பாரதியாரின் ராகங்கள்! – 3 (POST No.9047)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9047

Date uploaded in London – – 18 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

டிசம்பர் 11. பாரதியாரின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புக் குறுந்தொடர் இது!

பாரதியாரின் ராகங்கள்! – 3

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் வேதாந்தப் பாடல்கள் அரிய பெரிய உண்மைகளை மிகத் தெளிவாக இனிய சொற்களால தருபவை.

அவற்றிற்கு அவர் அமைத்த இசையைக் காண்போம்.

  1. மாயையைப் பழித்தல் – உண்மை யறிந்தவருன்னை

ராகம் – காம்போதி        தாளம் – ஆதி

  • அச்சமில்லை – பண்டாரப் பாட்டு
  • ஜீவன் முக்தி – ஜயமுண்டு பயமில்லை மனமே

ராகம் – கமாஸ்    தாளம் – ஆதி

  • நந்தலாலா – காக்கைச் சிறகினிலே

ராகம் – யதுகுல காம்போதி தாளம் – ஆதி

  • விடுதலை – வேண்டுமடி எப்போதும் விடுதல்

ராகம் – நாட்டை

குயில் பாட்டு

குயில் பாட்டில் இசையின் மகிமை பற்றி ஏராளமாகச் சொல்கிறார் பாரதியார்.

இதைப் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டு விட்டோம்.

ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ என்கிறார் மஹாகவி.

“கானப் பறவை கலகலவெனும் ஓசையிலும்

காற்று மரங்களிடைக் காட்டு மிசைகளிலும்

ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்

நீலப் பெருங்கல் எந்நேரமுமே தான் இசைக்கும்

ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்

மானுடப் பெண்கள் வளரும் ஒரு காதலினால்

ஊன் உருகப் பாடுவதில் ஊறிடுந் தேன் வாரியிலும்

ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்

சுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும்

பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்

வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாம் ஒலிக்கக்

கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டமுதப் பாட்டினிலும்

வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்

வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி

நாட்டினிலும் காட்டினிலும் நாள் எல்லாம் நன்றொலிக்கும்

பாட்டினிலும் நெஞ்சைப் பறி கொடுத்தேன்.”  என இப்படி அடுக்கடுக்காக பதினோரு வகைப் பாடல்களைக் குயில் பாட்டில் சுட்டிக் காட்டுகிறார்.

காதல் காதல் காதல்

இந்தப் பாடலுக்கு பாரதியார் தரும் குறிப்பு இது:-

ராகம் – சங்கராபரணம் ஏக தாளம்

ஸ்வரம் :

“ஸா – ரிமா – காரீ

        பாபாபாபா – மாமாமாமா

ரீகா – ரிகமா – மாமா

(சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க)

இதே பாடலில்,

“நாதம், நாதம், நாதம்,

நாதத்தேயோர் நலிவுண்டாயின்

சேதம், சேதம், சேதம்” என்றும்

“தாளம், தாளம், தாளம்,

தாளத்திற்கோர் தடையுண்டாயின்

கூளம், கூளம், கூளம்”     என்றும்

“பண்ணே, பண்ணே, பண்ணே,

பண்ணிற்கோர் பழுதுண்டாயின்,

மண்ணே, மண்ணே, மண்ணே.”    என்றும்

பாடி இசையமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

பாரதியாரின் சங்கீதத் திறனாய்வை அவர் எழுதியுள்ள சங்கீத விஷயம் என்ற கட்டுரையில் படித்து வியக்கலாம்.

இப்படி ஏராளமான ராகங்களைத் தன் பாடல்களுக்கு அமைத்துத் தந்த மஹாகவி ஸ்வர அமைப்பிலும் சிறந்தவர் என்பதை அவரது பல வாழ்க்கை நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.

அன்பர்கள் பாடல்களைப் படிக்கும் போதும், பாடும் போதும் அவரது இசை அமைப்பையும் மனதில் கொண்டால் பாடல்கள் இன்னும் அதிகச் சுவையுடன் தேனாகத் தித்திக்கும் என்பதில் ஐயமில்லை.

                        ***               இந்தக் குறுந்தொடர் முற்றும்

tags- ராகங்கள்! – 3,பாரதியார்

Leave a comment

Leave a comment