சீதா தேவி கூறிய கடைசிச் சொற்கள்! (Post .9074)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9074

Date uploaded in London – –25 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சீதா தேவி கூறிய கடைசிச் சொற்கள்!

ச.நாகராஜன்

ஹிந்துப் பெண்மையின் இறுதி லக்ஷியம் சீதா தேவி. கற்புக் கனலி என கம்பன் கூறிப் பெருமைப்படுவான்.

பெரிய சபை கூடியுள்ளது.அயோத்தி மாநகர மக்கள் அனைவரும் அங்கு திரண்டிருந்தனர்.

வால்மீகி முனிவர் ஜனக்கூட்டத்தின் நடுவில் நேர்முகமாய் வந்து நின்று ரகுகுல திலகமான ஸ்ரீ ராமரைப் பார்த்துக் கூறுகிறார்:

“ ஹே, தாஸரதே! இதோ இருக்கும் சீதா தேவி மஹா விசேஷ உபாசனையில்  மனதை நாட்டியவள் (ஸுவ்ரதா). தருமத்தையே அனுஷ்டிப்பவள் (தர்மசாரிணி). எனது ஆசிரமத்திற்கு அருகில் பழிச் சொற்களால் அபவாதம் செய்யப்பட்டு கொண்டு விடப்பட்டாள்.

இதோ இங்கு இருக்கும் லவனும் குசனும் ஜானகியாரின் புத்திரர்கள். இரட்டையாய் பிறந்தவர்கள். உங்களது குமாரர்கள். உங்களால் புறக்கணித்துத் துறக்க முடியாதவர்கள். தேவரீருக்கு இதை நான் பிரமாணமாக சத்தியமாகக் கூறுகிறேன். (தே ஏதத் ஸத்யம் ப்ரவீமி).

ஹே! ராகவா!! நான் வருண பகவானின் பத்தாவது புதல்வன். பொய்மொழியை நான் எண்ணியும் பார்க்காதவன் ( ந ஸ்மராமயன்ருதம் வாக்யம்).

பல்லாயிரம் ஆண்டுகள் என்னால் தவ அனுஷ்டானம் குறைவின்றி முடிக்கப்பட்டிருக்கிறது. மைதிலி தேவியானவள் தோஷத்திற்கு இடமாகாவதளாக இருந்தால் அவற்றின் பயனை நான் பெறுவேன். மனதை ஆறாவதாக உடைய ஐந்து புலன்களாலும் பரிசுத்தமானவள் என்பதை நன்கு ஆராய்ந்து உணர்ந்து ஆசிரமத்தின் பக்கத்தில் இருந்த ஆற்றங்கரையில் இவளைக் கண்டு அழைத்துச் சென்றேன்.

இவள், இவளைப் போல கற்புடையவள் வேறொருத்தி இல்லாதவள்;(இயம் சுத்தசமாசாரா). கணவனையே தெய்வமாகக் கொண்டவள் (பதிதேவதா). அழுக்கில்லாத ஒப்பற்ற ஒழுக்கம் உடையவள் (அபாபா).

உலகப் பேச்சால் கவலைப்படும் உங்களுக்கு இவள் தன்னை யாரென்று இதோ அருளிச் செய்வாள்!

அவ்வளவு தான். ஜனக்கூட்டம் முழுவதும் ஹாஹாகாரம் செய்து சீதாதேவியைப் பார்த்தது.

ராமர் வால்மீகியைப் பார்த்து, “ தங்களது களங்கமற்ற வார்த்தைகளால் எனக்கு இப்போதே நம்பிக்கை உண்டாகி விட்டது. இதோ இரட்டையராக உள்ள லவனும் குசனும் என் புத்திரர்களே என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.”

ராமரின் முன் பிரம்ம தேவர் வந்தார். அவருடன் ஆதித்யர்கள், வசுக்கள், ருத்திரர்கள், மருத் கணங்கள், அஸ்வினி தேவர்கள், கந்தர்வர்கள், அப்ரஸுகள், ஸாத்திய தேவர்கள், விஸ்வ தேவர்கள், தேவரிஷிகள், நாகர்கள், ஸுபர்ணர்கள், சித்தர்கள் அனைவரும் நெஞ்சு படபடக்க நடுங்கியவாறே நடக்கப் போவதைப் பார்க்க அங்கே குழுமினர்.

வாயு தேவன் பரிசுத்தமான வாசனை உடைய காற்றை அந்த ஜனக்கூட்டத்தின் மீது வீசினான்.

அப்போது காஷாய சேலையை உடுத்திக் கொண்டு தலை குனிந்து தரையைப் பார்த்தவாறே இருந்த ஸீதா தேவியார் ஸபையில் இருப்பதால் அனைவரையும் அஞ்சலி ஹஸ்தராக கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.

பிறகு உலகம் எந்தக் காலத்திலும் நினைத்துப் போற்றி வணங்கும் கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கூறி அருளினாள்:

யயாஹம் ராகவாதன்யம் ந சிந்தயே|

ததா மே மாதவி தேவி விவரம் தாதுமர்ஹதி ||

நான் மனச்சாட்சியுடன் ஸ்ரீ ராகவர் ஒருவரைத் தவிர வேறு ஒருவருக்கும் சிந்தையில் இடம் கொடாதிருந்தேன் என்பது ஸத்தியமானால் மாதவருக்கு பத்னியான பூமாதேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்!

மனஸா கர்மணா வாசா யயா ராமம் சமர்சயே|

ததா மே மாதவி தேவி விவரம் தாதுமர்ஹதி ||

மனதாலும், செய்கையாலும், வாக்காலும் ஸ்ரீ ராமரையே நான் எப்போதும் பூஜித்து வந்தேன் என்பது ஸத்தியமானால் மாதவருக்குப் பத்னியான பூமா தேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்!

யதைதத்ஸத்யமுக்தம் மே வேந்தி ராமாத்பரம் ந ச |

ததா மே மாதவி தேவி  விவரம் தாதுமர்ஹதி ||

ஸ்ரீ ராமரைக் காட்டிலும்  மேலானது ஒன்றையும் நான் அறிந்திலேன்

என்ற இந்த எனது மொழி சத்தியம் என்னும் பக்ஷத்தில் மாதவருக்குப் பத்னியான பூமா தேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்!

அவ்வளவுதான்!

ஒப்பில்லாத ஒரு தேவாதீனமான சம்பவம் நடந்தது. அனைவரும் திகைப்புடனும், ஆச்சரியத்துடனும், பிரமிப்புடனும் அதைப் பார்த்தனர்.

 அமிதமான ஆற்றல் உள்ளதாகவும் திவ்ய ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட முடிகளால் நாகங்களால் ஜோதி மயமான காட்சியால் கண்களைக் கவரும் வண்ணமாய் தாங்கப் பெற்றதும், ஒப்புயர்வு இல்லாததும் தேவதைகளுக்கே ஏற்றதுமாகிய சிங்காசனம் ஒன்று பூமியிலிருந்து சீதைக்கென வெளி வந்தது!

பூமிதேவியானவள் மைதிலியை தன் இரு கரங்களாலும் அணைத்து எடுத்துக் கொண்டு நல் மனதுடன் ஆதரித்து அழைத்து, போற்றிப் புகழ்ந்து சீதா பிராட்டியாரை அந்த சிங்காதனத்தில் அமர வைத்தாள்.

சிங்காசனம்  பூமிக்குள் பிரவேசித்தது.

வானத்திலிருந்து ஓயாமல் பூ மாரி பொழிந்த வண்ணம் இருந்தது.

அங்கு கூடியிருந்த அனைவரும் “ ஹே! சீதே!! தேவரீருடைய சீலம் வேறு யாருக்கு உண்டு? பதிவிரதா மஹிமையை வெளிப்படுத்தினீர்! நன்று, நன்று!“ என்று ஒரே சமயத்தில் கூறினர்.

பூமி தேவி சீதாபிராட்டியாரை அழைத்துச் செல்வதைப் பார்த்து விண்ணவர்கள் உள்ளம் பூரித்து பலவாறான மொழிகளைக் கூறியவண்ணம் இருந்தனர்.

ஒரு முகூர்த்த காலம் உலகம் முழுவதும் ஏக்கம் பிடித்துக் கிடந்தது.

ஸ்ரீ ராமர் கண்ணீர் விட்டார்!

**

உத்தரகாண்டம் 96, 97 ஸர்க்கங்களில் மேற்கண்ட நிகழ்ச்சியை உள்ளம் உருக்கும் வார்த்தைகளால் வால்மீகி விவரிக்கிறார்!

ஜெய் சீதா ராம்!

tags – சீதா தேவி , கடைசிச் சொற்கள், பூமா தேவி

Leave a comment

Leave a comment