வல்லின எழுத்துப் பாட்டு! (Post No.10,774)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,774

Date uploaded in London – –     24 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

வல்லின எழுத்துப் பாட்டு!

ச.நாகராஜன்

சித்திர கவியில் இனவெழுத்துப் பாட்டு என்று ஒரு வகை உண்டு.

அது மூன்று வகைப்படும்.

வல்லினம், மெல்லினம், இடையினம் – ஆக இப்படி மூன்று வகைகளில், வல்லின எழுத்துப் பாடலில் வல்லினம் மட்டுமே வர வேண்டும் என்பது விதி.

வல்லினம் என்பது க, ச, ட, த, ப, ற ஆகிய எழுத்துக்களின் இனம் ஆகும்.

எடுத்துக்காட்டிற்கு யாப்பருங்கலவிருத்தியிலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.

கற்புடைத்தாக் காட்டுதற் காகாதோ கைகாட்டிச்

சொற்படைத்துக் காட்டற்கட்டு க்கததாற் – பொறுபுடைத்தாப்

பாட்டாற்றப் பாடி பறைகொட்டக் கொட்டத்துக்

கோட்டாற்றுச் சேதிகூத்துக் கூத்து.

குறள் வகையில் அமைந்த இன்னொரு பாடல் இது:

தெறுக தெறுக தெறுபகை தெற்றாற்

பெறுக பெறுக பிறப்பு.

இப்பாடல்களில் க, ச, ட, த, ப, ற ஆகிய ஆறு வல்லின எழுத்து வகைகளை மட்டுமே காண்கிறோம்.

கம்பீரமான ஓசையையும் காண முடிகிறது.

கவி காளமேகத்திடம் ஒருவர் வந்து வல்லினப் பாட்டு ஒன்றைப் பாடுமாறு கேட்க அவர் பாடிய பாடல் இது:

துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடல்

தொடுத்த தொடைகடுக்கை பொன்போற் – பொடித்துத்

தொடிபடைத்த தோடுகுத்த தோகைகூத் தாடக்

கடி படைத்துக் காட்டிற்றுக் காடு

இதன் பொருள் :-

தடித்துத் துடித்து – மின்னல் மின்னியதால்

கோடல் துடுப்பு எடுத்த – காந்தள் துடுப்புகளை ஏந்தின (அதாவது காந்தள் மலர்கள் அரும்பின)

கடுக்கை – கொன்றைகள்

பொன் போல பொடித்து தொடை தொடுத்த – பொன் போல அரும்பி மாலையாகத் தூக்கப்பட்டன

தோடி படைத்த – தோள் துடித்த வளையலை அணிந்த தோள்கள் துடியாக நின்றன

ஆகவே,

காடு – காடானது

தோகை கூத்து ஆட – தோகை உடைய மயில்கள் நட(ன)மாட

கடி படைத்து காட்டிற்று – மணப்பந்தலின் தன்மையைப் பெற்றுக் காட்டியது.

காந்தல் துடுப்பெடுத்ததை மணப் பந்தலில் உள்ள தீபத்திற்கு உவமையாகக் கொள்ளலாம்.

கொன்றை பொன் போல அரும்பி, தொடை தொடுத்ததை, மணப்பந்தலில் நான்கு புறமும் தொங்குகின்ற பூமாலைக்கு உவமையாகக் கொள்ளலாம்.

மயில் நடனமாடுதலை பந்திலில் கன்னியர் அழகுற நடனாமடுவதற்கும் தோள் துடித்தலை மூங்கில் அசைதலுக்கும் உவமையாகக் கொள்ளலாம்.

 அருமையான பாடலைப் பாடினார் கவி காளமேகப் புலவர்.

இனி மாறனலங்காரம், வல்லினப் பாட்டு பற்றிக் கூறும் சூத்திரம் இது:

“வல்லினமுழுதுறல் வல்லினப் பாட்டே”

மாறனலங்காரம் தரும் உதாரணம் இது:

பொற்றொடி கற்சட்டதத்தைப்போக்கிப்புறத்திறுத்த

கற்புறத்தற்காட்சிக்கதிகொடுத்த – சிற்றடிப்போ

துச்சிப்பதிக்கத்தாகூற்றச்சுறுத்தாது

கச்சிப்பதிக்கத்தாகை

பாடலின் பொருள் :

திருக்கச்சிப்பதிக்கு அத்தனே!

என்னை யமன் வந்து அச்சுறுத்தாது, நீ பொன்னினால் செய்த தொடியினை உடையாள் கற்படிவத்தைப் போக்கியவளை விட்டுப் புறம் மாறி மீட்டும் அவளிடம் எய்தவும் பண்டைய சரீரத்தின் அழகு எய்தவும் கூட்டும் சாப விமோசனத்தைக் கொடுத்த சிறிய திருவடிகளாகிய தாமரைப் போதை என் சென்னியில் (தலையில்) சூடத் தருவாயாக!

அதனோடும், அஞ்சாதே என்னும் அபயமும் தருவாயாக!

அச்சமுறுத்தாது என்பது அச்சுறுத்தாது என வந்துள்ளது. (இலக்கணப்படி தொகுக்கும் வழி தொகுத்தல் என்னும் விகாரத்தால் இப்படி நின்றது)

துறை : கடவுள் வணக்கம்.

இப்படி தமிழ் என்னும் விந்தையில் உள்ள வல்லினப் பாடல்களை ஏராளமாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

**

 tags- வல்லின எழுத்துப் பாட்டு, மாறனலங்காரம், கவி,  காளமேகம்

Leave a comment

Leave a comment