நோய்களைத் தீர்க்கும் நவரத்தினங்கள் (Post No.8827)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8827

Date uploaded in London – – 19 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹெல்த்கேர் அக்டோபர் 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

நோய்களைத் தீர்க்கும் நவரத்தினங்கள் : பதார்த்த குண சிந்தாமணி

ச.நாகராஜன்

பதார்த்த குண சிந்தாமணி நூலில் நவரத்தின வகை என்ற தலைப்பில் ஒவ்வொரு ரத்தினமும் எந்தெந்த வியாதிகளைக் குணமாக்கும் என்பது விவரமாகத் தரப்பட்டுள்ளது.

மாணிக்கத்தின் குணம்

சுரரோகஞ் சந்நிகளின் தோட மதிதாக

முரமான மேக மொழியுந்- திரமாக

வூணிக்கோ ணேத்திரநோ யோடுமர வீன்றவொளி

மாணிக்கத்தால் வசிய மாம்

பொருள் : (சர்ப்பம் கக்கிய) மாணிக்கத்தினால் சரீரத்தில் ஏற்படும் அனைத்து விதமான ஜுரங்கள், சந்நிபாத தோஷங்கள், திரிதோஷதாக ரோகம், வாத பிரமேகம், கண் நோய்கள் ஆகிய இவைகள் ஒழியும். அத்துடன் வசீக்ரம் உண்டாகும்.

(பழைய உரை ‘சர்ப்பம் கக்கிய மாணிக்கம்’ என்று கூறினாலும் அப்படி ஒரு மாணிக்கம் கிடைக்குமா என்பது சர்ச்சைக்குரியதாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

வைரத்தின் குணம் – இதுவே வஜ்ஜிரம் எனப்படும்

ஆறு விதமாம் வயிரம் அவ்வவற்றுண் மாரசங்கள்

வீறிநிலைத் திருக்கும் மேன்மையினாற் – கூறுமவைக்

கெப்பிணியும் நீக்கும் இணையில வனப்பும் உண்டாஞ்

செப்பிணையின் மாமுலையாய் செப்பு

பொருள் : செப்பைப் போன்ற மார்பகத்தை உடையவளே, தேவ, பிரம, சத்திரிய, வைசிய, சூத்திர, சங்கர என்னும் ஆறு வகை வைரங்கள் உண்டு. அவற்றினுள் மகா ரசங்கள் தங்கி இருப்பதனால் அவைகளுக்கு கண்களில் வரும் நோய் உள்ளிட்ட பற்பல ரோகங்களை விலக்கும் சக்தி உண்டு. அழகும் உண்டாகும்.

வைடூரியத்தின் குணம்

சீத வாதத்தொடு சிலேஷ்மம் புளியேப்பங்

காதுசூலைப் பிணிக ளத்தகுமை – மோதுபித்த

மென்று உரைக்கும் நோய்கள் அறும் எப்போதுந் தோடமிலை

நன்று வைடூரியத்தி னால்

பொருள் : வைடூரியத்தினால் சிலேஷ்ம வாத தோஷம், கபம், புளியேப்பம், வருத்துகின்ற கீல் பிடிப்பு வாதகுன்மம், பைத்தியம், அபத்திய முதலிய சப்த தோஷங்கள் நிவர்த்தியாகும்.

கோமேதகத்தின் குணம்

வாதபித்த கோபத்தை மாற்றுமல கட்டறுக்கு

மோது மந்தாக்கினியை ஓட்டுங் காண் – மீதி

லழறரு விகார மகற்று மொளி செய்யுங்

கழறுகின்ற கோமேத கம்

பொருள் : கோமேதகமானது வாதபித்தமிஸ்ரம், மலச்சிக்கல் மற்றும் ஜுரத்தால் ஏற்படும் துர்க்குணம் ஆகியவற்றை அகற்றும். மினுமினுப்பையும் தரும்.

புஷ்பராகத்தின் குணம்

வீரிய விர்த்தியது மேன்மேலு முண்டாகுங்

கூரிய நற்புத்தியுண்டாங் கூறுங்காற் – பாரிற்

பிணிவருக்க மேகும் பெரும் புட்பராக

மணியாற் புகழுமுண்டாம் வாழ்த்து

பொருள் : புஷ்பராகத்தினால் விந்து விருத்தியாகும். நல்ல நுண்ணறிவு ஏற்படும். புகழ் ஓங்கும். மேக முதலிய நோய்க் கூட்டமும் நீங்கும்.

பவளத்தின் குணம்

சுரதோட மையமுத் தோட சுரங்காச

மருசி கீடத்தாலா மாதம் – பெரும்விந்து

நட்ட மதிதாக நாவறட்சி போமொளியுங்

கிட்டும் பவளத்தாற் கேள்

பொருள் : பவளத்தினால் ஜுர தோஷம் நீங்கும். கபம் சந்நிபாத ஜூரம் விலகும். இருமல் போகும். அருசி, கீட விஷம், விந்து நஷ்டம் ஏற்படுவது ஆகியவை போகும்.நா வறட்சி போகும். அத்துடன் சரீர காந்தி ஏற்படும்.

முத்தின் குணம்

அத்திசுரஞ் சோபை யருசிதுர்ப் பலங்கண்ணோய்

பித்துவிடஞ் சீதளநோய் பேசுகபஞ்-சத்தத்

தயிரிய நட்டத்தோடு தாதுநட்ட மும்போ

முயிறுநண் முத்திருந்தா லோது

பொருள் : (ஜீவரத்தினம் என்னும்) முத்தினால் அஸ்தி ஜுரம் , வீக்கம், அருசி, தேக மெலிவு, விழி நோய், அக்கினி கீட விஷம், சுட்க சிலேஷ்மம், குரல் வளையில் ஏற்படும் கோழை, அதைரியம், வீரிய நாசம் ஆகிய அனைத்தும் போய் விடும்.

மரகதத்தின் குணம்

தாது தரும் பூதபை சாசந் தமையோட்டு

மீதுவரு புண்ணை விலக்குங்காண் – டீதுபுரி

மச்சை யகற்றும் மதுமேகம் போக்கும்

பச்சை யதுமதுரம் பார்

பொருள் : இனிப்புள்ள மரகதம் விந்துவை தரும். 18 விதமான பூத பைசாசங்க்ளை ஓட்டி விடும். பல விஷங்களை அகற்றும் சக்தி கொண்டது. மதுமேக வியாதியையும் போக்கும்.

நீலத்தின் குணம்

குதிவலி மேகபித்தங் கூறரிய பாண்டு

மதிமயக்க மெல்லா மருளு- மதிநுதலே

புத்தியொடு மென்மேலும் போகசுக முண்டாகுஞ்

சுத்தநறு நீலத்தாற் சொல்

மதி நுதலைக் கொண்டவளே! நீலத்தினால் குதி கால் நோவு தீரும். மேகநீர்,

அதி பித்தம், பாண்டு போகும். மனச்சோர்வு நீங்கும். நல்லறிவு ஏற்படும். சுக்கிலம் மிகுதியாகும். போக சுகம் உண்டாகும்.

*

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ரத்தினமும் ஒரு கிரகத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. நற்பலனை அதிகரிக்கவும் தோஷங்கள் நீங்கவும் இந்த ரத்தினக் கற்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.  அதே போல நியூமராலஜி எனப்படும் எண்கணித சாஸ்திரத்தின் படியும் ஒவ்வொரு எண்ணுடனும் ஒரு கிரகம் தொடர்பு படுத்தப்படுகிறது. விவரப் பட்டியல் இதோ :-

ரத்தினம்           உரிய கிரகம்    உரிய எண்  உரிய ராசி

மாணிக்கம்          சூரியன்          1        சிம்மம்

முத்து              சந்திரன்          2        கடகம்

பவளம்             செவ்வாய்        9    மேஷம், விருச்சிகம்

மரகதம்           புதன்               5    மிதுனம், கன்னி

புஷ்பராகம்        வியாழன்           3    தனுர், மீனம்

வைரம்           சுக்கிரன்            6    ரிஷபம், துலாம்

இந்திரநீலம்       சனி                8    மகரம், கும்பம்

கோமேதகம்       ராகு               4     கன்னி

வைடூரியம்       கேது               7      விருச்சிகம்

முன்னோர்கள் காலம் காலமாகச் சோதித்து இப்படி, பரிந்துரைக்கும் நவரத்தின வகைகளை தோஷம் இல்லாமல் பார்த்து வாங்கி அணிவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது. வெடிப்பு, கொப்புளம், கீறல், ஒளி மங்கி இருத்தல், கரடு முரடாக இருப்பது, இயற்கையில் கிடைக்காமல் சிந்தடிக்காகச் செய்து ரத்தினங்களின் பெயரை அவற்றிற்குச் சூட்டல் ஆகியவை இல்லாமல் நல்ல அசல் ரத்தினக் கல்லே உரிய நல்ல பலனைத் தரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாழ்க வளமுடன்!

tags– நோய், நவரத்தினம்

***

Leave a comment

Leave a comment