WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,015
Date uploaded in London – – 15 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
சில மனிதர்களின் அதிசய சக்திகள்! (Post No.11015)
ச.நாகராஜன்
நம்பமுடியாத சில அதிசய சக்திகளைக் கொண்டுள்ள மனிதர்கள் உண்டு.
‘புத்திஸம் ஆஃப் விஸ்டம் அண்ட் ஃபெய்த்’ என்ற நூலில் தர்மா மாஸ்டர் திக் தியன் தம் (Buddhism of Wisdom & Faith by Dharma Master Thich Thien Tam – பக் 51) தான் அறிந்த சில அதிசய மனிதர்கள் பற்றிக் கூறுகிறார் இப்படி:
தர்மா சகா ஒருவர் பற்றி நான் அறிந்தது இது. அவரது இளமைப் பருவ காலத்தில் ஒவ்வொரு சமயமும் அவர் கனவு காணும் போது, அவர் வானில் வெகு உயரத்தில் பறந்து கொண்டே இருப்பார். எங்கு வேண்டுமானாலும் அவர் பறந்து செல்வார். ஆனால் வயதாக ஆக, அவரது கனவுகளில் அவரால் உயரப் பறக்க முடியவில்லை. தாழ்வாகத் தான் பறக்க முடிந்தது.
‘கைட் டு புத்திஸம்’ (Guide to Buddhism) என்ற நூலின் பாஷ்யத்தில் ஒரு சாமானியனைப் பற்றிய செய்தி ஒன்று உண்டு. அவரது 4ஆம் அல்லது 5ஆம் வயதில் அவரால் இரவு நேரத்தில், பகல் நேரத்தில் பார்ப்பது போல எதையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வயது கூடும் போது அவருக்கு இந்தத் திறன் குறைந்து கொண்டே வந்தது. பத்து வயது முதல் அவரால் இருட்டில் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால் சில சமயங்களில் மட்டும் இரவில் சில விநாடிகள் மட்டுமே அவரால் எதையும் பார்க்க முடிந்தது. 17 வயது முதல் இந்தத் திறன் அவருக்கு இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒரு முறையே வந்தது. அதுவும் ஒரு கணம் தான் வரும். இந்த மனிதர்கள் தங்கள் முந்தைய பிறவிகளில் இப்படிப்பட்ட சக்தியை வளர்த்துக் கொண்டவர்கள்!
அவர்கள் மறு பிறவி எடுக்கும் போது மாயை வசப்பட்டு அவர்களது ஆசைகள் அதிகமாக ஆக அவர்கள் தங்களது விசேஷ திறனை இழக்கின்றனர்.
இதே போல சில மனிதர்களால் தங்களைச் சுற்றி பல காதங்கள் (ஒரு காதம் என்றால் 10 மைல்கள்) என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகக் காண முடியும். சிலருக்கோ பூமிக்கடியில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியும்! சுவர்களை ஊடுருவி என்ன இருக்கிறது என்பதை அவர்களால் சொல்ல முடியும். ஒருவரின் பாக்கெட்டில் என்ன வைத்திருக்கிறார் என்பதையும் அவர்களால் சொல்ல முடியும்.
இந்தத் திறனை அவர்கள் வளர்க்கவில்லை என்றால் அவை நாளடைவில் மங்கி மறைந்து விடும். சாமானிய மனிதரைப் போலவே அவர்களும் ஆகி விடுவர்.
சிலருக்கோ ஒரு புத்தகத்தை ஒரே ஒரு முறை படித்தால் போதும். அதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திருப்பிச் சொல்வார்கள்.
இன்னும் சிலருக்கோ கவிதையில் ஒரு விசேஷ திறன் இருக்கும். அவர்கள் எதை எழுதினாலும் அல்லது எதைப் பேசினாலும் அது கவிதையாகவே இருக்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் அவர்கள் வளர்த்துக் கொள்ளாவிடில் நாளடைவில் இந்தத் திறன் எல்லாம் மறைந்து விடும்.
இன்னும் விரிவாக இப்படி பல செய்திகளைத் தருகிறார் புத்த துறவியான திக் தியன் தம்!
இந்தச் செய்தியைப் பார்க்கும் போது ஸ்வாமி விவேகானந்தர் தான் ஒரு முறை படித்ததை அப்படியே திருப்பிச் சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது இல்லையா!
ஸ்வாமி விவேகானந்தரும் இப்படி அபூர்வ சக்தி வாய்ந்த மனிதர்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்; அவர்களைக் கண்டு பேசியும் இருக்கிறார்!
தன் திறனை மட்டும் அவர் என்றுமே சொன்னதில்லை. அதை மற்றவர்கள் கூறி இருப்பதால் நாம் அறிகிறோம்.
உலகில் அபூர்வமான திறமைகளைக் கொண்டவர்களுக்குப் பஞ்சமே இல்லை.
அவர்களைப் பார்த்து உலகம் பிரமிக்கிறது!
***
Tags- மனிதர்கள், அதிசய சக்திகள்