்.
முதல் பொய் : —இன்று பேசப்படும் மொழிகளில் மிகவும் பழைய மொழி தமிழ் .
இரண்டாவது பொய் – தமிழ் தவிர மற்ற பழைய மொழிகள் எல்லாம் வழக்கொழிந்துவிட்டன.
இரண்டும் பொய் என்பதை விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் படித்தவர்கள் அறிவர்.

தமிழில் கிடைத்த பழைய நூல் தொல்காப்பியம் . அது புள்ளி வைத்த (DOTTED CONSONANTS) எழுத்துக்கள் பற்றிப் பேசுவதால் அது 2000 ஆண்டுகளுக்குள் தோன்றிய நூலே என்பது அறிஞர் தம் முடிவு. மேலும் அதிலுள்ள சொற் பிரயோகங்களைக் கொண்டு பேராசிரியர் கே. ஏ.நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப்பிள்ளை போன்றோர் அது கிபி.ஐந்தாம் நூற்றாண்டு அல்லது அதற்கும் பிந்தியது என்பர். ஆனால் நான் மேலே குறிப்பிட்ட பழைய மொழிகளில் அதற்கு முன்னரே நூல்கள் உள்ளன. (தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் விதிகள் தொல்காப்பியருக்கு முந்தியவை OLDER THAN TOLKAPPIAM)
கிரேக்க மொழி இன்று சுமார் ஒன்றரைக் கோடி மக்களால் பேசப்படுகிறது. கிரேக்க நாட்டிலும் சைப்ரஸ் தீவிலும் அதிகார பூர்வ மொழி அது. அல்பேனியா கருங்கடல், மத்திய தரைக் கடல் கரையோர பகுதிகளிலும் கிரேக்க மொழி பேசுவோர் உள்ளனர். இவர்கள் ஆதிகாலத்தில் பயன்படுத்திய எழுத்து லீனியர் பி (Linear B )என்பதாகும். அது அகர (not alphabet) வரிசை எழுத்தன்று. பிற்காலத்தில் பினீசிய எழுத்துக்களில் இருந்து ஆல்பா , பீட்டா , காமா , டெல்டா என்ற அகர வரிசை எழுத்துமுறை பின்பற்றப்பட்டது.
குறைந்தது 3500 ஆண்டுகளுக்கு எழுத்து வடிவத்தில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன . ஆனால் இலக்கியம் என்பது 2800 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றின. ஹோமர் என்ற அந்தகக் கவிஞர் (blind poet Homer) எழுதிய இலியட், ஒடிஸி /ஆடிஸி (அமெரிக்க உச்சரிப்பு ஆடிஸி Iliad and Odyssey )ஆகியன பழைய காவியங்கள் ஆகும்.

இந்த மொழியை சம்ஸ்கிருதம் தமிழ் மொழியுடன் ஒப்பிடுவோம் .முதலில் கிடைக்கும் தமிழ் இலக்கியம் சங்க கால இலக்கியம் . அது 2000 ஆண்டு பழமையுடைத்து . முதலில் கிடைக்கும் தமிழ் எழுத்து பிராமி எழுத்து அது 2300 ஆண்டு பழமையுடைத்து. ஆக கிரேக்க மொழிக்கு 800 ஆண்டு பிந்தியது.
தமிழர்களின் பழைய இலக்கண நூல் தொல்காப்பியம். இது ஆய்த எழுத்து என்னும் மூன்று புள்ளி, மற்றும் புள்ளி வைத்த மெய் எழுத்துக்கள் பற்றிப் பேசுவதால் தொல்பொருட்த் துறை அறிஞர்கள் இதை சுமார் 1500 ஆண்டு பழமையுடைத்து என்றுதான் கருதுகின்றனர் . மேலும் திருக்குறள் ‘அதிகாரம்’, தொல்காப்பிய ‘அதிகாரம்’, சிலப்ப’திகாரம்’ ஆகிய மூன்றிலும் ‘அதிகாரம்’ என்ற சம்ஸ்க்ருத சொல், சூத்திரம் என்ற சம்ஸ்க்ருத சொல் ஆகியன வருவதாலும் இதைப் பிற்காலத்தியது என்பர்.
இதைப் படிப்பவர்கள் எழுத்து/ வரி வடிவம் வேறு; மொழி (language and Script are different) என்பது வேறு என்பதை முதலில் தெளிவாக அறிதல் வேண்டும். தொல்காப்பியத்தின் விதிகள்/சூத்திரங்கள் மிகவும் பழங்கால விதிகளையும் சொல்கிறது. ஆகையால் அதற்கு முன்னரும் தமிழ் நூல்கள் இருந்தன. அவை நமக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக இப்படி அழிந்து போன நூல்களை எவரும் உறுதியான ஆதாரமாகக் கொள்வதில்லை. ஏனெனில் மைசீனியன் (Mycenean ) கிரேக்க மொழிக்கும் ஹோமர் புஸ்தகம் எழுதிய கிரேக்க மொழிக்கும் இடையே 600 ஆண்டுக்கால மர்மமான இடை வெளி இருக்கிறது. சம்ஸ்கிருதத்திலோ இருக்கும் நூல்களை விட அழிந்துபோன நூல்களே அதிகம்!
இப்போது கிரேக்க மொழியை ஸம்ஸ்க்ருதத்துடன் ஒப்பிடுவோம்
முதலில் எழுத்து வடிவத்தில் சம்ஸ்கிருத மொழி இருப்பது கி.மு 1340-ல் தெரிய வந்தது. இப்போது துருக்கி நாட்டில் இருக்கும் பொகஸ்கொய் என்னும் இடத்தில் வேத கால தெய்வங்களின் பெயரைச் சொல்லி கையெழுத்திட்ட உடன்படிக்கை பற்றிய செய்தி கிடைக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மிட்டன்னி நாகரீக மன்னர்கள் அனைவர் பெயரும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.. அதிலுள்ள வேத கால தெய்வங்கள் ரிக் வேத மந்திர வரிசையில் எழுதப்பட்டதால் ரிக்வேத மந்திரங்கள் கி.மு 1340க்கு முந்தியவை என்ற தொல்பொருட் துறை சான்றும் கிடைத்துவிட்டது. துருக்கி நாட்டில் கிடைத்த கக்கூலி எழுதிய குதிரை சாஸ்திரமும் சம்ஸ்கிருதத் சொற்களுடன் உள்ளன.

ஆயினும் இந்தக் கல்வெட்டு களிமண் பலகையில் கியூனி பார்ம் எழுத்தில் உள்ளது. இதற்குப் பின்னர் எகிப்தில் உள்ள தசரதன் கடிதங்களும் சம்ஸ்கிருத சொற்களை உடையவை என்பதை விக்கிபீடியா உள்பட எல்லா என்ஸைக்ளோபிடியாக்களிலும் காணலாம்.
ஆக எழுத்து வடிவில் கிரேக்க மொழியின் லீனியர் பி -க்கு சமமாக உள்ளது சம்ஸ்கிருதம்; இலக்கிய வடிவிலோ அதை விட மிகப் பழமையானது; ஹோமர் இதிகாசத்தை எழுதும் முன்னரே பிரமாண்டமான அளவில் வேத கால இலக்கியத்தை எழுதி முடித்துவிட்டனர். சம்ஹிதை, பிராமணங்கள், ஆரண்யகங்கள், முக்கிய உபநிஷத்துக்கள் அனைத்தும் எழுதி முடித்த காலத்தில் ஹோமர் Homer என்னும் கவிஞர் கிரேக்க மொழியின் முதல் படைப்புகளை அளித்தார்.
ஆக தமிழை விட பழமையானது கிரேக்க மொழி என்பதும் அது இன்றும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படுகிறது என்பதும் உண்மையே. அலெக்சாண்டரின் படை எடுப்புக்குப் பின்னர் அதன் ஆதிக்கம் மேலும் பரவியது. பூகோள ரீதியில் கிரேக்க நாட்டிலிருந்து இந்தியாவின் வடமேற்கு எல்லை வரை கிரேக்க மொழி எதிரொலித்தது. ஆக இதிலும் தமிழை விட முன்னிலையில் நிற்கிறது.
சம்ஸ்க்ருத மொழியோ துருக்கி- சிரியா எல்லையிலிருந்து தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் பரவியது; மத்திய ஆசிய பாலைவனத்திலிருந்து இந்தோனேஷியாவின் காடுகள் வரை சம்ஸ்கிருத ஓலைச் சுவடி அல்லது கல்வெட்டு காணப்படுகிறது ; சுருங்கச் சொன்னால் உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய மொழி. இது தவிர மொழி பெயர்ப்பு என்று எடுத்துக் கொண்டாலும் பழைய காலத்தில் அதிகமான மொழிகளில் ஆக்கப்பட்டது பஞ்ச்ச தந்திரக் கதைகள் முதலியனதான்.
ஆனால் ஒரு மொழியின் சிறப்புக்கு பழமை மட்டும் காரணமன்று என்பதை நேற்று வந்த ஆங்கில மொழியின் பெருமையிலிருந்து அறியலாம். அரசியல்,பொருளாதார அம்சங்களும் மொழி பரவியதற்கு காரணங்கள் .
இனி கிரேக்க மொழி பற்றி விரிவாகக் காண்போம் .
தொடரும் …………………………………………………..
Tags– கிரேக்க மொழி , காவியம் , ஹோமர், மைசீனியன்