மலை அளவு பாவங்கள் போக வழி உண்டா? (Post No.8899)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8899

Date uploaded in London – – 7 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மந்திர மலை போன்ற அளவு பாவங்கள் போக வழி உண்டா?

ச.நாகராஜன்

பூவுலகில் மனித ஜென்மம் எடுத்தவர்கள் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ பாவத்தைச் செய்கின்றனர்.

சிலரோ தெரிந்தே பாவத்தின் உருவாய் அனைத்து பாவங்களையும் ஆரவாரத்துடன் செய்கின்றனர்.

இப்படி மந்திர மலை போன்ற அளவு பாவங்களைச் செய்து விட்டு வருந்துவோருக்கு அந்தப் பாவங்கள் போக வழி உண்டா?

உண்டு என்றால் என்ன வழி?

இப்படிப்பட்ட விஷயங்களைச் சரியான முறையில் ஆய்ந்து வழியைச் சொல்பவர்கள் இறைவனின் அருளுக்கு நேரடியாகப் பாத்திரமானவர்களாகவே தான் இருக்க வேண்டும்.

இந்த வகையில் முருகனின் அவதாரமான திருஞானசம்பந்தர் அன்னையிடம் ஞானப்பாலை உண்டவர்.

தோடுடைய செவியன் என்று தான் கண்ட காட்சியைக் கூறியவர்.

அவர் இரு பதிகங்களைப் பாவங்கள் போக்கும் வழியாகக் கூறி அருளுகிறார்.

இந்த இரு திருப்பதிகங்களும் மூன்றாம் திருமுறையில் அமைந்தவை.

ஒன்று பஞ்சாக்கரத் திருப்பதிகம்.

இன்னொன்று நமச்சிவாயத் திருப்பதிகம்.

பஞ்சாக்கரத் திருப்பதிகத்தில் அஞ்செழுத்து என்று மட்டும் சொல்லி இருப்பதால் இது பஞ்சாக்கரத் திருப்பதிகம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

நாதன் நாமம் நமச்சிவாயவே என்று வெளிப்படையாக நமசிவாய நாமம் சொல்லப்பட்டிருப்பதால் இந்தப் பதிகத்தின் பெயர் நமச்சிவாயத் திருப்பதிகம் ஆயிற்று.

நமசிவாய நாமத்தை எப்படி ஓத வேண்டும்?

காதல் ஆகிக் கசிந்து கண்ணீ ர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே

என்று நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடல் அமைகிறது.

காதலாகி கசிந்து உள்ள ஈடுபாட்டுட்ன் கண்ணீர் மல்கி உருகிச் சொல்ல வேண்டும் நமசிவாய நாமத்தை.

அப்படிச் சொன்னால் வரும் பெரும் பேறுகள் ஏராளம்.

அவற்றில் ஒன்றை இந்தப் பதிகத்தின் ஆறாம் பாடல் அறிவிக்கிறது.

மந்தரம் அன பாவங்கள் மேவிய

பந்தனையவர் தாமும் பகர்வரேல்

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்

நந்தி நாமம் நமச்சிவாயவே

மந்திரமலை போன்ற அளவு பாவங்கள் செய்தவர்கள் என்றாலும் அவர்கள் நமச்சிவாய நாமத்தை உச்சரிப்பார்கள் என்றால் அவர்கள் பாவங்கள் அனைத்தும் போகும்; செல்வமும் பெருகும்.

மந்திர மலை என்பது பாற்கடல் கடைந்த மலை ஆகும்.

அது மட்டுமல்ல,

நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும்

உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்

விரவியே புகுவித்திடும் என்பரால்

வரதன் நாமம் நமச்சிவாயவே  (பாடல் எண் 7)

ஏழு நரகங்களும் புக வேண்டிய செயல்களைச் செய்தவர்கள் என்றாலும் கூட அவர்கள் ஒருமுறை திருவைந்தெழுத்தை ஓதுவார் ஆகில் அந்த நாமமானது அவர்களை உருத்திர கணத்தவருள் கலந்து புகச் செய்யும். கேட்டது அனைத்தையும் தருபவன் ஆதலால் அவன் வரம் அருளும் வரதன்.

பஞ்சாக்கரத் திருப்பதிகத்தில் முதல் பாடல் நமச்சிவாயத்தைக் கூறுவோரை மாய்க்க வரும் எமனும் அஞ்சுமாறு உதைத்த வல்லமை உடையவை அவனது நாமம் என்பதைத் தெளிவாக்குகிறது.

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்

நெஞ்சு அகம் நைந்து நினைமின் நாள்தொறும்

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று

அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே (பஞ்சாக்கரத் திருப்பதிகம், பாடல் 1)

மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க வந்த காலனை காலால் உதைத்த பிரானின் திருநாமமான அஞ்சு எழுத்தும் அவனை அஞ்ச உதைத்தன!

கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து

அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே (பஞ்சாக்கரத் திருப்பதிகம், பாடல் 4)

நல்லான் என்பது சிவபெருமானுக்கு ஒரு பெயர் ஆகும்.

கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்

இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்

எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பதால்

நல்லார் நாமம் நமச்சிவாயவே (நமச்சிவாயத் திருப்பதிகம் பாடல் 5)

கொல்வார்கள் என்றாலும், குணமே இல்லாதவர்கள் என்றாலும் நமச்சிவாய எனச் சொன்னால் அவர் தம் தீங்கு நீங்கப் பெறும் என்பது இந்தப் பாடலால் உறுதியாகிறது.

இரு பதிகங்களிலும் மொத்தம் 22 பாடல்கள் உள்ளன.

இவற்றைக் கற்றுத் தேர்பவர் – அஞ்செழுத்து உற்றன வல்லவர் – உம்பர் ஆவரே!

வானவர் ஆகும் ரகசியத்தை உரைக்கும் பதிகங்கள் இவை.

உய்வதற்கு எளிய வழியைச் சுட்டிக் காட்டும் பதிகங்கள் இவை.

மந்திர மலை போன்ற பாவங்கள் செய்திருந்தாலும் அவற்றைப் பொடிப் பொடியாக்கும் வல்லமை படைத்த பதிகங்கள் இவை.

ஆகவே ஓதுவோம் நாளும் நமச்சிவாய நாமம்!

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

tags –பாவங்கள் போக வழி

***

Leave a comment

Leave a comment