WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,173
Date uploaded in London – – 7 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 13
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்!
ச.நாகராஜன்
இன்றைய தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருச்செங்கோடு ஆகும்.
பழைய காலத்தில் இது திருக்கொடிமாடச் செங்குன்றனூர் என்றும் திருச்செங்கோட்டாங்குடி என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
செந்நிறத்தில் அமைந்த மலை உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சந்நிதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் இல்லாமல் 6 அடி உயரமுடன் முழுத் திருமேனியுடன் காட்சி யளித்து அருள் பாலிக்கிறார்.
பாதி வேட்டி, பாதி புடவை என அர்த்தநாரீஸ்வர விளக்கத்தின் வடிவமாக மூலவர் காட்சி அளிக்கிறார். முழு வடிவமும் வெள்ளை பாஷாணத்தால் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தைப் பற்றிய சுவைமிகு வரலாறு ஒன்று உண்டு.
ஒரு சமயம் கைலாயத்தில் சிவபிரானை வணங்குவதற்கு மஹரிஷி பிருங்கி வந்தார்.
பரமசிவத்தைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியதே என்று எண்ணிய முனிவர் பார்வதியாரை வணங்க வேண்டாம் என்று நினைத்து சிவபிரானை மட்டும் வணங்கிச் சென்றார். இன்னொரு நாள் சிவபிரானும் உமாதேவியாரும் ஓர் ஆசனத்தில் பிரிவு இல்லாமல் இறுக அணைந்து வீற்றிருத்தலைக் கண்ட முனிவர் ஒரு வண்டின் உருவத்தை எடுத்துப் பறந்து இருவரின் இடையே இருந்த இடைவெளியில் புகுந்து சிவனை மட்டும் வலம் செய்து, பறந்து சென்றார்.
தேவி சினம் கொண்டாள்.
“என்னை வழிபடாமல் அவமதித்தாய். ஆகவே உன் உடலில் உள்ள என் கூறாக உள்ள அனைத்தும் நீங்கட்டும்” எனக் கூறினாள். உடனே தேவியின் அம்சமான ஊன் முதலியன பிருங்கி முனிவரின் உடலிலிருந்து நீங்கின.
வலுவை இழந்த முனிவர் கீழே விழுந்தார்.
சிவபிரான் முனிவரை நோக்கி, “கிரணம் இன்றி சூரியன் இல்லை. சூடு இன்றி நெருப்பு இல்லை. சக்தி இன்றி சிவம் இல்லை. இந்த உண்மை காணாது மயங்கினையே” என்று கூறி அருள் பாலித்து முனிவரைத் தேற்றினார்.
உண்மையை உணர்ந்த பிருங்கி மாமுனிவர் மனம் மிக மகிழ்ந்து பார்வதி பரமேஸ்வரரை வணங்கி அருள் வேண்டினார்.
சிவம் வேறு, நாம் வேறாக இருத்தலினால் அன்றோ ஒரு முனிவன் ‘நம்மை இகழ நேர்ந்தது’ என்று எண்ணிய தேவியார் கேதாரம், காசி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை முதலிய திருத்தலங்களில் தவம் புரிந்து திருச்செங்கோட்டில் எழுந்தருளி கேதார கௌரி விரதம் இயற்றி சிவபிரானின் இடது பாகம்தனைப் பெற்றார். அர்த்தநாரீஸ்வரராகத் தோற்றமளித்தார்.
இதைத் திருச்செங்கோட்டு புராணம் இப்படி விவரிக்கிறது:
பணிமலையி லெழுந்தருளிப் பரைக்கொருபா கங்கொடுத்த பரிசின் தோற்றம்
அணிமணித்தண் டுச்சியின் மூன் றங்குலியை வளைத்தமைந்த வனப்புக் கொப்பா
மணிவரைமா துமையிடத்து வைத்தணைத்து மகரகுழை வலத்தேநாலத்
தணிவிலொளி தயங்கியதண் டரளமணித் தோடிருபா லாகித் தானே.
திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலில்,
வெந்தவெண் ணீறணிந்து விரிநூறிகழ் மார்பினல்ல
பந்தண வும்விரலா ளொருபாக மமர்ந்தருளிக்
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச்செங் குன்றூர்நின்ற
அந்தணனைத் தொழுவா ரவல மறுப்பாரே
என்று கூறி அர்த்தநாரீஸ்வரரைப் பாடிப் பரவுகிறார்.
இத்தகு பெருமை வாய்ந்த திருச்செங்கோடு கொங்குமண்டலத்தில் உள்ளதேயாம் என்று கூறி கொங்குமண்டல சதகம் புகழ்கிறது.
சதகத்தின் 13வது பாடலாக அமைந்துள்ள பாடல் இது:
நெடுவா ரிதிபுடை சூழல கத்தி னிமலியுமை
யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்
நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ
வடிவான துந்திருச் செங்கோடு சூழ்கொங்கு மண்டலமே
இதன் பொருள் : கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் உமாதேவியாரோடு சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரு வடிவாகத் திகழும் திருச்செங்கோடு மேவியது கொங்கு மண்டலமே என்பதாம்.
***
Tags- திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர்,
புத்தக அறிமுகம் – 21
சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 6
பொருளடக்கம்
அணிந்துரை
என்னுரை
1. நீரின்றி அமையாது உலகு!
2. பழையதிலிருந்து கற்போம்; உயர்வோம்!
3. பசுமைக் கட்டிடம் அமைப்போம்!
4. பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்போம்!
5. பிளாஸ்டிக் பொருள்களின் நச்சுத் தன்மை!
6. ஒவ்வொருநாளும் சுற்றுப்புறச் சூழலைக் காப்போம்!
7. அரிய உயிரின வகை வேறுபாட்டைக் காப்போம்!
8. காற்றின் தரம் பற்றிய குறியீட்டு எண்!
9. இல்லங்களில் ஆற்றல் திறனைக் கூட்ட வழிகள்!
10. மரங்களை நடுவோம்; பூமியைக் காப்போம்!
11. நீரைச் சேமிப்போம்!
12. மழை நீரைச் சேகரிப்போம்!
13. பிளாஸ்டிக்கை எதிர்த்து ஒரு போர்!
14. வாழ்க்கைமுறையை மாற்றுவோம்!
15. உத்வேகமூட்டும் இயற்கை ஆர்வலர்கள்!
16. மரங்களைப் பாதுகாப்போம்; பேப்பரைத் தவிர்ப்போம்!
17. சின்னச் சின்ன செயல்கள்; பெரிய லாபம்!
18. இமயமலை பனிப்பாறைகள் உருகும் அபாயம்!
19. உலகின் தட்பவெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்!
20. எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகம்!
21. காடுகளைப் பாதுகாப்போம்!
22. தட்ப வெப்ப மாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு!
23. சுற்றுப்புறத்தைக் காக்கும் வழிகள்!
24. உத்வேகமூட்டும் தகவல்கள்!
25. சூரிய சக்தியைப் பயன்படுத்துவோம்!
26. கழிவுப் பொருள்களைக் குறைப்போம்!
27. ‘ஸ்வச்ச பாரத்’ உருவாக்குவோம்!
28. தேனீக்கள் இல்லாத உலகில் வாழ முடியாது!
29. பறவைகள் இல்லாத உலகம்!
30. சரும வியாதிகளைத் தவிர்க்க மாசில்லா சுற்றுப்புறச் சூழல் தேவை!
31. ஒரு அவசர செய்தியை அனைவருக்கும் பரப்புவோம்!
32. பிளாஸ்டிக் அபாயம் : புவியைக் காக்க உத்வேகமூட்டும் வழிகாட்டிகள்!
33. பிளாஸ்டிக் அபாயம் : புவியைக் காக்க உத்வேகமூட்டும் புதிய வழிகள்!
34. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க நவீன் சாதனங்களின் பயன்பாடு!
35. நிலத்தடி நீரைச் சேமிப்போம்!
36. ஓசோனைக் காப்போம்!
37. ஒலிமாசால் ஏற்படும் கேடுகள்!
38. உத்வேகமூட்டும் ஆர்வலராக மாறலாமே!
39. ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை!
40. சுற்றுப்புறச் சூழலைக் காப்பதற்கு ஒவ்வொருவரும் உதவலாம்!
41. புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பெரும் அபாயம்!
*
அணிந்துரை
திரு ச.நாகராஜன் அவர்கள் எழுதியுள்ள ‘சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்’ என்ற அருமையான, பயனுள்ள நூலைப் படித்து மகிழ்ந்தேன்.
திரு ச.நாகராஜன் ஓர் சிறந்த இலக்கியவாதி. சமூக சிந்தனையாளர். பேச்சாளர். இயல், இசை, நாடகம், அறிவியல் சார்ந்த இலக்கியங்களைப் புத்தகங்களாகவும், பத்திரிகைகளில் கட்டுரைகளாகவும் எல்லோருக்கும் பயன் தரும் வகையில் அவர் பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். அகில இந்திய வானொலியில் அவருடைய சுற்றுப்புறச் சூழல் பற்றிய உரைகள் ஏராளம் இடம் பெற்றுள்ளன.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல்வேறு மேடைகளிலும் சொற்பொழிவாற்றி எண்ணற்ற தமிழ் நெஞ்சங்களின் இதயம் கவர்ந்தவர். ஆன்மீகம், இலக்கியம், ஜோதிடம், அறிவியல் போன்ற பல துறைகளில் எந்த ஒரு விஷயத்திற்கும் நம் ஐயம் தீரும் வகையில் விடையளிப்பார்.
இன்று உலகெங்கும் உள்ள நாடுகளின் தலைவர்கள் அச்சத்தோடு பார்ப்பது, சீரழிந்து, மாசுபட்டு, சிதையும் சுற்றுப்புறச் சூழல் பற்றியே.
இந்த நூலில் சுற்றுப்புறச் சூழல் பற்றி பல்வேறு கோணங்களில் தகவல்களைத் திரட்டி அலசி ஆராய்ந்து நல்ல கருத்துக்களைத் தெளிவுறத் தந்துள்ளார். 41 கட்டுரைகளில், நம் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் நீர், நிலம், காற்று, ஆகாயம் என அனைத்தும் மாசு படும் விதத்தை அருமையாக விவரித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநில ‘நௌலா’ திட்டம் பற்றிய புதுச் செய்தி வழங்குவதோடு, பசுமைக் கட்டிடம் – Green Building – பற்றி, அதன் அவசியத்தையும் விளக்குகிறார். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டிய அவசியம், நச்சு இரசாயனங்களால் ஏற்படும் கேடுகள், ஒலியால் ஏற்படும் மாசு, அரிய வகை உயிரினங்கள் அழிந்து விடும் அபாயம் பற்றி விவரித்துள்ளார். வீட்டு உபயோகப் பொருள்களை எவ்வாறு பராமரித்து சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கலாம் என்பதற்கான வழி முறைகளையும் வாழ்க்கை முறையை எவ்வாறு அதற்குத் தக மாற்றுவது என்பது பற்றியும் கூறுகிறார். தேனீக்கள் அழிந்து விட்டால் உலகமே நான்கு ஆண்டுகளில் அழிந்து விடும் என்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கூற்றை நமக்குச் சொல்லி எச்சரிக்கிறார். இன்றைய கால கட்டத்தில், அவசியம் நாம் செயல்பட வேண்டிய தருணத்தை எடுத்துரைக்கிறார்.
நீர் சேமிப்பு, மரம் வளர்த்தல், காடுகளைப் பாதுகாத்தல், வாகனங்கள் உருவாக்கும் மாசு, தட்ப வெப்ப நிலையால் ஏற்படு ஆரோக்கிய சீர் கேடு பற்றி எடுத்துரைத்து நம் சிந்தனைக்கு உரம் இடுகிறார்.
சூழலைப் பாதுகாக்க எளிய வழிகளைத் தெரிவிப்பதோடு, சூரிய சக்தியைப் பயன்படுத்தல், வன விலங்குகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை விவரித்து, நம்மையும் சுற்றுச் சூழல் ஆர்வலராக மாற்றி, சமுதாயம் பயன்படும் நபராக மாறச் சொல்வது நமக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்தப் புவியை வாழ்வதற்கேற்ற தூய்மையான ஒரு கிரகமாக எதிர் கால சந்ததியினருக்கு, நாம் விட்டுச் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தும் அற்புதமான நூல் இது.
இதனைப் படித்து, மரம் நடுதல், நீர் சேமித்தல், பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல், பிற உயிரினங்களைப் பாதுகாத்தல் போன்ற நற்செயல்களில் நாம் ஈடுபடுவோமாக.
திரு நாகராஜன் தந்துள்ள இந்த நூல் மிகவும் பயனுள்ளது.
மகத்தான அவரின் பணிக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லோரிடமும் இந்நூலை எடுத்துச் சென்று, சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கடமையாகும். மேலும் இது போல் அவர், உபயோகமான நூல்களை வெளியிட, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சென்னை – 11
24-12-2021
சந்தானம் சூரியநாராயணன் M.Sc. M.Phil
(Retd) முதல்வர், சரஸ்வதி நாராயணன் கல்லூரி, மதுரை
*
இந்த நூலுக்கு நான் அளித்த என்னுரையில் ஒரு பகுதி :
என்னுரை
அகில இந்திய வானொலி நிலையம் காலையில் ஒலிபரப்பும் ‘சுற்றுப்புறச் சூழல் சிந்தனை’ பகுதிக்கான உரைகளை கடந்த பல ஆண்டுகளாக அவ்வப்பொழுது வழங்கி வந்தேன். அதன் தொகுப்பை ஒவ்வொரு பாகமாக வெளியிட்டும் வந்தேன். இது ஆறாவது தொகுதி.
இந்த பூமியைக் காக்கும் விழிப்புணர்வைத் தொடர்ந்து ஊட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இன்றைய நிலை.
அதற்கான ஒரு சிறு முயற்சியே இந்த நூல்.
இந்த நூலுக்கு அழகிய முன்னுரை அளித்து என்னை கௌரவித்த திரு சூரியநாராயணன் அவர்களுக்கு என் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி அரும் சாதனைகளைப் படைத்துள்ளார். அத்துடன் அவர் வயலின் வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற ஒரு நிபுணர். பஞ்சமி நாளன்று பல்வேறு பிரபலமான இசைக் கலைஞர்களை இல்லத்திற்கு அழைத்து கச்சேரிகளை நடத்தி இசை வளர்த்து இசை பட வாழ்பவர். இசைக் கலை நுட்பங்களை நன்கு அறிந்த அவருக்குக் கலாநிதி பட்டம் கிடைத்ததில் வியப்பே இல்லை. பல்வேறு சேவா நிறுவனங்களில் முக்கியப் பங்காற்றி பாரம்பரியம் காக்கும் பண்பாளரான அவர் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலரும் கூட.
அவர் இந்த நூலுக்கான அணிந்துரை அளித்திருப்பது மிகவும் பொருத்தமானது.
இந்த நூலை வெளியிட முன் வந்த Pustaka Digital Media நிறுவன உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக.
பங்களூர்
24-12-2021
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**