உலக இந்து சமய செய்தி மடல் 21-12-2020 (Post No.9064-b)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9064-b

Date uploaded in London – –22 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிசம்பர் 21- ம்  தேதி —   திங்கட் கிழமை ,2020

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

டிசம்பர் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும் டிசம்பர் 30- ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறப் போவதால் எல்லா பெருமாள் கோவில்களிலும் சிவாலயங்களிலும் முழு வீச்சில் உற்சவங்கள் துவங்கிவிட்டன. ஆயினும் வைரஸ் நோய் பரவும் அச்சம் இருப்பதால் ஆங்காங்கே பக்தர்கள் வருகை மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Xxxx

கோயில் சொத்துக்கள் இறைவனுக்கே சொந்தம் குருவாயூர் தேவசம் போர்டு வழங்கிய 10 கோடியை திருப்பி கொடுங்கள்: கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பக்தர்கள் அளிக்கும் நன்கொடை மற்றும் கோயில் சொத்துக்கள் அனைத்தும் இறைவன்  குருவாயூரப்பனுக்கு  மட்டுமே சொந்தமாகும். அதை வேறு யாருக்கும் கொடுக்க  உரிமையில்லை.

கோயில் பணத்தில் வளர்ச்சி பணிகள், பக்தர்களுக்கான  வசதிகளை மட்டுமே செய்ய வேண்டும். இதுதவிர  வேறு அமைப்புக்கோ, அரசுக்கோ  பணத்தை கொடுக்கக் கூடாது என தேவசம் போர்டு சட்டத்தில்   குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு கேரளாவில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, வெள்ள நிவாரண நிதியாக 5  கோடியும், இந்தாண்டு ெகாரோனா நிவாரண நிதியாக 5 கோடியும், முதல்வர் நிவாரண நிதியாக  குருவாயூர்  தேவசம் போர்டு வழங்கியது.

இதற்கு பாரதீய ஜனதா கட்சி உட்பட இந்து  அமைப்புகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இதை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி மாநில  செயலாளர்  நாகேஷ், இந்து ஐக்கிய வேதி பொதுச் செயலாளர் பாபு, குருவாயூர்  தேவசம் போர்டு  ஊழியர் சங்க தலைவர் மோகன் குமார் உட்பட பலர் ேகரள  உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஹரிப் பிரசாத்  தலைமையிலான அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம்  கூறிய தீர்ப்பில், ‘தேவசம் போர்டு சட்டங்களை மீறி முதல்வர்  நிவாரண நிதிக்கு  10 கோடி கொடுத்தது குற்றமாகும். பக்தர்கள் அளிக்கும் நன்கொடை மற்றும் கோயில் சொத்துக்கள் அனைத்தும் இறைவன்  குருவாயூரப்பனுக்கு  மட்டுமே சொந்தமாகும். அதை வேறு யாருக்கும் கொடுக்க  உரிமையில்லை. எனவே,  முதல்வர் நிவாரண நிதிக்கு தேவசம் போர்டு அளித்த ₹10 கோடியை அரசு உடனடியாக   திருப்பி கொடுக்க வேண்டும்,’ என  உத்தரவிட்டுள்ளது.

xxxxx

குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

புது டில்லியில் உள்ள ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவிற்கு திடீரென சென்ற பிரதமர் மோடி, அங்கு வழிபாடு நடத்தியதுடன், குரு தேஜ் பகதூருக்கு அஞ்சலி செலுத்தினார்.
குருத்வாராவிற்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை மோடி சென்றபோது, உடன் எந்த பாதுகாப்பு அதிகாரியும் அழைத்து செல்லவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்படவில்லை. சாமான்ய மக்களின் நடமாட்டத்திற்கும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பாக மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இன்று காலை, ஸ்ரீகுரு தேஜ் பகதூர்ஜி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள, வரலாற்று சிறப்பு மிக்க ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் வழிபாடு நடத்தினேன். ஆசிர்வதிக்கப்பட்டவன் போல் உணர்கிறேன். ஸ்ரீகுரு தேஜகபகதூரின் அன்பில் ஈர்க்கப்பட்ட லட்சகணக்கானோரில் நானும் ஒருவன் என தெரிவித்துள்ளார்.

குருத்வாராவில் வழிபாடு நடத்திய புகைப்படங்களையும் மோடி வெளியிட்டுள்ளார்.

பத்து சீக்கிய குருமார்களில் ஒன்பதாவது குருவான தேஜ் பகா தூரை மொகலாய மன்னன் அவுரங்கசீப் படுகொலை செய்ததை விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களில் காணலாம்.

Xxxxx

8 ஆயிரம் தேவார பாடல்களை பாடிய உடுமலை மாணவி


சிவபெருமான் மீது பாடப்பட்ட பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது. இந்த தேவாரப்பாடல்களை உடுமலையை சேர்ந்த ஆசிரிய தம்பதி பாலகிருஷ்ணன்-கண்ணம்மாள் ஆகியோரின் மகளான பிளஸ்-2 மாணவி உமாநந்தினி இனிமையான ராகத்துடன் 239 நாட்கள் பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.


இதுகுறித்து மாணவி உமாநந்தினி கூறியதாவது:-

தேவாரப்பதிகங்களில் நோய் நீக்கும் அருமருந்தாகும் பாடல்கள் பல உள்ளது. கொரோனா உலக மக்களையெல்லாம் அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில் நோய் தீர்க்கும் பதிகங்களை பாடி அது மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என்ற முயற்சியாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தேவாரப்பாடல்களை பாடத் தொடங்கினேன்.

கடந்த 1-ந் தேதியுடன் (டிசம்பர் 1) தேவாரத்தில் 795 பதிகங்களிலுள்ள 8,239 பாடல்களையும் பாடி பதிவிட்டேன். இந்த சாதனையை 239 நாட்களில் நிகழ்த்தினேன். இதனை தொடர்ந்து தற்போது 8-ம் திருமுறையான திருவாசக பாடல்களை பாடி பதிவிட தொடங்கியுள்ளேன்.

188 நாட்களில் 6,620 தேவாரப்பாடல்களை பாடிய போதே இந்திய சாதனைப் புத்தகம் (இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு) அங்கீகரித்துள்ளது. அதன்படி “இளம் வயதில் அதிகமான ஆன்மிகப் பாடல்களை பாடியவர்’ என்ற சாதனை விருதை எனக்கு வழங்கியுள்ளது. மேலும் எனது பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு மக்களால் கூட்டாக பாடப்பட்டதற்கான அங்கீகாரமும் எனது சாதனையில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு மாணவி உமாநந்தினி கூறினார்.

xxxxx


சபரிமலைக்கு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசிடம் முன்வைத்தது.

இதையடுத்து தினமும் கூடுதலாக 1,000 பக்தர்களை அனுமதிக்க கேரளா அரசு அனுமதி அளித்தது.

பக்தர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன.. இது தொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 20ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். நீதிமன்ற ஆணை கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

Xxxx

சபரிமலையில் 22-ந்தேதி தங்க அங்கி ஊர்வலம்

மண்டல பூஜை தினத்தில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். 453 பவுன் எடை கொண்ட அந்த தங்க அங்கி பத்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு மட்டும் அந்த நகைகள் அங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துவரப்படும்.

இந்த ஆண்டுக்கான தங்க அங்கி ஊர்வலம் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், 25-ந்தேதி பம்பா கணபதி கோவிலை வந்தடையும்.

அங்கு பக்தர்கள் தரிசனத்திற்காக தங்க அங்கி வைக்கப்படும். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து சன்னி தானத்திற்கு புறப்படும். மாலை 5 மணிக்கு சரங்குத் திக்கு வந்தடையும் தங்க அங்கிக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்கப்படும். பின்னர் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். சபரிமலையில் 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது 

Xxxx

மக்களின் நன்கொடை பணத்தில் ராமர் கோயில் கட்டப்படும்’

”ராமர் கோயில் கட்டுமானத்துக்கான நிதி திரட்ட நாடு முழுவதும் மிகப் பெரிய பிரசார இயக்கம் நடத்தப்படும். மக்களிடம் இருந்து திரட்டப்படும் நன்கொடையை கொண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்” என அறக்கட்டளை பொது செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை கவனிப்பதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதன் பொது செயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நாட்டு மக்களிடம் நிதி திரட்டும் மாபெரும் பிரசார இயக்க பணியினை தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நாடு முழுவதும் துவங்க உள்ளது.

இதற்காக 10, 100, 1000 ரூபாய் மதிப்பிலான ‘கூப்பன்’கள் அச்சிடப்பட்டுள்ளன.

Xxxx

3 நாள் விசா… ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு

பல்வேறு வழக்குகளில், சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார்.

கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார்.

இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாகவும், இதற்காக 3 நாட்கள் கொண்ட இலவச விசாவிற்கு விண்ணப்பித்து, ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

அந்த வீடியோவில் நித்யானந்தா மேலும் கூறியதாவது:-

கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். கைலாசாவுக்கு சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும். மூன்று நாட்களுக்குமேல் விசா கிடையாது. ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.

இவ்வாறு நித்யானந்தா கூறுகிறார்.

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன…………………………..

செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags- உலக, இந்து சமய, செய்தி மடல் 21-12-2020,

Leave a comment

Leave a comment