
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9944
Date uploaded in London – 7 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! – 2
மதுரையில் அரசரடி அதிஷ்டானம்
ஸ்வாமிகளை பலகாலம் ஆஸ்ரயித்து வந்த மிராசுதார் கன்கசபாபதி செட்டியார் ஆனையூரில் உள்ள தன் மனையில் அடக்கம் செய்ய விரும்பினார். சௌராஷ்டிர பக்தர்களோ திருப்பரங்குன்றம் ரோடில் தற்போது விவேகானந்த ம்டம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர்.மற்றொரு சாரார் சின்னமணி ஐயர் என்பவரால் யதிகள் சமாதிக்காக விடப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர். இறுதியில் அனுமார் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் வந்த இடம் சின்னமணி ஐயரின் இடம். அது அரசரடியில் காளவாசல் சந்திப்பில் உள்ளது.
இன்றும் ஸ்வாமிகளின் அரசரடி அதிஷ்டானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அருள் பெற்று வருகின்றனர்.
அவர் சமாதியின் உள்ளே இருக்கிறார, அடுத்து வெளிக் கிளம்பி எங்கேனும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாரா? யார் சொல்ல முடியும் அதை?!
முந்தைய சமாதிகளை ஊர்ஜிதம் செய்த சம்பவங்கள்
ஸ்வாமிகள் மதுரையில் தங்கியிருந்த வீடு ஒன்றில் த்ரிலிங்க ஸ்வாமிகள் படம் மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட குழந்தையானந்த ஸ்வாமிகள், “அடே, என்னுடைய அந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? இங்கே தான் நம்மைக் குழந்தையாக்கி விட்டார்கள்’ என்று கூறினார். இதனால் அவரே த்ரிலிங்க ஸ்வாமிகள் என்பது அவர் வாயாலேயே நிரூபணம் ஆயிற்று.
தன்னிடம் இருந்த 300 பவுனை வைத்து ஸ்ரீசக்ரம் செய்ய தென்காசி சென்றார் குழந்தையானந்த ஸ்வாமிகள். அவரது பக்தரான சங்கரன் பிள்ளை வீட்டுக்கு சென்ற ஸ்வாமிகள் திடீரென்று உள்ளே சென்று அங்கிருந்த சமாதியில் அமர்ந்து விட்டார். என்னதான் பக்தராக இருந்தாலும் தன் முன்னோர் சமாதியில், பரம்பரையாக பூஜித்து வரும் இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட சங்கரன் பிள்ளைக்கு ச்மாதானமாயில்லை. கேட்கவோ துணிவில்லை.
குழந்தையானந்தர் அவர்கள் உள்ளத்திலிருப்பதை அறிந்து கொண்டு, “என் இடத்தில் உட்கார யாரையடா கேட்கணும்” என்றார்.
பின்னர் சங்கரன் பிள்ளையின் வமிசத்தின் பலதலைமுறையினரின் விருத்தாந்தங்களை விளக்கினார். எல்லோரும் பிரமித்து வியந்து அவரைத் தொழுது வணங்கினர்.
ஆக த்ரிலிங்க ஸ்வாமிகள் மற்றும் நெல்லையப்பர் சமாதி தன்னுடையவையே என்பதை ஸ்வாமிகளே அருளிக் கூறியிருப்பதால் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
ஸ்வாமிகள் வாழ்வில் ஏராளமான அருள் திருவிளையாடல்கள் அவரால் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஒரே ஒரு சுவையான சம்பவத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.
ஸ்வாமிகள் ஒரு சமயம் வட நாட்டில் சிறிது காலம் இருந்தார். அவர் காசியில் இருந்த சமயம் காசி சப் கலெக்டராக பிராம்லி துரை என்பவர் இருந்தார்.
ஒரு நாள் தன் மனைவியுடன் பிராம்லி துரை உல்லாசமாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது குழந்தையானந்தர் அவதூத கோலத்தில் ஆடை எதுவுமின்றி அங்கே நடந்து சென்று கொண்டிருந்தர். இதைக் கண்ட துரைக்குக் கடும் கோபம் வந்து விட்டது. தன் சவுக்கால் அவர் ஸ்வாமிகளை அடித்தார். ஆனால் அவர் அடித்த அடி ஸ்வாமிகள் மீது விழவில்லை. மாறாக அவரது மனைவி மீது விழுந்தது. அவள் அலறினாள். துரைக்கு கோபம் இன்னும் அதிகமானது. ‘ஏதோ ஒரு மாயவேலைக்காரன் இவன்’ என்று எண்ணிய பிராம்லி துரை தன் சேவகர்களை அழைத்து ஸ்வாமிகளை தன் வீட்டுக்கு இழுத்துச் செல்லுமாரு ஆணையிட்டார்.
வீட்டிற்குச் சென்ற துரை அங்கிருந்த அனைவர் உடலில் இருந்தும் சவுக்கடி பட்டதால் ரத்தம் கசிவதைக் கண்டார். அவரது கோபம் உச்சமாகி, “இந்த மாயாவியை இருட்டறையில் அடையுங்கள்” என்று உத்தரவிட்டார்.
இருட்டறையில் ஸ்வாமிகள் அடைக்கப்பட்டார். பத்திரமாக அவரைப் பூட்டி விட்டு சாவியைத் தானே எடுத்துக் கொண்டு டாக்-கார்ட்டில் பயணமானார் பிராம்லி.
என்ன ஆச்சரியம்! துரையாலேயே பூட்டப்பட்ட ஸ்வாமிகள் அவருக்கு முன்னால் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். துரைக்கு இப்போது கோபம் போய் பயம் வந்து விட்டது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தார்.
அவர்கள் ஸ்வாமிகளின் மஹிமையைக் கூறி, “அவர் மஹா பெரியவர். நீங்கள் செய்தது பெரிய அபசாரம். அவரிடமே மன்னிப்புக் கேட்பது தான் இதற்கான ஒரே பிராயசித்தம் “ என்றனர். பிராம்லி துரை ஸ்வாமிகளை வணங்கி, தான் அறியாமல் செய்த பிழையை மன்னிக்குமாறு வேண்டினார். ஸ்வாமிகள் கருணையுடன் அவருக்கு அனுக்ரஹித்தார்.
தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக நிஜமாக தனது அஞ்ஞானம் நீங்கிய அந்த தினத்தை நினைவு கூரும் விதமாக, ஆண்டு தோறும் ஸ்வாமிகளுக்கு ஆராதனை நடத்த அவர் ஒரு கட்டளையைக் காசியில் ஏற்படுத்தினார். இன்றும் அந்தக் குறிப்பிட்ட தினத்தில் அவரது கட்டளை தொடர்கிறது.
ஏராளமான அதிசய சம்பவங்களில் இன்னுமொரு சம்பவம் இது: 1920ஆம் வருட வாக்கில் மதுரை ஸ்டேஷனில் கல்யாணராமய்யர் என்பவர் ஸ்டேஷன்மாஸ்டராக இருந்தார். ஒரு நாள் ஸ்வாமிகள் சென்னைக்குப் புறப்படவிருந்த மெயிலில் முதல் வகுப்பில் ஏறி உட்கார்ந்தார். அது ஒரு வெள்ளைக்கார துரைக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. துரை வந்து தனது இடத்தை விட்டே ஆகவேண்டும் என்று கோபமாகப் பேச, ஸ்டேஷன் மாஸ்டர் வந்து ஸ்வாமிகளைக் கீழே இறக்கி விட்டார். ரயில் கிளம்பும் நேரம் வந்தது. டிரைவர் எஞ்ஜினை இயக்கினார். அது நகரவில்லை. எவ்வளவோ முயன்றும் அது நகரவில்லை என்பதால் காரணம் என்ன என்று ஆலோசிக்கத் துவங்கவே உடனடியாக அனைவரும் ஸ்வாமிகள் கிழே அமர்ந்திருப்பதால் தான் ரயில் நகரவில்லை என்று கூறினர். ஸ்டேஷன்மாஸ்டர் ஓடோடிவந்து ஸ்வாமிகளிடம் மன்னிப்புக் கேட்டு அவரை துரை இருந்த இடத்தில் அமர்த்தி அவருக்கு வேறு சீட் கொடுத்தார். ரயில் நகர்ந்தது. அதிலிருந்து ஸ்டேஷன் மாஸ்டர் அவரது பரமபக்தராகி விட்டார் என்பதைச் சொல்லவும் தேவையில்லை.
ஸ்வாமிகள் நூற்றுக் கணக்கில் ஆன்மீக ரகசியங்களை அவ்வப்பொழுது குழும் இருக்கும் பக்தர்களிடம் சொல்வதுண்டு. அவற்றில் மாதிரிக்காக ஒன்றே ஒன்றை இங்கே காண்போம். லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லும் போது ஆற்றிற்கு கரை கட்டுவது போல ஒவ்வொரு நாமாவிற்கும் முன்பும் பின்பும் ஓம் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்று பாகீரதி அம்மாள் என்ற ஒரு சிஷ்யைக்கு ஸ்வாமிகள் உபதேசித்தருளினார்.இதுவே சஹஸ்ரநாமம் சொல்லும் சரியான வழி என்பது அனைவருக்கும் புரிந்தது!
ஸ்வாமிகளின் சிஷ்யர் ஸ்ரீ ராமலிங்க ஐயரை நானும் எனது குடும்பத்தினரும் பார்த்துள்ளோம். ஏதேனும் ஒரு பிரச்சினையை பக்தர் கூறினால், அவர் கையில் பிரச்சினைக்குத் தீர்வாக பெரிய எழுத்தில் பதில் வரும். இது ஸ்வாமிகளின் அனுக்ரஹமே என்று அவர் கூறுவார்.
இப்போதும் மதுரை அரசரடி அதிஷ்டானத்தில் அவரை வணங்கி அருள் பெறலாம்! அதிஷ்டானத்தில் அவரது சமாதியில் ஸ்ரீசக்ரம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம். ஆனந்தமானந்தகரம், ப்ரஸன்னம், ஞானஸ்வரூபம், நிஜபோத யுக்தம், யோகீந்த்ரமீட்யம், பவரோகவேத்யம், ஸ்ரீமத் குரும் நித்யமஹம் பஜாமி! ஸ்ரீமத்குழந்தையானந்தர் பாதகமலம் போற்றி!
******

(இந்தக் கட்டுரை எங்கள் குடும்ப நண்பரும் பிரபல பத்திரிகையாளருமான திரு கே.எஸ்.வி. ரமணி அவர்களால் ஆராய்ந்து எழுதி ஜூன் 1965ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்ரீ குழந்தையானந்த மஹாஸ்வாமிகள் திவ்ய சரிதம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது – கட்டுரையாளர்) நன்றி, வணக்கம்!
***
tags குழந்தையானந்த ஸ்வாமிகள்-2