
Post No. 10,059
Date uploaded in London – 5 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை செப்டம்பர் ஐந்தாம் தேதி 2021
ஆம் ஆண்டு
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் லண்டன் சுவாமிநாதன்

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது லண்டன் சுவாமிநாதன்
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மந்திரி முருகன் ஆசி
மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.
காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமி மணி மண்டபத்தில், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகிறார். மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், சுவாமியை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்
அப்போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ”ராமேஸ்வரம் முதல் காசி வரை, காஞ்சிபுரம் வழியாக ரயில் சேவை துவக்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார். இது குறித்த மனு, மடத்தின் சார்பில் அமைச்சரிடம் அளிக்கப்பட்டது.

XXXXXXXXXXXX
விநாயகர் சதுர்த்தி பேரணி நடத்தவே கூடாது என்பதை ஏற்க முடியாது:
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும், பேரணி நடத்தவே கூடாது என்பதை பாரதீய ஜனதாக் கட்சி, ஏற்றுக்கொள்ளாது என்றும் தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களிடம் விட்டு விடுங்கள். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி விழாவை சிறப்பாக நடத்திக் காட்டுவார்கள். காலம் காலமாக விநாயகர் சதுர்த்தி நம்முடைய வாழ்க்கை முறையில் கலந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. டாஸ்மாக்கைத் திறந்து அதிகமான மக்களை விடுகிறோம். இந்த நிலையில் எதற்காக விநாயகர் சதுர்த்தி பேரணியைத் தடை செய்ய வேண்டும். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பா.ஜ., ஏற்றுக் கொள்ளாது.. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

XXXX
கொரோனா தொற்று பரவலை காரணமாக வைத்து, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில், விநாயகர் சிலைகளை நிறுவவும், அவற்றை கடலில் கரைக்கவும் தடை மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதற்கு, ஹிந்து மத தலைவர்கள் மற்றும் ஆன்மிக பெரியவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* காடேஸ்வர சுப்பிமணியன், தலைவர் – ஹிந்து முன்னணி:
ஹிந்துக்களும் ஓட்டு போட்டுத் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கிறது என்பதை மொத்தமாக மறந்து விட்டு, அரசு செயல்படுகிறது. அரசு விழாக்கள் என்ற பெயரில், தினமும் ஆயிரக்கணக்கில் கூட்டி வைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் நடத்தும்போது வராத கொரோனா, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டால் மட்டும் பரவி விடுமா?
‘ஹிந்து கலாசாரத்தை தி.மு.க., கெடுக்கிறது‘
சென்னை : ‘மதுக் கடைகள், பஸ், பள்ளிகள், தியேட்டர்கள் திறக்கப்படும் போது, விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன்’ என நடிகையும், பா.ஜ., பிரமுகருமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: விநாயகர் சதுர்த்தி, உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஹிந்துகளும் நம்பும் கலாசாரம், பண்பாடு, உணர்வு. அதனால் ஒற்றுமையுடன், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறோம். கோடிக்கணக்கான தமிழ் மக்களை காயப்படுத்த, தீய கொள்கையை மக்களிடம் தி.மு.க., திணிக்கிறது.
அரசின் நடவடிக்கை, விநாயகர் சிலைகளை செய்பவர்களையும், கொண்டாடும் பல கலைஞர்களையும் பாதிக்கிறது. இது, அவர்களின் வயிற்றை அடிக்கிறது . ஹிந்துக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் மனநிலையை கெடுக்க, தி.மு.க., முயல்கிறது. டாஸ்மாக் கடை, பஸ், பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் பிற பொது இடங்கள் திறக்கப்படும் போது, விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

XXXXXXXXXXXXXXXXXXX
ஒற்றுமையாக இருந்து நெருக்கடிகளை வெல்வோம் ஆர்.ஆர். கோபால்ஜி பேச்சு
தமிழக கோயில்களில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வராத, உள்துறை பணியாளர்களாக, தெய்வீக பணிகளில் ஈடுபட்டிருக்கும், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பிரபந்தம் வாசிப்பவர்கள், பரம்பரை அறங்காவலர்கள், ஸ்ரீ பாதம் தாங்கிகள், மடப்பள்ளி ஊழியர்கள், இசைக்கலைஞர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்ஆர். கோபால்ஜியின் தலைமையில்,’தெய்வீக கைங்கர்ய பேரவை’ என்ற அமைப்பின் கீழ் இணைந்துள்ளனர்.

‘தெய்வீக கைங்கர்ய பேரவை’யின் முதலாவது ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் நடந்தது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், மாநிலத் தலைவர் ஆர்
ஆர்.கோபால்ஜி தலைமை வகித்து பேசியதாவது:
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றபிறகு அறநிலையத்துறை சார்ந்த கோயில்களில் பாரம்பரியமாக கைங்கர்யம் செய்து வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள், மடப்பள்ளி சிப்பந்திகள் மற்றும் உள்துறை பணியாளர்களுக்கு அடுத்தடுத்து பல்வேறு நெருக்கடிகள் தரப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழக முதல்வர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, ‘ஹிந்து சமய வழிபாட்டு முறைகளில் தலையிடமாட்டோம்’ என்று கூறியிருந்தார். ஆனால், செயல்பாடு மாறுபாடாக இருக்கிறது., கோயில் பணியாளர்கள், தங்களுக்குள் பேதம் பார்க்காமல், ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொடர்ந்து ஏற்படும் நெருக்கடிகளையும், சவால்களையும் சந்தித்து வெற்றிபெற முடியும். வெற்றி பெறுவோம். இவ்வாறு கோபால்ஜி பேசினார்.
நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை சிவபுரம் வேதாகமபாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவாசங்கத் துணைத்தலைவர் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு விஸ்வ ஹிந்துபரிஷத் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் வரவேற்றார்..
XXXXX

‘மத சடங்குகள், கோவில் வழிபாட்டில் அரசு தலையிடுவது நல்ல அறிகுறி அல்ல‘
”மதநம்பிக்கை வழிபாடு, சடங்கு ஆகியவற்றில் தலையிடக்கூடாது என அரசியல் சாசன சட்டம் கூறினாலும், ஹிந்து மதத்தில் மட்டும் அரசுகள் தொடர்ந்து தலையிட்டு தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவது ஏன்? அது நல்ல அறிகுறி அல்ல” என மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயம் ஆகம ஆசிரியர் கார்த்திகேய சிவம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
திருக்கோயில்கள் நிர்வாகத்தில் முதன்மை அதிகாரத்தை ஆகமங்கள் அத்திருக்கோயிலின் ஆச்சார்யருக்கு வழங்கியுள்ளன.
ஹிந்து மதத்தில் நம்பிக்கையே இல்லாதவர்கள், ஹிந்து மதத்தை சீர்திருத்தவேண்டும் என்று கூறிக்கொண்டு வெளியிட்ட தங்கள் விருப்பங்களையெல்லாம், திருக்கோயில் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசுகள் வலிந்து திணிக்க ஆரம்பித்தன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மத சடங்குகளிலும், கோயில் வழிபாடுகளிலும் அரசு தலையிடுவது நல்ல அறிகுறி அல்ல. இவ்வாறு ஸ்கந்தகுரு வித்யாலயம் ஆகம ஆசிரியர் கார்த்திகேய சிவம் கூறினார்.
XXXXXXXXXXXXXXX

சுவாமி பிரபுபாதாவின் ‘நினைவாக 125 ரூபாய் நாணயம்; மோடி வெளியிட்டார்
ஹரே கிருஷ்ணா இயக்கம்’ என அழைக்கப்படும் ‘இஸ்கான் என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-வது பிறந்த தினம் செப்டம்பர் முதல் தேதி கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அவரது நினைவாக 125 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இஸ்கான் நிறுவனத்தின் பணிகள் மற்றும் சேவைகளை பாராட்டினார். இந்திய மரபுகளின் சர்வதேச விளம்பர தூதுவராக இந்த அமைப்பு செயல்படுவதாக புகழாரம் சூட்டினார்.
சுவாமி பிரபுபாதர், கிருஷ்ணரின் அசாதாரண பக்தர் மட்டுமின்றி, இந்தியாவின் பக்தராகவும் இருந்தார் எனக்கூறிய மோடி, இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது இயக்கத்தின் பங்கேற்பையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, இஸ்கான் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
XXXX
மதுராவில் இறைச்சி, மது விற்பனைக்கு தடை: முதல்வர் யோகி உத்தரவு

உத்தரப் பிரதேசத்திலுள்ள மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள தெய்வீக நகரங்களான ஏழு நகரங்களில் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட மதுரா வந்த யோகி ஆதித்யநாத், கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் ஜென்மபூமி கோயிலில் வழிபட்டார்.
பிறகு, ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் யோகி பேசியதாவது: கடந்த 2017-ம் ஆண்டில் இங்குள்ள மக்கள் கோரிக்கையை ஏற்று, பிருந்தாவன் மற்றும் மதுரா மாநகராட்சிகள் இணைக்கப்பட்டன. இதனால், இங்குள்ள 7 தெய்வீகத்தலங்கள் புனித்தலங்களாகவும் அறிவிக்கப்பட்டது. இப்போது, அந்த 7 நகரங்களிலும் இறைச்சி, மாமிசம் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது ஏற்கப்பட்டு, இந்த ஏழு நகரங்களிலும் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த இரண்டையும் விற்பனை செய்பவர்கள் மீது நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இந்த இரண்டையும் விற்பனை செய்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வேறு வருமானத்திற்கு வகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
XXXXXXXXXXXXXXX
இன்று ஆசிரியர் தினம். ஞானமயம் குழு ஆசிரியர்கள் அனைவர்க்கும் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
XXXXXXXXXXXXXXXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் லண்டன் சுவாமிநாதன்

நன்றி, வணக்கம்
Tags – உலக, இந்துசமய, செய்தி மடல்592021