WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,695
Date uploaded in London – – 27 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66 (Post No.10,695)
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66
பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்- முதல் தொகுப்பு
ச.நாகராஜன்
மஹாகவி பாரதியாரின் மிக முக்கியமான ஒரு பரிமாணத்தைத் தொட்டுக் காண்பிக்கும் இந்த நூலை எழுதியிருப்பவர் திரு இராஜ முத்திருளாண்டி.
160 பக்கங்கள் கொண்ட இந்த அருமையான நூல் பாரதியாரின் சிறுகதைகளை ஒரு சிறப்புப் பார்வை மூலம் அலசி ஆராய்கிறது. இது ஒரு பாரதியார் நினைவு நூற்றாண்டு வெளியீடு.
மஹாகவியை, ‘மஹாகவி’, ‘மஹாகவி’ என்றே அழைத்து வருவதால அவரது மகோன்னதமான சிறுகதை ஆசிரியர் என்ற பரிமாணம் இதுவரை பெரிய அளவில் சுட்டிக்காட்டப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக ஒரு பிள்ளையார் சுழி புத்தகமாக இது மலர்ந்திருக்கிறது.
முதல் தொகுப்பு என்று புத்தகத் தலைப்பிலேயே இருப்பதால் மேலும் பல நல்ல தொகுப்புகள் வரும் என நம்பலாம்.
கதாசிரியர் (மஹாகவி என்ற பேருண்மையை சற்று நேரம் மறந்து விடலாம்)
பாரதியாரைச் சற்று ஊன்றிக் கவனிப்போம்!
“தமிழ் சிறுகதையின் வரலாற்றை நேர் செய்யலாம்” என்ற முனைப்பில், “பாரதிக்கு இழைக்கப்படீருக்கும் அநீதி” யை நீக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நூலில் தமிழ் சிறுகதை வரலாற்றில் முதல் கதாசிரியராக வ.வே.சு. ஐயரை முன்னிலைப் படுத்திக் கூறுவது தவறு; அதற்கு முன்னமேயே பாரதியார் பல சிறுகதைகளை அற்புதமாக எழுதி இருக்கிறார் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார் நூலாசிரியர்.
போற்றப்பட வேண்டிய முயற்சி இது.
துளஸீ பாயி என்ற ரஜபுத்ர கன்னிகையின் சரித்திரம், புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன், கடற்கரையாண்டி, செய்கை, சும்மா, கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது, காட்டுக் கோயில்ன் கதை 7 திண்ணன் கதை, கொட்டையசாமி, வேப்ப மரம், மழை, விடுதலை முத்தம்மா கதை ஆகிய 11 கதைகளை மிகவும் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டு பிடித்து அவற்றை நம் முன் காண்பிக்கும் நூலாசிரியர் 11 கதைகளுக்கும் தோரணம் அமைத்து கதை பற்றிய ஒரு அறிமுகத்தை அற்புதமாக முதலில் தருகிறார்.
பின்னர், ‘வாங்க’ என்று அன்புடன் அழைத்து நுழைவாயிலில் நம்மை நுழைய வைக்கிறார்.
நுழைந்தால், நாம் காண்பது பாரதியாரின் அற்புதமான கதையை.
இதில் ஒரு விசேஷ அம்சம் என்னவெனில் இந்தக் கதைகள் பாட்டுடன் கூடியவை.
என்ன பாட்டு?
துளஸீ பாயி சரித்திரம் என்னும் கதையில் வரும் பாடல் இது:
‘மந்தமாருதம் வீசுறும் போதினும்
வானில் மாமதி தேசுறும் போதினும்” என்ற பாடல்.
‘மந்தமாருதத்து மயங்கினர்’ என்ற இளங்கோவடிகளின் சிலப்பதிகார அடியைச் சுட்டிக் காட்டும் இராஜ முத்திருளாண்டி, சேரன் தம்பி இசைத்த சிலம்பில் பாரதியார் எவ்வளவு பற்று கொண்டிருக்கிறார் என்பதை நிலை நாட்டுகிறார்.
அடுத்து, புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன் என்ற கதையில் நாம் அனைவரும் அறிந்த,
“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது”
என்ற பாடலைச் சுட்டிக் காட்டுகிறார்.
கடற்கரையாண்டி கதையில் அருணகிரிநாதரின் பாடல்; செய்கையில் சைவ எல்லப்ப நாவலரின் பாடல்; சும்மா கதையில் தாயுமானவரின் பாடல்; கர்த்தப ஸ்வாமி கதையில் மாணிக்க வாசகரின் திருவாசக (சிவபுராண) வரிகள், மழை கதையில் நாம் அனைவரும் அறிந்த, ‘காற்றடிக்குது கடல் குமுறுது’ பாடல் – என இப்படி பாரதியாரின் கதைகளை, ‘பாட்டிடையிட்ட கதைகளாகச்’ சுவை பட புதுப் பார்வையுடன் நம் முன்னே காட்டுகிறார் நூலாசிரியர்.
நவதந்திரக் கதைகள் பாரதியாரின் படைப்பு; இது பற்றி அவ்வளவாக நிறைய செய்திகளை யாரும் இதுவரை தந்ததில்லை; ஆனால் ஆய்வு நோக்குடன் இது பற்றிய செய்திகளை நாம் இந்த நூலில் காண்கிறோம்.
பாரதியாரின் சுவையான எளிய அருமையான நடையில் அவரது படைப்புகளைப் படிக்கும் போது ஒரு பரவசம் ஏற்படுகிறது; அந்தப் பரவசத்தை இன்னும் அதிகம் கூட்டும் வகையில் ‘இலக்கிய போதையேற்றி’ விடுகிறார் தன் தமிழ் நடையாலும், பக்குவப்பட்ட பாரதி பக்தியினாலும் இராஜ முத்திருளாண்டி.
இந்த நூல் பலவகையில் ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறது.
⦁ சிறுகதை தோற்றம் பற்றிய ஆராய்ச்சி; அதில் முன்னோடியாக பாரதியார் இலங்குகிறார் என்ற நிர்ணயம்
⦁ ரா.அ.பத்மநாபன், பெரியசாமி தூரன் உள்ளிட்ட ஆரம்ப கால பாரதி ஆய்வாளர்கள் தனது எல்லைக்குட்பட்ட ஆனால் அபாரமாக, பாரதி படைப்புகளை மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துத் தேடித் தந்த போதிலும் அதில் காலத்தினால் ஏற்பட்ட சில முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டும் திறம் (அவர்கள் மேல் கோபப் படக் கூடாது)
⦁ ஆங்காங்கே சிதறிக் கிடந்த கதைகளைத் திரட்டி, தோரணம் கட்டி நுழைவாயில் ஏற்படுத்தி அழைத்துச் செல்லும் பாங்கு
⦁ பாரதியாரின் கதைகளில் இடையிடையே வரும் பாடல்கள்; ஷேக்ஸ்பியர் உள்ளிட்டவர்களை பாரதியார் பயின்ற பாங்கு
⦁ ஏராளமான ஆய்வு நூல்களைப் படித்து, ‘கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு தள்ள வேண்டியவற்றைத் தள்ளியிருக்கும் தன்மை’
இப்படிப் பலவற்றைக் கூறலாம்.
ஆசிரியரின் நன்றி பாராட்டும் தன்மை நம்மைக் கவர்கிறது. ‘அறுபடை’ பேரக் குழந்தைகளைக் கூட மறந்து விடவில்லை என்றால் மற்றவரை மறப்பாரா என்ன! ஆறு பேருக்கும் ‘இடையறாக் கேள்விகள் கேட்டமைக்காக’ நன்றி பாராட்டுகிறார்.
நல்லவர். குழந்தைகளைக் கவர்வதில் வல்லவர். பாராட்டுகிறோம்.
‘வாங்க’ என்று தான் கட்டிய தோரணம் காட்டி, புதிய நுழைவாயில் வழியே, இவர் அடுத்து எப்போது நம்மை அழைக்கப் போகிறார் என்ற எண்ணத்தைத் தரும் இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் உடனடியாகப் படிக்க வேண்டும்.
அருமையான நூலை வெளியிட்டுள்ளோர்:
கலியாந்தூர் கர்ணம்
மு.பூ. இராஜகோபால் பிள்ளை – கதிராயி அம்மாள் நினைவு அறக்கட்டளை,
1 & 2ம் வெள்ளாளர் தெரு, பழையூர், திருப்பூவனம் – 630 311, சிவ கங்கை மாவட்டம்
மின்னஞ்சல் : rajkadirtrust@gmail.com
tags- பாரதியார் நூல்கள் – 66