ஹிந்து சாஸ்திரம் : ப்ரதிக்ஞா, ஹேது, திருஷ்டாந்தம்! (Post No.10,966)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,966

Date uploaded in London – –     11 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஹிந்து சாஸ்திரம் : ப்ரதிக்ஞா, ஹேது, திருஷ்டாந்தம்!

ச.நாகராஜன்

குருடர்கள் யானையைப் பார்த்த கதை என்ற ஒரு கதையை அனைவரும் அறிவர். குருடர்கள் தனக்குக் கிடைத்த யானையின் ஒரு பகுதியைத் தொட்டுத் தடவிப் பார்த்து முறம் என்றும் தூண் என்றும் பலவாறாக அனுமானித்தது போல ஹிந்து மத சாஸ்திரத்தையும் முற்றிலும் படிக்காமல், ஆராயாமல் தனக்குக் கிடைத்த அல்லது தனக்குத் தோன்றிய ஒரு பகுதியை மட்டும் படித்து பகுத்தறிவாளர்களும், ஹிந்துமத த்வேஷிகளும் பல கட்டுரைகளையும் ‘நடுநிலை’ உரைகளையும் எழுதி வருகின்றனர்.

இவர்களை யானையைப் பார்த்த குருடர்கள் என்றே சொல்லலாம்.

சிறுவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அனுபவஸ்தர்களான பெரியவர்கள், ‘இது இப்படி’ என்று சொல்வர்.

பின்னர் அவ்விஷயத்தில் ஒரு நிச்சயம் ஏற்படுவதற்கான அதற்கான ஹேதுவை – ஏதுவை – காண்பிப்பர். ஹேதுவைக் காட்டிய பின்னர் அதற்கான திருஷ்டாந்தத்தையும் சொல்வர்.

ஆக ஹிந்து மதம் எந்த ஒரு விஷயத்தையும் இது இப்படி என்கிற பிரதிக்ஞா, பின்னர் ஹேது, பின்னர் திருஷ்டாந்தம் ஆகிய இந்த மூன்று அடிப்படைகளில் விளக்குகிறது.

நமது ஹிந்து மதத்தில் வேதம் தான் பிரதிக்ஞை.

ஸ்மிருதி, ஸூத்ரங்கள் ஹேது.

இதிஹாஸ புராணங்கள் திருஷ்டாந்தம்.

பிரதிக்ஞா வடிவில் உள்ள வேதம் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரு பிரிவுகளாக உள்ளன.

கர்ம காண்டத்தில், “இதனைச் செய்; இதனைச் செய்யாதே” என விதிகளும் விலக்குகளும் சொல்லப்பட்டுள்ளன.

ஞான காண்டம், “இது இப்படிப்பட்டது”, “இதனை தியானிப்பாயாக”, “இதனை அறிந்து கொள்” என அறிவு பூர்வமான வாக்கியங்களைக் கொண்டுள்ளதாகும்.

இது வேதாந்தம் என்றும் பரம் பொருளை அடைய வழி வகுக்கும் உபநிஷத் என்றும் சொல்லப்படுகிறது.

வேதமானது ராஜாவின் ஆணை போல அல்லது அரசியல் சட்டம் இடும் ஆணை போல ப்ரதிக்ஞா வாக்கியமாகும்.

அரசன் மக்களை நோக்கி, “இதைச் செய்க” என ஆணையிடுகிறான். அரசன் இல்லாத இந்தக் காலத்தில் அரசியல் சாஸனம் செய்ய வேண்டுவனவற்றையும் செய்யக் கூடாதவற்றையும் சொல்லி மக்களை நல்வழிப் படுத்த உதவுகிறது. ஆனால் இந்த அரசனின் ஆக்ஞையும் அரசியல் சட்ட வழிகாட்டுதல்களும் மனிதனால் செய்யப்பட்டவை. திருத்தங்களுக்கு உட்பட்டவை.

வேதங்களோ எனில் மனிதர்களால் இயற்றப்பட்டவை அல்ல; என்றுமுள்ள நியதிகள். தெய்வீகமானவை.

வித்யாநாதர் உள்ளிட்ட ஆன்றோர் “யாதொன்று இறைக்குச் சமமாகப் ப்ரவர்த்தித்ததும் சப்தத்தைப் ப்ரதானமாகக் கொண்டதுமாகிய வேதத்தினால் அறியப்பட்டு வருகின்றதோ” என்று கூறி வேத மஹிமையைப் போற்றியுள்ளனர்.

இந்த வேதங்களில் உள்ள விஷயங்களுக்கு யுக்தி, திருஷ்டாந்தங்களை ஸ்மிருதி, சூத்ரம், இதிஹாஸம்  ஆகியவற்றைக் கொண்டே உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வேதத்தின் பூர்வ பாகமாகிய கர்ம காண்டத்தில் உள்ள ப்ரதிக்ஞைக்கு மன்வாதி ஸ்மிருதி முதலான நூல்களே ஹேது க்ரந்தங்கள் ஆகும்.

ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்கள் திருஷ்டாந்தகளாகும்.

பகவத் கீதையில் பதிமூன்றாம் அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர்,

கூறுவது இது:

ருஷிபிர்பஹுதா கிதம் சந்தோபிர்விவிதை ப்ருதக் |

ப்ரஹ்மஸூத்ரபதைஸ்சைவ ஹேதுமத்பிர் விநிஸ்சிதை ||

“ரிஷிகளால், க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞர்களின் தத்வமானது பலவிதமாகக் கூறப்பட்டுள்ளது. பலவிதமான வேத பாகங்களால் தனித்தனியாகச் சொல்லப்பட்டுள்ளது. யுக்திகளுடன் கூடியவனவாகிய நிச்சயமான ஞானத்தைத் தரக்கூடிய ப்ரஹ்ம ஸூத்ரங்களாலும் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது”. (கீதை அத் 13 ஸ்லோகம் 4)

மஹாபாரதம், பாகவதம், யோக வாஸிஷ்டம் முதலிய நூல்கள் ஞான காண்ட விஷயங்களை த்ருஷ்டாந்த வாயிலாகப் போதிக்கின்றன.

உபாஸனா காண்ட அர்த்தங்கள் சிவ ரஹஸ்யம் முதலிய நூல்களிலும் விஷ்ணு புராணம் உள்ளிட்ட நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளன.

மஹாபாரதத்தில் உள்ள பர்வங்களில் சில கர்ம காண்டத்தை விளக்குபவை; சில பர்வங்கள் ஞான காண்டத்தை விளக்குபவை.

ஆகவே தான் மஹாபாரதம் ஐந்தாம் வேதம் என அனைவராலும் போற்றப்படுகிறது.

வேதத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றை ஹேதுவாக வந்து ஸ்மரிக்கச் செய்கின்றமையால் ஸ்மிருதி என ஆயிற்று.

ஆகவே வேதம், ஸ்மிருதி, ஸூத்ரங்கள், ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் ஆகிய இவற்றையே சாஸ்திரம் எனக் கொள்ள வேண்டும்.

அத்தோடு கர்ம மற்றும் ஞான காண்டங்களை விளக்க வந்துள்ள சிக்ஷை, வியாகரணம், யோகம், ஸாங்கியம், நியாயம் முதலிய மற்ற நூல்களும் சாஸ்திரம் என்ற சொல்லால் வழங்கப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தையும் கற்றவரே ஹிந்து மதம் கூறும் உண்மைகளை முற்றிலும் அறிந்தவராவர்.

ஏதோ ஒரு நூலின் ஒரு பகுதியை மட்டும் அரைகுறையாகப் படித்து விட்டு வேத மதத்தை – என்றுமுள்ள ஸநாதன தர்மத்தை – விமரிசிக்கக் கூடாது.

அப்படி விமரிசித்தால் அது குருடன் யானையைப் பார்த்த கதையாகவே அமையும்.

இப்படி அனைத்தையும் படிக்க முடியாதவர்கள் வேத வித்துக்களையும், ஆசாரியர்களையும் அணுகி வணங்கி வேண்டிக் கேட்டுக் கொண்டு அவர்களது உபதேச உரைகள் மூலம் இவற்றை உணர முடியும்.

ஒரு நாளைக்குச் சிறிது நேரமாவது ஒதுக்கி இவற்றை முறைப்படி கற்று உணர்வோமாக!

***

Tags-  ஹிந்து சாஸ்திரம்,  ப்ரதிக்ஞா, ஹேது, திருஷ்டாந்தம்,

Leave a comment

Leave a comment