
Post No. 8738
Date uploaded in London – – –26 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இராமாயண வழிகாட்டி!
தெய்வீகப் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணங்கள்!
ச.நாகராஜன்
ஹிந்து தர்மத்தில் அனைத்து நல்ல சாஸ்திரங்களுக்கும் ஒரு இடம் உண்டு.
ஜோதிடம், சகுனம், நிமித்தம், கைரேகை, கால் ரேகை, சாமுத்ரிகா லக்ஷணம் என இப்படிப் பல்வேறு சாஸ்திரங்கள் – கலைகள் உண்டு.
அவை அனைத்தும் உண்மையே.
ஆனால் அவற்றை உரிய முறையில் கற்று வல்லவராக ஆனால் மட்டுமே நன்கு பயன்படுத்த முடியும்.
சீதை அசோகவனத்தில் சிறைப்பட்டு இருந்த சமயம் தனக்குத் தானே புலம்பித் தவிக்கின்ற இடங்கள் ஏராளம் உண்டு.
இராவணன் தனது தந்திரத்தால் இராமனும் இலக்குவனும் செத்து விட்டதாக சீதையை நம்ப வைக்க முயன்றான்.
இந்திரஜித் போரில் நாகபாசத்தை ஏவி ராமரையும் லக்ஷ்மணரையும் கட்டுவித்தான். செயலற்று அவர்கள் போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்தனர். ராமனும் லக்ஷ்மணனும் போரில் இந்திரஜித்தால் கொல்லப்பட்டனர் என்று இலங்கை முழுவதும் தண்டோரா போடச் செய்தான் இராவணன்.
ஹிட்லரின் ஆணையின் பெயரில் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விட்ட கோயபல்ஸுக்கு முன்னோடியாக ராவணன் இருந்திருக்கிறான்!

பின்னர் அரக்கிகளை ஏவி விட்டு புஷ்பகவிமானத்தில் சீதையையும் திரிஜடையையும் ஏற்றி போர்க்களத்திற்கு அனுப்பினான். அங்கே வீழ்ந்து கிடந்த ராமரையும் லக்ஷ்மணரையும் பார்த்த சீதை லக்ஷ்மணரை நோக்கிப் புலம்பும் போது தன் சாமுத்ரிகா லக்ஷணங்களைக் கூறுகிறாள்; புலம்புகிறாள்.
இப்படிப்பட்ட லக்ஷணங்களைக் கொண்டவளைப் பெரும் பாக்கியசாலி என்று பெரியோர் கூறினரே, அது பொய்யா என்று கூறி அரற்றுகிறாள்.
சீதை கூறும் சில வாக்கியங்களைக் கீழே காணலாம்:-
“குலப் பெண்கள் எவைகளால் அரசர்களாகிய தம் கணவர்களோடு பட்டமஹிஷிப் பதவியில் அபிஷேகம் செய்யப்படுகிறார்களோ அந்த பத்ம ரேகைகள் என் பாதங்களில் இதோ இருக்கின்றனவே!” (வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம் 48ஆம் அத்தியாயம் ஸ்லோகம் 6)
எனக்கு கூந்தல் மயிர்கள் தடிக்காதவை. ஒத்தவை! கறுத்தவை. புருவங்கள் இரண்டும் ஒன்று சேராமல் இருக்கின்றன. எனது கணைக்காலுக்கும் முழங்காலுக்கும் மத்தியில் உள்ள பாகங்கள் இரண்டும் தசைப்பற்று உள்ளவையாகவும் உரோமம் இல்லாமலும் இருக்கின்றன. பற்கள் இடைவெளியில்லாமல் இருக்கின்றன. (ஸ்லோகம் 9)
எனது நெற்றியின் இரு புறங்களும், கண்களும், கைகளும், கால்களும், தொடைகளும் சதைப்பற்று உடையவாக இருக்கின்றன. எனது விரல்கள் வட்டமான நகம் உடையனவாயும், மிருதுவானவைகளாகவும், ஒத்தவைகளாகவும் உள்ளன. (ஸ்லோகம் 10)
எனது இந்த மார்பகங்கள் இரண்டும் இடைவெளியின்றி, பருத்து, காம்புகள் உள்ளடங்கப் பெற்றிருக்கின்றன. எனது உந்தியானது ஆழ்ந்தும், வரம்பு தடித்தும் இருக்கிறது. விலாப்பக்கங்களுள்ளிட்ட மார்பின் மேற்புறமும் தசைப்பற்றுள்ளாத இருக்கிறது. (ஸ்லோகம் 11)
எனது நிறம் மாணிக்கத்தைப் போல இருக்கிறது. உரோமங்கள் மிருதுவாக இருக்கின்றன. (பத்து விரல்கள் மற்றும் இரு உள்ளங்கால்கள் ஆக) இந்தப் பன்னிரெண்டும் பூமியில் படியப் பெற்ற உத்தம லக்ஷணம் பொருந்தியவள் என்று என்னைப் பார்த்துச் சொன்னார்கள் (ஸ்லோகம் 12)
உள்ளங்கைகளும், உள்ளங்கால்களும் பூர்ணமான யவரேகைகளை உடையன. இடைவெளியற்றன. செந்நிறம் வாய்ந்தன. பெண்களின் லக்ஷணங்களை அறிந்தவர்கள் என்னைப் பார்த்து எப்போதும் புன்னகை உடையவள் என்றும் சொல்லி இருக்கிறார்கள் (ஸ்லோகம் 13)

சீதை மேற்கூறியபடி கூறிப் புலம்புகிறாள்.
இதில் ஒரு உத்தமமான பெண்ணுக்கு இருக்க வேண்டிய நல்ல லக்ஷணங்களை சீதைச் சுட்டிக் காட்டுவதைக் கவனித்தால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே ஹிந்து தர்மத்தில் சாமுத்ரிகா லக்ஷணம் பற்றிய கூரிய அறிவும் நம்பிக்கையும் இருந்திருப்பது புலனாகிறது.
சாமுத்ரிகா லக்ஷணம் என்ற கலை பெரியோர்களால் போற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதும் நன்கு தெரிகிறது.
பின்னால் வரும் சம்பவங்களால் சீதை ராமனுடன் சேர்ந்து அயோத்தியை அடைந்து பட்டமகிஷியான விஷயத்தை நாம் அறிவோம்.
ஜெய் ஸ்ரீ ராம்!

tags– தெய்வீக, பெண்கள், சாமுத்ரிகா லக்ஷணங்கள்